சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது. “போர்” திரைப்படத்தை T Series மற்றும் Roox Media இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வில்
Roox Media தயாரிப்பாளர் மது அலெக்ஸ் பேசியதாவது
இது எனக்கு தயாரிப்பாளராக முதல் படம். முதல் படத்திலேயே T – Series நிறுவனத்துடன் இணைந்து இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. நான் இந்த நிகழ்வில் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். முதலில் கடவுளுக்கும், என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கும் நன்றிகள். இயக்குநர் பிஜோய் நம்பியார் என் நண்பர் தான். அவருக்கும் நன்றிகள். T – Series தயாரிப்பு நிர்வாகத்தினருக்கு நன்றி. இப்படத்தில் சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்து நடித்த நடிகர் நடிகைகளுக்கு நன்றி. இந்தக் குழு ஒரு இளமையும் அர்ப்பணிப்புணர்வும் புதுமையும் கொண்ட குழு. டிரைலர் காட்சிகளில் நீங்களே பார்த்திருப்பீர்கள் படம் எவ்வளவு இளமையாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது என்று. இரண்டு படங்களுக்கு போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு படங்கள் புரொடெக்ஷனில் இருக்கின்றன. Roox Media நிறுவனமானது சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் படத் தயாரிப்பு நிறுவனமாகும். இதன் தலைமையிடம் யு.எஸ்-ல் இருக்கிறது. எங்கள் திரைப்படம் இளம் தலைமுறையை குறியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ஆகும். அதனால் எங்கள் படத்தை இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் எடுத்துச் செல்லுங்கள். எங்கள் படத்திற்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன் நன்றி’ என்றார்.
மெர்வின் ரொஸாரியோ பேசும் போது,
எல்லோருக்கும் அன்பு கலந்த வணக்கம். இது எனக்கு முதலாவது படம். முதல் படத்திலேயே என்னை இரண்டாவதாகப் பேச அழைத்திருப்பது மகிழ்ச்சியையும் பதட்டத்தையும் கொடுக்கிறது. போர் திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திர தேர்வும் அருமையாக இருக்கிறது. அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனக்கு இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் பிஜோய் நம்பியார் அவர்களுக்கும் தயாரிப்பாளர் மது அலெக்ஸ் அவர்களுக்கும் மிக்க நன்றி. இப்படத்திற்கு பத்திரிக்கையாளர்களாகிய உங்களின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி” என்றார்.
நாயகி டி.ஜே.பானு பேசுகையில்
நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இரு மொழிகளில் உருவாகி இருக்கும் போர் திரைப்படத்தில் இரண்டு மொழிகளிலும் நான் நடித்திருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். முதலில் இரு மொழிகளிலும் எப்படி நடிப்பது என்கின்ற தயக்கம் சிறிது இருந்தது. இயக்குநர் பிஜோய் நம்பியார் தான் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்தார். நன்றாக உழைத்து இரு மொழிகளிலும் படத்தை நாங்கள் உருவாக்கிவிட்டோம். நீங்கள் தான் படத்தைப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இப்படத்திற்கு சிறப்பான ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
நாயகி சஞ்சனா நடராஜன் பேசியதாவது,
ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் எங்களுக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறீர்கள். அதற்காக பிரத்யேக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”போர்” திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எல்லோரும் இதைத்தான் சொல்வார்கள். இருப்பினும் நான் ஏன் சொல்கின்றேன் என்றால் அதற்கு தனிப்பட்ட சில காரணங்கள் இருக்கிறது. முதலில் படத்தின் இயக்குநர் பிஜோய் நம்பியார் எனக்கு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்தார். என்னுடைய கேரக்டரை மட்டும் சொல்லாமல், படத்தில் வரும் இரண்டு கேரக்டரையும் என்னிடம் டீட்டெயில் ஆக விளக்கினார். நான் கதை கேட்கும் போது, படத்தில் இப்பொழுது எந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேனோ அந்தக் கதாபாத்திரத்தைத் தான் பின் தொடர்ந்தேன். ஆனால் கதை கூறிவிட்டு அதற்கு நேர் எதிர்கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறினார். நான் விடாப்பிடியாக சண்டை போட்டு அந்தக் கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்து அந்தகேரக்டரில் நடித்து முடித்துவிட்டேன். ஜகமே தந்திரம் மற்றும் சார்பட்டா பரம்பரையில் பார்க்காத சஞ்சனாவை நீங்கள் நிச்சயமாக இப்படத்தில் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.
படத்தில் நாயகர்களாக நடித்திருக்கும் இருவரும் எதிர் எதிர் கேரக்டர். காளிதாஸ் பேசிக்கொண்டே இருப்பார். அர்ஜூன் பேசவே மாட்டார். பானு எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. பிஜோய் நம்பியார் இப்படத்தினை மிகச்சிறப்பாக எடுத்திருக்கிறார். கதை, திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது.
எல்லோரும் அர்ஜூன் தாஸின் குரலைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவரின் நடிப்பைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர் அவ்வளவு டெடிகேட்டிவ் ஆன ஆர்டிஸ்ட். அவரைப் பற்றி ஒரு நிகழ்வை நான் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் கண்டிப்பாக அதை அவர் சொல்லமாட்டார். படப்பிடிப்பில் ஒரு நாள் கோர்ட் செட்டப்பில் இரவு 2 மணிக்கு கொட்டும் மழையில் ஒரு சண்டைக் காட்சியை படம்பிடித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் அப்பொழுது தான் ஷாட் முடிந்து கேரவனுக்கு வந்து கொஞ்சம் கண் மூடலாம் என்று படுத்தோம். அதற்குள் அர்ஜூன் தாஸுக்கு சண்டைக் காட்சியில் அடிபட்டு ரத்தம் வருகிறது என்ற தகவல் வந்தது. பதட்டத்துடன் ஓடிப் போய் பார்த்தால் படப்பிடிப்பு போய்க் கொண்டு இருக்கிறது, அவர் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். நாங்கள் அங்குள்ளவர்களிடம் கேட்டதற்கு ‘ஆமாம் ரத்தம் வந்தது’ அதைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சண்டை போட போய்விட்டார் என்றார்கள். ப்ரேக்கின் போது கேட்டதற்கு தரையில் விழுந்து பல் உடைந்துவிட்டது… பல் தானே.. பரவாயில்லை என்று கேசுவலாக கூறினார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.. சின்ன தலைவலி என்றாலே பேக்கஃப் சொல்லிவிட்டு செல்லும் இக்காலத்தில் இப்படி ஒரு நடிகரா..? என்று வியந்தேன். இவ்வளவு டெடிக்கேட்டிவ் ஆன ஒரு ஆர்டிஸ்ட்டைப் பார்ப்பது கடினம்.
பானு திரையில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார். நேரிலும் சூப்பராக இருக்கிறார். அவர் திரையில் வந்து நின்றாலே காட்சிக்குத் தேவையான ஒன்று கிடைத்துவிடுகிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. எங்கள் படத்திற்கு ஆதரவைத் தாருங்கள். எல்லோருமே மிகவும் கடினமான உழைப்பைக் கொடுத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் உழைப்பிற்கான கிரிடிட்ஸ் கொடுங்கள். இந்த தருணத்தில் நான் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து வளர்த்த என் தாய் தந்தையருக்கு என் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.” என்று பேசினார்.