Shadow

நான் இனி நீ.. நீ இனி நான் | ஜெகன் சேட் – நூல் விமர்சனம்

குறுநாவல் என்று கூடச் சொல்ல முடியாத ஒரு நெடுங்கதை. ரோலர்கோஸ்டர் போல் விறுவிறுவென ஓடும் 90’ஸ் கிட் ஒருவரின் காதல் கதை.

முதல் வரியிலேயே, தான் பார்த்த பெண்ணின் அழகு பற்றிய பிரமிப்பில் இருந்து தொடங்குகிறது ஜெயராமனின் காதல் கதை. பேச்சுமொழியில், தனக்கு நெருங்கிய ஒருவரிடம் ஜெயராமன் கதை சொல்வது போல் எழுதியுள்ளார் ஜெகன் சேட். ஒருவரின் காதல் கதையை, அவர் வாயாலேயே கேட்பதுதான் எத்தனை சுவாரசியம்? இயக்குநர் ராஜேஷின் (ஒரு கல் ஒரு கண்ணாடி) ஆரம்பக் கால படங்கள் போல் தொடங்கும் கதை, கே. பாலசந்தரின் உறவுச் சிக்கல்களைப் பேசும் கதையைப் போல் முடிகிறது. அந்த சிக்கல்களையும், சுந்தர்.சி பாணியில் கலகலப்பாகவே அணுகியுள்ளார் ஜெகன் சேட்.

Naan-ini-nee-reviewஜெயராமன் தனது கதையைச் சொல்லும் போக்கில் பல அதிர்ச்சிகளைத் தருகிறார். அவரிடம் ஒரு பெண், ‘நீ விர்ஜினா?’ என வினவுகிறார். 90’ஸ் கிட்ஸ்களுக்குத்தான் தெரியும், அது எத்தனை வலி மிகுந்த கலாச்சார அதிர்ச்சி ஏற்படுத்தும் அணுகுண்டுக்கு நிகரான கேள்வி என்று. கதையின் இந்தக் கட்டத்துக்கு வருவதற்குள், பக்கத்து வீட்டுப் பையன் போலிருக்கும் 90’ஸ் கிட் ஆன ஜெயராமன் மீது ஒரு வாஞ்சை ஏற்பட்டுவிடுகிறது. இந்தக் கேள்வி, அவரை வீழ்த்தி எங்கே மீள முடியாத துக்கத்தில் ஆழ்த்திவிடுமோ எனப் பதற்றம் ஏற்பட்டு வியர்க்கத் தொடங்கிவிடுகிறது. கதையில் மூழ்கி விடுவதால் எழும் இப்படியான புறச்சிக்கல்களைத் தவிர்க்க இயலாது.

ஆனால், அந்தக் கேள்வியே பரவாயில்லை என்பதுபோல், கொரானா வைரஸைப் பதிலுக்கு ஏவி விட்டது போல் ஒரு பதில் சொல்கிறார் ஜெயராமன். அதென்ன அவனுக்கு “ர்” வேண்டிக் கிடக்கு? எப்படியும் ஜெயராமன், 90’ஸ் கிட் போல் மரு ஒட்டிட்டு வந்த 2k கிட்டாகத்தான் இருப்பான். அவன் அந்தப் பொண்ணைப் பார்த்துக் கேட்கிறான், “நான் ஒரு எழுத்தாளனில்லையா? அதெப்படி நான் விர்ஜினாக இருக்க முடியும்?”

‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பதைக் கேட்டு கவுன்சிலர் ஸ்னேக் பாபு எப்படி ஷாக் ஆனாரோ, அதே போல், மேலே உள்ள வரியைக் கடக்கும் பொழுது படிப்பவர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படும். இந்த ஜெயராமனை அப்படியே பேச விட்டு யாரெனப் பார்த்தால், தன்னை, இளைய தளபதி விஜயின் விசிறியெனப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்.

முதலில், ஜெயராமன் ஒரு 90’ஸ் கிட், கூடவே எழுத்தாளர், அவருக்குக் காதல் என்பது தண்ணி பட்டபாடு, கடைசியில் விஜயண்ணாவின் தம்பியும் கூட என அறிய நேர்ந்த பொழுது, ஒரு நிமிஷம் தலை சுத்திவிட்டது. ஒரு மாதிரி மய்யமாக சமாதானம் அடைந்து, இப்படியொரு டெட்லி காம்பினேஷனில் ஒரு மனிதரா என வியந்தவண்ணம் வாசிப்பைத் தொடரவேண்டியிருந்தது. பேசுவதில் அதிக ஆர்வமுள்ள ஜெயராமனின் வாயோ வத்தலக்குண்டில் தொடங்கி வாரனாசி வரை நீள்வதைக் கண்டு நாயகி பூங்கொடியே ஸ்தம்பித்துப் போகிறார் (இந்தக் கதையின் ஆசிரியரான ஜெகன் சேட்டைத்தான் நான் தனி மனித தாக்குதல் செய்கிறேன் என்று அவரது ஆத்ம நண்பர்கள் யாரும் எண்ணிவிட வேண்டாம். சத்தியமாக நான் நாயகன் ஜெயராமனைத்தான் வியந்தோதிக் கொண்டிருக்கிறேன்).

அந்தக் காதல், ‘மறுபடியும்’ ஒரு புரியாத புதிர் கோணத்தில் திசை திரும்ப, எழுத்தாளர் ஜெயராமன் வாழ்க்கை என்றால் என்னவென்று அலசிப் பார்க்கிறார். எப்படியென்றால், “ஆன்மாவிற்கும் ஆணுறுப்பிற்குமான இடைவெளி என்ன?” என்று மனக்கணக்கில் விடை காண முயல்கிறார் ஜெயராமன். யப்பா, வேற லெவல் திங்கிங்க் ஜெயராமனுக்கு! அட்டைப்படம் ஒரு மார்க்கமாக இருந்தாலும், காமம் என்றால் என்னவென்ற ஜெகன் சேட்டின் விசாரம் விரசமின்றி எதார்த்தமாக உள்ளது. கொஞ்சம் முயன்றால், தாராள பிரபு படத்தில் வரும் மருத்துவர் கண்ணதாசனின் க்ளினிக்கில், தம்பதிகளுக்குக் கவுன்சிலிங் செய்யும் வேலையை அவர் பெறலாம். ஜெயராமனுக்குக் கவிஞர் கண்ணதாசனை மட்டுமல்ல, ஓஷோவையும் பிடிக்கும் என்பது உபத்தகவல்.

இப்படி, மொக்கையாகவும், தத்துவார்த்தமாகவும் பேசிப் பேசியே, பூங்கொடியின் மனதில் வலுவான இடம் பெறுகிறார் ஜெயராமன். அவருக்கு எல்லாம் சாதகமாகக் கூடி நடக்கையில், திடீரென கதை சுபமாக முடிவது மனதுக்கு மிக நிறைவாக உள்ளது. கதையின் முடிவு, ஜெயராமன் 2k கிட்டோ என்ற சந்தேகத்தைப் போக்கி, அக்மார்க் அரிய நிலவாழ் உயிரினமான 90’ஸ் கிட் தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, ஜாலியான வாசிப்பனுபவத்திற்கு உத்திரவாதமளிக்கிறது.

நான் இனி நீ.. நீ இனி நான் – Kindle Link

இப்படிக்கு,
சக 90’ஸ் கிட்