
‘முண்டாசுப்பட்டி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராமும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்குத் தற்போது ‘மின்மினி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.டில்லிபாபு தயாரிக்கும் ‘மின்மினி’ படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ.கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ.கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில் நுட்பக்கலைஞர்களை உள்ளடக்கியுள்ளது. ‘மின்மினி’ படத்தின் தயாரிப்பில் ‘ஸ்கைலார்க் மீடியா’ ஸ்ரீதர் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
மின்மினியின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துவிட்டது. படத்தின் கதைக்கரு, மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதாம். மின்மினி தலைப்பைப் படத்தின் கதையோடு ஒரு வகையில் பொருத்திக் கொள்ளலாம் என்றாலும், பொதுவில் மின்மினி என அழகானவைகளைச் சொல்வோம். இந்தப் படத்தின் நாயகியான அமலா பாலுக்கும், படத்தில் நடித்துள்ள மாணவர்களுக்கும் இத்தலைப்புப் பொருந்தும் என்கிறார் இயக்குநர்.
“நாங்கள் தேர்ந்தெடுத்த ‘மின்மினி’ தலைப்பு, படத்திற்குக் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது என்று ரசிகர்கள் படத்தைப் பார்த்த பின்பு கூறுவார்கள். சைக்கோ – த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் எங்கள் ‘மின்மினி’ படத்தின் டீசரை நாங்கள் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்றார் உற்சாகத்துடன் இயக்குநர் ராம்.