Shadow

சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

Suttu-pidikka-utharavu-movie-review

கொள்ளையர்கள் வங்கியைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓட, அவர்களை விரட்டுகின்றனர் கோவைக் காவல்துறையினர். கொள்ளையர்கள் R.S.புரத்திற்குள் நுழைய, அந்த ஏரியாவிற்குள் யாரும் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளிருப்பவர்கள் வெளியே வரமுடியாதளவும் சுற்றி வளைக்கிறது காவல்துறை. காவல்துறையின் பிடியில் குற்றவாளிகள் சிக்கினரா என்பதுதான் படத்தின் கதை.

கொள்ளையர்கள் பணத்தைத் திருடும் வங்கி, ஒரு மாலின் (mall) மாடியில் இருக்கிறது. நான்கு பேரில் ஒருவன் கூட, வாகனத்தில் தப்பியோடத் தயார் நிலையில் காத்திருக்காமல் ஏன் அப்படியொரு சொதப்பலான திட்டத்தைத் தீட்டினர் எனத் தெரியவில்லை. காரில் இருவர் தான் ஏறுகின்றனர். போலீஸைத் தவிர்க்க அந்தக் கார், பார்க்கிங்கில் இறங்கியதும், மீதமுள்ள இருவர் அங்கு வந்து ஏறிக் கொள்கின்றனர். இப்படியான காட்சிகள், என்ன ஏது என உள்வாங்கிக் கொள்ளும் முன், தடதடவெனக் காட்சிகள் வேகமாய் ஓடுகிறது. திருடர்கள் ஓடுகிறார்கள். போலீஸார் துரத்துகின்றனர். கிட்டத்தட்ட முழுப்படமும் சேஸிங் தான்.

இயக்குநர் சுசீந்திரன் நடிகராக அறிமுகமாகியுள்ள முதற்படம். அவரது உருவத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத இயந்திரத் துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொண்டு, காவல்துறையினரைச் சராமரியாகச் சுடுகிறார். விக்ராந்த் தான் படத்தின் நாயகன் எனக் கொள்ளலாம். தன் குழந்தைக்காக, எந்தத் தெளிவான திட்டமும் இல்லாமல், ஒரு முட்டாள்த்தனமான கொள்ளையில் ஈடுபடுகிறான். ஓர் உருப்படியான முகமூடி போட்டுக் கொண்டு கொள்ளையில் ஈடுபடணும் என்று கூடத் தெரியாத பாசக்காரக் கொள்ளையன். தொடக்கத்தில் நடிகர்களின் பெயர் போடும்பொழுது, ‘ஹெல்மெட் அணிந்து கொண்டு வங்கிக்குள் வரக்கூடாது’ என்று வாய்ஸ்-ஓவர் கேட்கிறது. திரையில் விஷுவல்ஸ் வந்ததும், முகத்தில் மூக்கையும் வாயையும் மறைக்கும் வண்ணம் கர்சீப் கட்டிக் கொண்டு பொதுமக்களின் மத்தியில் ஓடுகின்றனர்.

தினேஷ் காசி, படத்தின் சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளதோடு மட்டுமல்லாமல் கொள்ளையன்களில் ஒருவனாகவும் நடித்துள்ளார். கொள்ளையர்கள் ஓடிக் கொண்டிருக்கும் இடத்தில் வாழ்பவராக அதுல்யா ரவி நடித்துள்ளார். ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அவரெடுக்கும் ரிஸ்க்கும், தன்னை டி.ஆர்.பி.க்காக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்ற கோபமும் ரசிக்க வைக்கின்றன. இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் முதற்படம், தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்; இரண்டாவது படம், போக்கிரி ராஜா.  அவரது மூன்று படங்களுமே வெவ்வேறு ஜானர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை ஆணையர் இப்ராஹிமாக மிஷ்கின் நடித்துள்ளார். அவரது மிரட்டும் உருட்டு விழியும், கனமான உடலும், முரட்டுத்தனமான கட்டளைகளும் முதலில் வேடிக்கையாகத் தோன்றினாலும், போகப் போக அவரை ரசிக்க முடிகிறது. மருத்துவமனையில், ஸ்மிட்டுவாக நடித்திருக்கும் பேபி மானஸ்விக்கு, பேச இயலாது எனத் தெரிந்ததும் அவரின் முரட்டுத்தனம் குறையும் இடத்தில் மட்டும் மிஷ்கினின் பாத்திரத்தின் மீது மரியாதை வருகிறது. படத்தின் முடிவில் ஒரு ட்விஸ்ட்டிற்காகப் பார்வையாளர்களைக் குழப்ப, முழுப் படத்தையும் எதிர்முனையில் இருந்து கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. கதையைப் போட்டு உடைத்துவிடும் எந்த விமர்சனத்தையும் படிக்காமலும், பார்க்காமலும், கேட்காமலும் செல்பவர்களால் மட்டும் படத்தின் க்ளைமேக்ஸை நன்றாக ரசிக்க இயலும்.