யூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்யும் சிவாவிடமும் விக்கியிடமும், ஜிப்பா போட்ட ஒரு பணக்காரர் மூன்று டாஸ்குகளை முடித்தால், அவர்கள் எதிர்பார்க்கும் பணத்தைக் கொடுத்துக் கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என வாக்கு கொடுக்கிறார். அந்த மூன்று டாஸ்க்கள் என்ன, அதை எப்படி அவர்கள் முடிக்கின்றனரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை.
‘ப்ளாக் ஷீப்’ யூ-ட்யூப் சேனலில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ள படக்குழு. படத்திலும் அதன் தொடர்ச்சியாக, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற யூ-ட்யூப் சேனல் நடத்துபவர்களாக பிரதான கதாபாத்திரம் இருவரையும் வடிவமைத்துள்ளனர். படத்தின் இடைவேளைக்கு முன்பு, ஓர் அமைச்சர் டாஸ்மாக் கடையை மூட உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு காட்சி வரும். அது வரை அமெச்சூர்களின் கன்னி முயற்சியில் வந்து சிக்கிக் கொண்டோம் என எரிச்சலுடன் நெளிய வைக்கிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் அடிக்கும் ஓபியையும், மொக்கையையும் மருந்துக்கும் ரசிக்க முடியவில்லை. தங்களை ஒருவன் ஃபாலோ செய்கிறான் எனத் தெரிந்து, அவர்கள் காணும் கனவுக்காட்சிகள் எல்லாம் அமெச்சூர்த்தனத்தின் உச்சம். ஒருவழியாக டாஸ்குகள் தொடங்கி, வயிற்றில் பாலை வார்க்கிறது.
‘துப்பினா துடைச்சிக்குவேன்’ என்ற கொள்கையுடைய அரசியல்வாதி நாசாவாக நாஞ்சில் சம்பத் நடித்துள்ளார். அவர் வரும் அத்தியாயம் கலகலப்பாய்ப் போகிறது. நாஞ்சில் சம்பத்தை மிக அழகாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன். ஜிப்பாக்காரனாக நடித்திருக்கும் ராதா ரவியின் கதாபாத்திரத்தையும் நன்றாக வடிவமைத்துள்ளார்.
இயக்குநர் யூ-ட்யூபில் இருந்து வந்தாரெனில், டி.வி.யில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ளார் நாயகன் ரியோ ராஜ். RJ விக்னேஷ் காந்த், காம்ப்யர் செய்தால் ரசிக்கமுடிகிறது. ஆனால் ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி ரசிக்கும்படி திரையில் கொடுக்க அவர் மிகவும் திணறுகிறார். அவரது முதற்படமான ‘மீசைய முறுக்கு’ மட்டுமே விதிவிலக்கு. கதாநாயகியாக ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். எல்லாப் படங்களிலும் லூசுத்தனமான கதாநாயகி தான் இருப்பார்கள் எனக் கலாய்ப்பவர்களால் கூட, நாயகிக்கு ஒரு சீரியசான கதாபாத்திரத்தை உருவாக்க முடியாதது துரதிர்ஷ்டமே!
படத்தின் ஆரம்ப அமெச்சூர்த்தனத்துக்கு, சுட்டி அரவிந்தின் கதாபாத்திரமும் நடிப்பும் ஒரு காரணம். பிளாக் ஷீப் யூ-ட்யூபின் பிதாமகனான அவருக்கு ட்ரிப்யுட் செய்வதாக நினைத்துக் கொண்டு, வலிந்து தம்பிகளின் மீது பாசமுடைய அண்ணன் கதாபாத்திரத்தைத் தேவைக்கு அதிகமாக வலிந்து திணித்துள்ளனர். விவேக் பிரசன்னா வரும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் கோடாம்பாக்கம் ரயில்வே நிலையத்தில், இவ்வளவு சாவகாசமாக ஒரு கொலையைச் செய்யமுடியும் என்ற இயக்குநரின் நம்பிக்கையும், விவரனையும் தான் லேசாகக் கலக்கமுறச் செய்கின்றது.
‘படத்தின் முடிவில் பாசிட்டிவிட்டியை ஸ்ப்ரெட் செய்துள்ளோம்’ எனப் படக்குழு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் சொல்லிவந்தனர். எப்படித் தொடங்குவது என்பதில் பிரச்சனைகள் இருந்தாலும், எப்படி முடிப்பதென்பதில் தெளிவாக இருந்துள்ளார் இயக்குநர். அந்த பின் பாதி தெளிவுதான் இப்படத்தின் பலம்.