ஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் பேசுகையில், “எட்டு வயது இருக்கும் போது என்னுடைய தாயாரிடம் நான் இசையமைப்பாளராக வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன். எங்கள் தாயாரின் அப்பா அதாவது தாத்தா ஒரு மிகப்பெரும் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர். இந்தத் தகவலை நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. தற்போது பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவரது பெயர் ஆர்.ஆர்.சந்திரன்.
சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்திற்கு இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தின் பணிகள் நின்றுவிட்டன. அதன் பிறகு வேறு ஒளிப்பதிவாளருடன் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் எனது தாத்தா ரத்தக்கண்ணீர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹரிச்சந்திரா, தாயின் மடியில், குபேரத் தீவு, தாய்க்கு பின் தாரம், கண்கள், இதயகீதம் போன்ற படங்களுக்கு அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நானே ராஜா, மகாகவி காளிதாஸ் போன்ற படங்களை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
இசைஞானியின் இசையை கேட்டதற்கு பிறகு இசையமைப்பாளராக வேண்டும் என்ற எண்ணம் உருவானது. நான் எத்தனை பாடலுக்கு இசையமைத்தாலும், அவரைப் போல் இல்லையே என்ற எண்ணம் என்னுள் இப்போதும் இருக்கிறது. ஆனால் இயக்குநர்களுக்குப் பிடித்துப் போவதால் இசையமைப்பாளராகத் தொடர்கிறேன். இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன” என்றார்.