![](https://ithutamil.com/wp-content/uploads/2022/11/kalaga-thalaivan-review.jpg)
வஜ்ரா எனும் பன்னாட்டுப் பெருநிறுவனத்தின் ரகசியங்கள் கசிந்தவண்ணம் உள்ளன. தகவல் கசிவின் பின்னணியில் யார் உள்ளார்கள் என துப்பறிய, அர்ஜுன் எனும் வேட்டையாளைக் களம் இறக்குகிறது வஜ்ரா நிறுவனம். அர்ஜுன் ஒவ்வொரு நூலாகப் பிடித்து திருமாறனிடம் வந்து சேருகிறான். யார் இந்த திருமாறன், ஏன் வஜ்ராவை அழிக்க அவன் போராடுகிறான் என்பதே படத்தின் சுவாரசியமான கதை.
வழமை போல் மகிழ் திருமேனியின் மாயம் செய்யும் திரைக்கதை ரசிக்க வைக்கிறது. எட்டு வருடத் திட்டமிடலுக்கான நோக்கம், ஒரு பழி வாங்கும் கதையெனக் கடைசியில் சுருக்கியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஏனெனில், படம், அரசு நிறுவனங்கள் தனியார்மயமாவதன் ஆபத்துகள் குறித்தும், அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படும் வேலையின்மை குறித்தும் நுணக்கமான விவரணைகளை அளிக்கிறது. அப்படி ஒரு பெரும் பொருளாதாரக் குற்றத்தைப் படம் அம்பலப்படுத்தப் போகிறதோ என்ற தோற்றத்தை எழுப்பி, தனிமனித இழப்புகளிற்கான கூட்டுப் பழிவாங்கலாக நீர்த்துப் போகிறது.
காதல் காட்சிகளில் ஒரு தனித்துவமான சுவையைக் கூட்டி விடுவதில் வல்லவாரன மகிழ், இப்படத்திலும் அதை சரி வரச் செய்துள்ளார். அதற்காகப் பெரிதும் மெனக்கிடாமல், வசனங்களாலும், ரசனையான திரைச்சட்டகங்களாலும் (frame), காதல்காட்சிகளை அழகுற மிளிரச் செய்வார். கதாபாத்திரங்களின் பங்களிப்பு பெரிதுமின்றியே, ஓர் இயக்குநராகக் காதல் காட்சிகளை நயம்படக் காட்சிப்படுத்திவிடுவார். காட்சிப்படுத்தியுள்ளார்.
காந்தியாகக் கலையரசன் நடித்துள்ளார். ரயில்வே ஸ்டேஷனில், வில்லனைக் குழப்புவதற்காக ஆடப்படும் புத்திசாலித்தனமான ஆட்டத்தில் கலந்து கொள்ளும் கலையரசன் நாயகனைக் காட்டிலும் நன்றாக நடித்துள்ளார். பாரதியாக வரும் அனுபமாவின் கதாபாத்திரம், கதையோடு இயைந்து ரசிக்கும்படியுள்ளது.
படத்தில் கலக்கியிருப்பது அர்ஜுனாக வரும் ஆரவ் தான். கம்பீரமான வில்லனாகத் தோன்றி ஷோ ஸ்டீலராக அசத்தியுள்ளார். மகிழ் திருமேனியின் வில்லன்களிடம் உள்ள அச்சமூட்டும் அமைதியைப் பற்றி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருப்பார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதே போல், இப்படத்தில, குலை நடுங்க வைக்கும் அச்சுறுத்தல்களைக் கத்திக் கூப்பாடு போடாமல், எதிராளியின் மனதிண்மையை அமைதியாக உடைக்கும் ராட்சசனாக நடித்துள்ளார் ஆரவ்.
படம் ஏற்படுத்திய ஆச்சரியம் என்றால் ஜேபியாக (JP) வரும் ஜீவா ரவி பேசும் அறமும் அரசியலும்தான். அதிலுள்ள அழுத்தமும் தீவிரமும், நாயகனின் நோக்கத்தில் இல்லாதது மட்டுமே இப்படத்தின் ஒரே பலவீனம். அதனால் படம் முடியும் பொழுது ஒரு நிறைவை அளிக்கத் தவறிவிடுகிறது.
ரஷ்ய மாஃபியாவிற்கு, ஒரு நிறுவனத்தை விற்குமளவு புத்திசாதுரியமுள்ள கதாநாயகனாக உதயநிதி நடித்துள்ளார். கதாபாத்திரத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு, செறிவான நடிப்பை அளிக்க எந்த முயற்சியையும் போடாமல் மிக இயல்பாக வந்து செல்கிறார் உதயநிதி. நாயகனுக்காக எட்டு வருடங்கள் காத்திருக்கும் மருத்துவர் மைதிலியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். க்ளிஷேவான நாயகியாவதில் மகிழ் திருமேனியின் வசனமும் திரைக்கதையும் நூலிழையில் காப்பாற்றிவிடுகின்றன.
நாயகன் – நாயகிக்கு இடையேயான காட்சிகள், இரயில்வே ஸ்டேஷன் காட்சி, பட முடிவில் ரசாயன நிறுவனத்தில் நடக்கும் சண்டையில் வெளிப்படும் நாயகனின் புத்திசாலித்தனம் என படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரசியத்தை இழைத்து ரசிக்க வைத்துள்ளார் மகிழ் திருமேனி.