Shadow

நான் மிருகமாய் மாற விமர்சனம்

தொழிலதிபர் தேவராஜனைக் கூலிப்படையினரிடம் இருந்து காப்பாற்றுகின்றான் பூமிநாதனின் தம்பி. தேவராஜனைக் கொல்ல முடியாத ஆத்திரத்தில், பூமிநாதனின் தம்பியைக் கொன்றுவிடுகின்றனர் கூலிப்படையினர். சட்டத்தை நம்பாமல், தன் கைகளாலேயே கூலிப்படையினரைக் கொன்று விடுகிறார் பூமிநாதன். பூமிநாதனின் குடும்பத்தைக் கொன்று விடுவதாக அச்சுறுத்துகிறான் தாஸ் எனும் கூலிப்படைத் தலைவன். பூமிநாதனின் குடும்பம் பிழைக்க வேண்டுமென்றால், தேவராஜனைக் கொலை செய்யும்படி பூமிநாதனை நெருக்குகிறான் தாஸ். தன் குடும்பத்திற்காக மிருகமாய் மாறும் பூமிநாதன் எப்படி தாஸிடமிருந்து காப்பாற்றுகின்றான் என்பதுதான் படத்தின் கதை.

கொலைகளும், ரத்தத் தெறிப்புகளுமாக உள்ளது படம். கதையிலுள்ள வன்முறையை விட, காட்சிகளாக விரியும்போது வன்முறை தாண்டமாடியுள்ளது. வன்முறையையும், ரத்தத்தெறிப்புகளையும் நம்பியே இயக்குநர் சத்யசிவா படம் எடுத்துள்ளது போல் தெரிகிறது. முதற்பாதி முடியும்போது, யார் யாரை எதற்கு வெட்டுகிறார்கள் என நெற்றியைச் சுருக்க வேண்டியதாகவுள்ளது. இரண்டாம் பாதியில், தாஸால் கொல்லப்படுபவர்கள் யாரெனத் தெரிந்தாலும், வெறுப்பு (Aversion) வருமளவுக்கு ஓவர்டோஸாகியுள்ளது கொலைகள். ஒரு சமானியன் எப்படி மிருகமாகிறான் என்ற புள்ளிக்கெல்லாம் திரைக்கதை செல்லவில்லை. தம்பியைக் கொன்றவர்களைக் கொல்லும் மிருகமாகத்தான் பூமிநாதன் காட்டப்படுகிறார்.

பூமிநாதனாக சசிகுமார் நடித்துள்ளார். அவரும், அவரது மகளும், “வாய்யா, போய்யா” எனப் பேசிக் கொள்ளும் காட்சிகளைத் தவிர, மற்ற எல்லாக் காட்சிகளையும் ஒரு பதற்றத்தோடே அமர வேண்டியதுள்ளது. சசிகுமாரின் குடும்பம் காப்பாற்றப்படவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல், இன்னும் எத்தனை கொலைகளைப் பார்க்க வேண்டி வருமோ என கொலைக்கூடத்தில் சிக்கினாற்போல் ஓர் அவஸ்தையை ஏற்படுத்துகிறது படம்.

கொலைகளும் ஓர் ஆக்ஷன் காட்சியின் நீட்சியாக இல்லாமல், கழுத்தை அறுக்கும் போராட்டமாக உள்ளது. கொலை நடக்கும்பொழுது பின்னணியில் வரும் சத்தம் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும் என படம் தொடங்கும்பொழுது எச்சரிக்கின்றனர். அந்தத் தொந்தரவை மீறிப் படத்தில் ஒன்ற வன்தோல் உடையவர்களால் முடியுமோ என்னவோ? மற்றவர்களுக்கு மிகக் கடினமே!