Shadow

எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

Ezhutha-Payanam-review

ஒரு ஆட்டிசக் குழந்தையின் அம்மாவாக, சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியையாக, தனது அனுபவங்களை அழகாகத் தொகுத்து, ‘எழுதாப் பயணம்’ எனும் நூலை எழுதியுள்ளார் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன். இந்நூலின் சிறப்பம்சம், எவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள ரொம்ப எளிமையான மொழிநடையே ஆகும்.

சமூகத்தில், ஆட்டிசம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. அது ஏற்படுவதற்கு முன்பாகவே, அதை வைத்துச் சம்பாதிக்க சிலர் தொடங்கிவிட்டனர். நம் மக்களின் அறியாமை மேல உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில், ஆட்டிசத்துக்குத் தீர்வு உண்டு என மக்களை நம்ப வைத்து பணம் பார்க்கின்றனர். லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் போன்றோர் தொடர்ந்து, இத்தகைய வலையில் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் ஏமாந்து விடக்கூடாதென, கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பத்திலும் பேசி வருகின்றனர்.

ஆனாலும், ஆட்டிசம் பற்றி, பொதுவெளியில் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லவேண்டிய அவசியம் இன்னும் அப்படியே தான் உள்ளது. ஆட்டிசமென்பது ஒரு நோய் கிடையாது, அது ஒரு குறைப்பாடு மட்டுமே! இதைச் சரி செய்ய எந்த மருத்துவ முறையிலும், அது அலோபதியோ, ஆயுர்வேதமோ, ஹோமியோபதியோ, எதிலிலுமே இப்போது வரைக்குமே மருந்தில்லை. நாளை வருமென நம்பலாம். ஆனால், இப்பொழுது யாராவது ஆட்டிசத்தைக் குணப்படுத்திக் காட்டுறேன் என்று சொன்னால், அவர்கள் கண்டிப்பாக ஓர் ஏமாற்றுப் பேர்வழியாகத்தான் இருக்கவேண்டும்.

‘ஏன் இந்தப் புத்தகத்தை எழுதினேன்?’ என்று தான் லக்‌ஷ்மி புத்தகத்தைத் தொடங்குகிறார். ஒரு தடவை ஆட்டிச உலகத்துக்குள் ஒரு பெற்றோர் சென்றுவிட்டால், அவங்க கடைசி வரை அங்கே தான் இருக்க வேண்டியிருக்கும். அவ்வுலகைக் கையாள 4 அடிப்படை விஷயம் தேவையென்கிறார்.

ஒன்று, எதார்த்தை ஏற்றுக் கொள்வது;

இரண்டு, ஆட்டிசம் பற்றிய புரிதலைத் தேடலைத் தொடர்ந்து கண்டடைவது;

மூன்று, தங்களது ஆட்டிசக் குழந்தைகளைப் புரிந்து கொள்வது. ஒவ்வொரு குழுந்தையும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்களது பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்க்கும் விஷயத்தைப் புரிந்து கொள்வது மிக அவசியம்.

நான்கு, போராடுவது. சமூகத்துடன் போராடவேண்டும், மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கத் தன்னுடனே போராட வேண்டும், சில சமயம் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் எனப் போராட்டம் ஒரு தொடர்கதையாக இருக்கும்.


(எழுதாப் பயணம் புத்தக வெளியீட்டில் மருத்துவர் தேவகி சாத்தப்பன் பேசியதன் காணொளி)

லக்‌ஷ்மி, Do’s and dont’s பற்றி ஆலோசனை தருகிறார். எந்த மாதிரியான தெரபி தேவைப்படும் என வழிகாட்டுகிறார். அவரைப் பொறுத்தவரை இந்தப் புத்தகம் யாருக்கானது என்றால், தங்களது குழந்தைக்கு ஆட்டிசம் எனத் தெரிந்ததும் பீதியடையும் பெற்றோர்களை மோட்டிவேட் செய்ய எழுதியுள்ளார். ஆட்டிசக் குழந்தைகளுக்காக அவர்களது பெற்றோர்கள் போராடித்தான் ஆகவேண்டும், வேற வழியே இல்லையெனத் எனத் தெளிவாகத் தயார் செய்கிறார்.

வெளிப்படைத்தன்மை (transparency) இல்லாத தெரபிஸ்ட்கள், ஸ்பெஷல் கிட்ஸைs சேர்த்துக் கொள்ளாத பள்ளிகள் என லக்‌ஷ்மி, சின்னச் சின்ன விஷயத்திற்காகவும் போராடியுள்ளார். அரசின் சர்வ சிக்ஷாஅபியான் (Sarva Shiksha Abhiyan) திட்டத்தில், சிறப்புக் குழந்தைகளின் கல்விக்குச் சலுகை இருந்தும், அதிலுள்ள நடைமுறைச் சிக்கலால் ரொம்ப மன உளைச்சலை அனுபவித்துள்ளார்.

அமெரிக்காவில், ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளதெனத் தெரிந்தால், அரசு அந்தக் குழந்தை வசிக்கும் தெருவில் ஹாரன் அடிக்கக்கூடாதுன்னு sign board வைக்கின்றனர். ஆட்டிசக் குழந்தைகள் திடீர் சத்தத்தால் ரொம்பவே அமைதியற்று (restless) கலவரமாகிவிடுவர். அப்படி ரெஸ்ட்லெஸ் ஆகுறப்ப, அவர்களை சமாதானப்படுத்துவது ரொம்பக் கடினம். ஆனால் நம்மூரில், சத்தம் போடுவதென்பது ரொம்ப சகஜமாகிக் கொண்டு வருகின்றது.

உதாரணத்துக்கு சிக்னலில் ட்ராஃபிக்ல நிற்கும் பொழுது, முன்னாடி டூ-வீலரில் ஒரு அம்மா கைக்குழந்தையோடு இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உயிர் போகின்ற மாதிரி ஹாரன் அடித்துக் கொண்டே இருப்பார்கள். அந்தக் குழந்தை மிரண்டு போய் உடல் பதறி மிரண்டு முழிக்கும். இது எத்தகைய கொடுமையான செயல்?

இந்த மாதிரி, பொதுவெளியில் ஓர் அடிப்படை பொறுப்புணர்வில்லாத சமூகத்தில், பெற்றோருக்குப் பின் அந்த ஆட்டிசக் குழந்தைகளின் நிலைமை என்னவாக இருக்கும்? நினைத்தே பார்க்க முடியவில்லை.

சர்வே படி, இந்தியாவின் ஆட்டிசக் குழந்தைகளின் சத்விகிதம் 10 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், இன்னமும் தடுப்பூசி போட்டால் குழந்தைக்கு ஆட்டிசம் வருமென்ற வதந்திகளைப் பரப்பி வருகிறது ஒரு கும்பல். இந்த கும்பலைப் பார்த்துப் பயப்படுவதா இல்லை, அதை நம்பி அப்படியே ஃபார்வேர்ட் செய்யும் கும்பலைப் பார்த்துப் பயப்படுவதா எனத் தெரியவில்லை.

செம்பரம்பாக்கம் வெள்ளம் – ஒரு ஆட்டிசக் குழந்தையின் பேச்சையே நிறுத்துமளவு மாறியது எனப் படிக்க உடம்பு பதறியது. அந்தக் குழந்தையைப் பேச வைக்க, ஒரு வாழ்நாள் உழைப்பைப் போட்டுள்ளனர். ஆனால் மூன்று நாளில் வெள்ளம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது.

சில அற்புதமான தருணங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் லக்‌ஷ்மி. குறிப்பாக நேத்ரா எனும் ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்கிறார். ரொம்பப் போராடி, ஒரு பள்ளியில் தனது மகனை லக்ஷ்மி சேர்க்கிறார். அங்கே நேத்ரா எனும் ஒரு குட்டிப் பெண், ஒரு voluntary care-ஐ தன் மகனிடம் காட்டியதைப் பற்றிப் பதிந்துள்ளார். ஒரு குழந்தை, தன்னுடன் படிக்கின்ற சிறப்புக் குழந்தை மேல காட்டுகின்ற அக்கறையைப் பெரியவர்களும் காட்டத் தொடங்கினால் எப்படியிருக்கும்?

ஒரே ஒரு சின்ன அக்கறை ரொம்பப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அதற்கான ஆரம்பப் புள்ளி தான் இந்த புத்தகம். ஆட்டிசம், தொற்று நோய் கிடையாது. ஆட்டிசக் குழந்தைகளும் நம்மைப் போல் ரொம்ப நார்மலானவர்கள்தான். நம் குழந்தைகளை தைரியமாக சிறப்புக் குழந்தைகளோடு நாம் பழக விடவேண்டும். சக மனிதரை நேசிப்பது பற்றிப் பெரியவர்கள் தான் குழந்தைங்களுக்குச் சொல்லித் தரவேண்டும். ஆனால் இங்க நேத்ரா எனும் ஒரு குட்டிப் பெண் நமக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கிறாள்!

நாளை, நாம் ஒரு ஆட்டிசக் குழந்தையையோ, அந்தக் குழந்தையின் பெற்றோரையோ பொதுவெளியில் பார்த்தால் எப்படி ரியாக்ட் செய்வோம்? ஒருவேளை, இந்தப் புத்தகம் படித்தீர்கள் என்றால், அந்தக் குழந்தைங்ககளுக்கு, நாம் தெரியாமல் கூட எந்தத் தொந்தரவும் பண்ணிவிடக்கூடாது என்கிற பொறுப்புணர்ச்சி நமக்கு நிச்சயம் வரும். Need of the hour ஆக இருப்பதும் அதுதானே! அதற்கு இந்தப் புத்தகம் உதவி செய்யும்.

இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம் மிக அற்புதமாக உள்ளது. கண்ணில் மிரட்சியுடன் இருக்கின்ற ஒரு குட்டி யானைக்கு ஆதரவாக, தைரியம் தருகின்ற மாதிரி பின்னாடி ஒரு அம்மா யானை. ரொம்ப க்யூட்டான போட்டோ. லக்‌ஷ்மி 100 பக்கத்தில் சொன்ன அத்தனை விஷயத்தையும், அந்த அட்டைப்படமே சொல்லிவிடுகிறது.

வெளியீடு: கனி புக்ஸ்
தொடர்பு : 9940203132


(தமிழ்நாடு அரசு போக்குவரத்து செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனின் உரை)

– தினேஷ் ராம்