Shadow

மர்மர் – தமிழின் முதல் Found Footage திரைப்படம்

தமிழ்த் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஹாரர் திரைப்படம் எனும் சாதனையை மர்மர் படைத்திருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. மர்மர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

மர்மர் படத்தின் சிறப்பு ஒப்பனையாளர் செல்டன், “இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் உண்மை கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிறகு திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, அங்கு எனக்கு சுத்திப் போட்டார்கள். அதன்பிறகு வந்துதான் இந்தப் படத்தில் பணியாற்றினேன்” என்று தெரிவித்தார்.

மர்மர் பட விநியோகஸ்தர் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன், “தமிழில் ஒரு படம் முழுக்க ஃபவுண்ட் ஃபூட்டேஜ் மற்றும் மோஷன் சிக்னஸ் உள்ள முதல் படம் இதுதான். சமீபத்தில் நாம் மோஷன் சிக்னஸ் வீடியோ பார்த்தோம். நடிகர் அஜித் குமார் ஓட்டிய காரின் கேபின் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். அது கார் எங்கெங்கு செல்கிறது என்பதை நமக்குக் காட்டும். உண்மையில், அந்தக் கார் சென்ற வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர்கள் ஆகும். இத்தகைய கேமரா, ரேசிங் பற்றிய அனுபவத்தை 100 சதவீதம் கொடுக்கும். மற்றொரு உதாரணம், 1260 அடி உயரம் கொண்ட கட்டிடத்தின் மேல் தளத்தில் கண்ணாடியில் நடக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறார்கள். துபாயில் உள்ள கட்டிடம் ஒன்றில் இதேபோல் 760 அடி உயரத்தில் கண்ணாடியில் நடக்க முடியும். அப்படி அங்கு நடக்கும் போது மோஷன் சிக்னஸ் ஏற்படும். அந்த மாதிரியான அனுபவங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது.

இந்தப் படத்தின் கதை, ஜவ்வாது மலையில் நடக்கும் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு குழு அங்குச் செல்கிறது. அவர்களுக்கு என்ன ஆனது என்பதே இந்தப் படத்தின் கதை. மிகவும் சுவாரசியமாக உள்ளது. புதிய ஜானர், ஹாலிவுட் தரத்தில் திரைப்பட அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதை இந்த இளம் குழு எண்ணமாக கொண்டிருக்கிறது. படத்தின் போஸ்டர் முதற்கொண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும் என பணியாற்றி உள்ளனர். இது சுவாரசிய அனுபவத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும்” என்றார்.