Shadow

ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அறிமுக குழந்தை நட்சத்திரம் அர்னவ் விஜய் பேசுகையில்,” இந்தப் படத்தில் நடிப்பதற்காக என்னை முதலில் சூர்யா அங்கிளும், ஜோதிகா ஆன்ட்டியும் தேர்வு செய்தார்கள். ராஜா அங்கிள், சிவக்குமார் தாத்தா, சரோவ் அங்கிள் அனைவருக்கும் நன்றி. தாத்தா, அப்பா என இரண்டு பேருடன் என்னுடைய முதல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு. இதற்காக 2டி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் விஜயகுமார் பேசுகையில், ” 2டி என்ற நிறுவனம் தரமான படங்களை தயாரித்து வருகிறது. இதற்கு அண்ணன் சிவக்குமார் தான் மூல காரணம். அவர் விதைத்த விதைதான் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படத்தின் தொடக்க விழாவின்போது,‘ இது போன்ற அபூர்வமான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. உங்களுக்கு கிடைத்திருக்கிறது’ என சிவக்குமார் குறிப்பிட்டார். அவரிடம்,‘ இது குழந்தைகளுக்கான படம். இதில் நான் எப்படி சிறப்பாக நடிப்பது? என கேட்டேன். இந்த படத்தில் எனக்கு அளிக்கப்பட்ட கண்டிப்பான மிடில் கிளாஸ் தாத்தா கேரக்டரை ஏற்று நடித்து இருக்கிறேன். ‘தாத்தா மகன் பேரன் என்ற மூன்று தலைமுறையினரும் இணைந்து நடித்து இதற்கு முன் தெலுங்கில் ஒரு படம் வெளியானது. அதன் பிறகு தமிழில் இந்தப் படம்தான் தயாராகிறது’ என சிவகுமார் குறிப்பிட்டார். உண்மையிலேயே இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

அருண் விஜய் கடினமாக உழைத்து இன்று தமிழ் திரை உலகில் நல்லதொரு இடத்தில் இருக்கிறார். அவர் மென்மேலும் வளர்ந்து இன்னும் உயரத்திற்குச் செல்ல வேண்டுமென வாழ்த்துகிறேன்.

படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய பேரன் ஆர்ணவ் விஜய் யாரோ சிலரிடம், ‘இந்தப்படத்தில் நான்தான் மெயின். என்னுடைய அப்பாவும், தாத்தாவும் சைடு தான்’ என சொல்லிக் கொண்டிருந்தானாம். அதாவது சப்போர்ட்டிங் கேரக்டர் என்பதுதான் சைடு என சொல்லி இருக்கிறான் எதிர்காலத்தில் நன்றாக படித்து, பதவிகள் கிடைத்த பிறகு, கலைத்துறையில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நீங்கள் அனைவரும் வாழ்த்துங்கள்.

சிவகுமாரும் நானும் 1964 முதல் நண்பர்கள். கிட்டத்தட்ட 55 ஆண்டுகாலமாக நண்பர்களாக இருக்கிறோம். சினிமாவுக்கு நல்ல முன்னுதாரணமான குடும்பம் சிவக்குமாரின் குடும்பம். அவர் காபி, டீ அருந்துவதில்லை அந்த காலத்தில் அவருடைய வீட்டிற்கு சென்றால்.., ஒரு பானை நிறைய எலுமிச்சை பழ ஜூஸ் இருக்கும். வருகை தரும் விருந்தினர்களுக்கு ஜூஸ் தான் தருவார். அந்த அளவிற்கு ஒழுக்கத்தை பின்பற்றுவார். அந்த ஒழுக்கம் தான் அவருடைய பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்” என்றார்.

படத்தின் நாயகன் அருண் விஜய் பேசுகையில், ”என்னுடைய மகன் ஆர்ணவ் விஜய்க்கு இது போன்றதொரு அறிமுகத்தை உருவாக்கிக் கொடுத்த சூர்யா-ஜோதிகா ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் 2d பட நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அர்ணவ் முதல் படத்திலேயே என்னுடன் நடிப்பதை விட அவருடைய தாத்தா உடன் இணைந்து நடிப்பதை பாக்கியமாக கருதியதால், இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம் என எண்ணி, அவரை நட்சத்திரமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். இதனை கடவுளின் ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். இயக்குநர் சரோவ் சண்முகத்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான கதை. நிறைய உணர்வுகள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. என்னுடைய கதாபாத்திரம் மற்றும் என்னுடைய அப்பாவின் கதாபாத்திரம் ஆர்ணவ் விஜய் கதாபாத்திரம் ஆகிய அனைத்தையும் யதார்த்தமாக இயக்குநர் எழுதியிருந்தார். கதையைக் கேட்டபோது ஆர்ணவ் விஜய்யின் 70 முதல் 80 வீத சேட்டைகள் கதையில் இடம் பெற்றிருக்கிறது. அதனால் அவன் எளிதாக நடித்து விடுவான் என்று நம்பினேன். அவன் செய்யும் சுட்டித்தனங்கள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் . ஆர்ணவிற்கு நாய்க்குட்டி என்றால் உயிர். நாய்க்குட்டி மட்டுமல்ல அனைத்து விலங்குகளிடமும் அன்பு செலுத்துவான். இதன் காரணமாகவே இந்த கதாபாத்திரத்தை அவன் எளிதாக நடிப்பான் என நினைத்தேன். ஆர்ணவ் விஜய்யுடன் நடித்த சுட்டி குழந்தைகள் அனைவருடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பல விசயங்கள் அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டதொரு நிலையும் இருந்தது.

குழந்தைகளையும், நாய்க்குட்டிகளை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் மிகுந்த பொறுமை வேண்டும். இதற்காக கடுமையாக உழைத்த ஒளிப்பதிவாளர் கோபிநாத், இயக்குநர் சரோவ் மற்றும் படக்குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தருணத்தில் எதையும் திட்டமிட்டு படமாக்க முடியாது. குழந்தைகள் மற்றும் நாய்க்குட்டிகள் அவர்களுக்கான மனநிலையுடன் நடிக்கும் போது அதனை படமாக்கி கொள்ள வேண்டும். அதனால் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத் தான் தூணாக இருந்து செயல்பட்டார் என சொல்லலாம். படப்பிடிப்பு குழுவினரின் ஒட்டுமொத்த உழைப்பும் இதில் இருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் திரைப்படமாக இருக்கும். டிஸ்னி படைப்பு போல் ‘ஓ மை டாக்’ உருவாகி இருக்கிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று அதுவும் உலகம் முழுவதும் ‘ஓ மை டாக்’ வெளியாகிறது. கோடை விடுமுறை என்பதால் இந்தப் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.