இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால குமரனுக்கு உரக்கடை முதலாளிகளால் பிரச்சனை எழுகிறது. அச்சிக்கலில் இருந்து எம்.எல்.ஏ.வின் உதவியோடு தப்பித்த குமரன், அரசியல் எனும் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து, அதன் மூலம் நல்லது செய்ய நினைக்கிறான். அரசியலைச் சுத்தம் செய்தானா அல்லது அரசியலால் அசுத்தம் அடைந்தானா என்பதுதான் படத்தின் கதை.
கட்சியின் அடிமட்ட தொண்டன் கிரியாக நடித்துள்ள பாலா சிங், கறை வேட்டியின் மகத்துவம் பற்றி குமரனுக்கு எடுக்கும் பாடம் மிகவும் அசத்தல். ‘செல்வராகவன் இஸ் பேக்’ எனத் துள்ளத் தொடங்கிய மனம், இரண்டாம் பாதியில் அப்படியே சொய்ங் எனத் துவண்டு விடுகிறது. குறிப்பாக, கீதா குமாரியாக நடித்திருக்கும் சாய் பல்லவி, தன் கணவன் குமரன் மீது சந்தேகப்படும் காட்சிகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள அதீதமான மனோசக்தி தேவைப்படுகிறது. ஏன் எடிட்டிங்கில் அந்தக் காட்சிகளை எல்லாம் தூக்காமல் விட்டார்களோ?
மிகச் சிறந்த அரசியல் என்டர்டெயினராக வந்திருக்க வேண்டிய படம், குழப்பியடிக்கப்பட்டு, என்ன தான் சொல்ல வர்றாங்க என கடைசி வரைக்கும் புரியாமல் போய்விடுகிறது. சாய் பல்லவி, ஒரு பக்கம் தன் நடிப்பால் கொலையாகக் கொல்றாங்க என்றால், சூர்யா நல்லவரா கெட்டவரா, என்ன செய்கிறார், என்ன செய்ய நினைக்கிறார் என ஒன்றும் விளங்கிக் கொள்ளமுடியாத அளவுக்குச் சோதிக்கிறார். குமரனால் ஈர்க்கப்படும் அதி சக்தி வாய்ந்த பதவியில் இருக்கும் வானதி தியாகராஜனாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். அவர் எந்தக் காட்சியிலும் ஒட்டாத அந்நியையாக விலகி நிற்கிறார். யுவனின் இசையில், ‘அன்பே பேரன்பே’ பாடலை மட்டும் கண் மூடி சாவகாசமாய் ரசிக்க முடிகிறது.
சூர்யாவின் கதாபாத்திரம், அதிகாரத்தைக் கைப்பற்றி நல்லது செய்வதா அல்லது அரசியல் பயணத்தில் தன் சுயத்தை இழந்து அதிகாரத்தைப் பிடிக்க ஏதும் செய்யக் கூடியவராக மாறுகிறாரா என்று எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. திடீரென்று சிரிக்கிறார், மீசையை முறுக்குகிறார், எத்தனை பேர் வந்தாலும் அடிக்கிறார், கையைக் கட்டி ‘கத்துக்கிறேன்’ என பம்முகிறார். ‘அவன் – இவன்’ படத்தில் விஷாலே நவரசம் காட்டும்பொழுது, நான் பல முகங்கள் காட்டமாட்டேனா என சூர்யா காட்டோ காட்டுன்னு காட்டுகிறார்.
கிட்டத்தட்ட இதே கதையம்சத்தோடு வந்த LKG திரைப்படம், தொடக்கம் முதல் அதன் மைய நோக்கத்தில் இருந்து வழுவாமல் நகைச்சுவையாகப் பயணித்தது. மூன்றெழுத்து பெயரின் சுருக்கம் எனத் தலைப்பில் கூட, இரு படத்துக்கும் செம பொருத்தும். சுவாரசியமான திரைக்கதையில் தான் LKG கரையேறிவிட்டது. ஆனால் செல்வராகவனின் குமரனோ, ‘கத்துக்கிறேன்’ எனப் பொறுப்பில்லாமல் பவ்வியம் காட்டுகிறார்.