இந்தப் படம், கடந்த நான்கைந்து வருடங்களில் நான் பார்த்த மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம். இந்தப் படத்தில் இரண்டு லேயர்கள் உள்ளன. ஒன்று க்ரைம் இன்வெஸ்டிகேஷன். மற்றொன்று மிக எமோஷனலான குடும்ப உறவுகள் மீதான சென்ட்டிமென்ட். இரண்டையும் சிறப்பாக பேலன்ஸ் செய்து நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது ஜோசஃப்.
ஜோசஃப், ரிடையர்ட் போலீஸ் அதிகாரி. அவரது இன்வெஸ்டிகேஷன் திறமைக்காக அவரைத் தொடந்து போலீஸ் டிபார்ட்மென்ட் பயன்படுத்தி வருகிறது. முதல் காட்சியில் மிக அநாயாசமாக அந்த வயதான தம்பதியர் கொலையில் கொலைகாரன் யார் என துப்பறியும் காட்சியும் அதற்கான லாஜிக்கும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
ஜோஃசப்க்கு ஒரு தொந்தரவு செய்யும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அவர் போலீஸ் டிபார்ட்மென்ட்டில் சேருவதற்கு முன் அவரது ஊரில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பெண் வீட்டில், இவர் வேலை இல்லாதவர் என்பதால் இவருக்குப் பெண் தர மறுக்கிறார்கள். இவர் போலீஸில் சேர்ந்து, ட்ரெயினிங் முடித்து ஊருக்கு வருவதற்குள் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிடுகிறது. இவரும் சமாதானமாகி ஸ்டெல்லா எனும் பெண்ணைத் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையுடன் நிம்மதியாக வாழ்கிறார். வேறொரு சந்தர்ப்பத்தில், இவர் வேலை செய்யும் ஸ்டேஷனில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் ஒரு பெண் இறந்து, அவரது உடல் அழுகிக் கிடக்கிறது. அதனை விசாரிக்க செல்லுமிடத்தில் இறந்து போன பெண் அவரது முன்னால் காதலி என்பதும், அவளது கணவனின் ஊதாரித்தனத்தால் இவள் இறந்தாள் என்பதும் தெரியவருகிறது. அழுகிப்போன உடலுடன் அவளது முன்னால் காதலியின் நிலை ஜோசஃபை மிகவும் அதிகமாக டிஸ்ட்ரப் செய்கிறது. இயல்பாகக் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை. இவரது மனைவி, ஜோசஃப்க்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம் என ஐயமுறுகிறார். கடைசியில் இவரும் ஸ்டெல்லாவும் பிரிந்து விடுகின்றனர். சில வருடங்களுக்குப் பிறகு ஸ்டெல்லா ஜோசஃபின் நண்பர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். இவரது டிப்ரஷனுக்கான காரணம் நாளடைவில் ஸ்டெல்லாவுக்கும் நண்பருக்கும் தெரிகிறது. நண்பர் – ஜோஃசப் – ஸ்டெல்லா ஆகியோரிடையே கண்ணியமான மதிப்புடன் உறவு தொடர்கிறது.
இடையில் அவரது மகள் விபத்தில் கோமா நிலைக்குச் சென்று பிறகு இறக்கிறாள். அவளது உடலின் பாகங்களை தானம் செய்கின்றனர். அடுத்து ஸ்டெல்லாவும் சாலை விபத்தில் மரணமடைகிறார். மருத்துவர்கள் கேட்டுக்கொண்டது படி ஸ்டெல்லாவின் உடல் பாகங்களும் தானம் செய்யப்படுகிறது. பிறகு யதேச்சையாக ஜோசப், ஸ்டெல்லாவுக்கு விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் போது அது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை எனத் தெரிய வருகிறது. உடல் உறுப்புகளை தானமாக பெற்றவர்களை விசாரிக்க ஆரம்பிக்கிறார். அவர்கள் அனைவரும் மிகவும் ஏழைகள், எந்த திட்டமிட்ட நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.
அடுத்து இதே வழக்கைத் துப்பறிந்து, மிகப் பெரிய மோசடியை உலகுக்கு ஜோசஃப் தெரியப்படுத்துகிறார். அற்புதமான இன்வெஸ்டிகேஷன் முறை. நாம் மிகச் சாதாரணமாக நினைக்கும் காட்சிகள் கூடக் கடைசியில் அழகாக இணைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படத்தின் எழுத்தாளர் சஹி கபிரோட வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படிக் கூட நிகழுமா என அறியும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. கதை நாயகன், ஜோஜு ஜார்ஜ் தனது அமைதியான, அழுத்தமான நடிப்பில் கலக்கியிருக்கிறார்.
– ஜானகிராமன் நா