32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆறாம் திணை – ஃப்ளாஷ்-பேக் இல்லா பேய்ப்படம்

Dinesh R சேலம் Published: 28/12/2017 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Aaram Thinai audio launch
லக்கி ஸ்டார் எனும் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு. பேய்ப்படமான ‘ஆறாம் திணை’ படத்தின் நாயகனும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. பேய்களுக்கும் லாஜிக் உண்டு என்ற கருவோடு, முதல்முறையாகப் பேய்களுக்கு ஃப்ளாஷ்-பேக்கும் வைக்காமல் கதையைக் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் ஈரோடு அருண்.சி. ‘ஆறாம் திணை’க்கு, பேயும் பேய் சார்ந்த இடமும் எனக் கேப்ஷன் அளித்துள்னர்.  கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார்.  முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ் கே .சோழன் இசையமைத்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“பேய் உண்மையிலேயே இருக்கு. பணப்பேய், பதவிப்பேய், காமப்பேய், மதப்பேய், ஜாதிப்பேய் என இப்படிப் பல பேய்கள் நமக்குள்ளேயே இருக்கு. இந்த சினிமாவையும் கடந்த ஐந்தாறு வருடங்களாகப் பேய் பிடித்திருக்கிறது. ஆனால் இது சினிமாவை வாழவைக்கும் நல்ல பேய். இந்தப் படத்தின் (ஆறாம் திணை) தயாரிப்பாளரையும் இந்தப் பேய் நிச்சயமாகக் காப்பாற்றும்” என்று ‘ஆறாம் திணை’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார் இயக்குநர் பேரரசு.

அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய பொன்ராஜ் பேசும்போது, “நான் அப்துல் கலாம் ஐயாவுடன் ஒருமுறை கோவாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது இரவு நேரம் கடற்கரையில் வெள்ளையாக உருவம் நடந்துவந்து மறைந்ததைப் பார்த்தேன். என்னுடன் வந்தவர்கள் சிலரும் அதைப் பார்த்தனர். இதை அப்துல் கலாம் ஐயாவிடம் சொன்னபோது, “யூ ஆர் எ காமெடி ஃபெலோ. பேயைப் பார்த்துட்டு வந்திருக்க!” எனச் சொன்னார். ஒரு மாசத்துக்கு, அதைப் பற்றி பலபேரிடம் சொல்லி, அந்தப் பேய்க் கதையைச் சொல்ல வச்சு என்னைக் கிண்டல் செய்துவந்தார். இது தான் எனக்கும் பேயுக்கும் உள்ள சம்பந்தம்” என்றார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், “பேய் இருக்கா இல்லையான்னு கேட்டா இருக்குன்னுதான் சொல்வேன். அமானுஷ்யம்னா அது பேயா, இல்ல முனியா ஏதோ ஒன்னு இருக்குங்க. மனுசனால எது ஒன்றைப் பாக்க முடியாதோ அதைப் பார்க்கத்தான் ஆசைப்படுவான். இல்லைன்னா நயன்தாரா படத்துக்கு எதுக்கு இவ்வளவு கூட்டம் வருது.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகப் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், “பேய் இருக்கா இல்லையான்னு இப்ப வரைக்கும் எல்லோரிடமும் ஒரு கேள்வி இருந்துட்டே இருக்கு. சின்ன வயசுல நான் கூட, இப்படிப் பேய் இருக்கும்னு நினைச்சு பயந்து பத்தடி தூரத்துல இருக்க என்னோட வீட்டுக்கு ஒரு பர்லாங் தூரம் சுத்திலாம் நடந்து வந்திருக்கேன். அப்புறம் போகப் போகத்தான் பேய் இல்லைன்னு எனக்குத் தெளிவாச்சு.

ஒரு சிம்பிள் லாஜிக்..இப்ப யாராலோ கொல்லப்பட்டு பேயா மாறுகிறவங்களுக்கு தங்களைக் கொன்னது யார்னு தெரியும். பேயா மாறிவந்ததும் அவங்களைக் கொன்னு பழி தீர்த்துட்டுப் போயிட்டா அப்புறம் காவல்துறை, நீதி மன்றம் இதுக்கெல்லாம் வேலையே இருக்காதே. அப்படி ஏன் கொல்றது இல்ல?“ என ஒரு பகுத்தறிவு கேள்வியுடன் படக்குழுவினரை வாழ்த்தி, இசை குறுந்தகட்டை வெளியிட்டார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.