32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நானி வில்லனாக நடிக்கும் “வி” திரைப்படம்

Dinesh R சேலம் Published: 02/09/2020 2 நிமிட வாசிப்பு Updated: 07/09/2020 சினிமா
எழுத்து அளவு:

v-naani

நானியும், சுதீர் பாபுவும் நடித்துள்ள ‘வி’ படத்தின் ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தாய்லாந்தில் நடந்த அயல் நாட்டுப் படப்பிடிப்போடு சேர்த்து இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்கிற சிறப்பம்சம் பெற்றுள்ள திரைப்படம் இது. ‘வி’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு சுவாரசியமான பொழுதுபோக்கு படமாக மாற்ற பல விஷயங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக இந்தப் படத்தை மாற்ற காட்சி ரீதியாக ஒரு நிலையான அனுபவத்தைத் தர முயற்சி செய்திருப்பதாக இயக்குநர் மோகன கிருஷ்ணா கூறியுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களில் வழக்கமாக காட்சி ரீதியாக, வண்ணங்களில் வேறுபாடு இருக்கும். ஆனால் எங்கள் நோக்கமே வண்ணங்களில் அப்படி வேறுபாடு இல்லாமல் நிலையான ஒரு காட்சி அனுபவத்தைத் தருவது தான்.

இரவோ, பகலோ, காட்சிகளின் வண்ணங்கள், அதன் தன்மை நிலையாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். எனவே அதற்காக உடை அலங்காரம், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினோம். எந்த மாதிரியான உடைகளை, நிறங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஏனென்றால் உடைகள் அந்தந்த இடங்களுக்கு ஏற்றார் போலவும் இருக்க வேண்டும்.

கோவா முழுக்க வெப்பமான இடம். மும்பை ஈரப்பதமும், வெப்பமும் நிறைந்த இடம், தாய்லாந்து வெப்ப மண்டலப் பகுதி, மணாலி அதிகக் குளிரான பகுதி. இவ்வளவு இடங்களில், வெவ்வேறு தட்பவெப்ப நிலையில் படம்பிடிக்கப் பட்டாலும் ரசிகர்களுக்கு சீரான ஒரு காட்சி அனுபவத்தைத் தர வேண்டும் என விரும்பினோம்.

எல்லாத் தோற்றங்களையும் ஒரே மாதிரியான தன்மைக்குள் கொண்டு வருவது எங்களுக்கு சவாலாக இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் நினைத்த தன்மை கதைக்கும் ஒரு தனித்துவத்தைக் கொடுத்தது. ஒரு நீண்ட காலகட்டத்தில் நடக்கும் கதை இது. ரசிகர்கள் ஒரு நாவலைப் படித்ததைப் போல, அந்தந்த இடங்களை நேரடியாகப் பார்த்ததைப் போல உணர வேண்டும் என்று விரும்பினேன். பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தியதால் அது சாத்தியமானது” என்கிறார் மோகன கிருஷ்ணா.

நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டமே ‘வி’ என்கிற சீட்டு நுனிக்கே ரசிகர்களை அழைத்து வரும் த்ரில்லர். காதல் த்ரில்லர் திரைப்படமான இதில், ஒரு காவல்துறை அதிகாரி, க்ரைம் எழுத்தாளர் ஒருவரைக் காதலிக்கிறார். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு கொலைகாரன், அந்தக் காவல்துறை அதிகாரிக்கு புதிர் போட்டு அதற்கு பதிலளிக்கச் சொல்லி சவால் விடுகிறான். முதல் முறையாக நானி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில், அவரது வில்லத்தனத்தைப் பார்க்க பார்வையாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.

நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி, ஜகபதி பாபு, வெண்ணெலா கிஷோர், நாசர் உள்ளிட்டோரும் ‘வி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 5, முதல் அமேசான் ப்ரைம் தளத்தில், ‘வி’ திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.