Shadow

Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்

ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) ஆகும்.

இப்படம் ஹைபர் லூப் வகைமையைச் சார்ந்த த்ரில்லராக உருவாகியுள்ளது. கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் கண்ணன், “படத்தில் எனக்கும் இயக்குநருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்தன. எனக்கு சரியெனப்படுவது அவருக்கு தப்பு; அவருக்குத் தப்புன்னுபடுறது எனக்கு சரியா இருக்கும். இப்படியும் ஒன்னு எடுத்துக்கோங்க எனச் சொல்லி அவர் நினைச்சதையும் எடுக்க வச்சார். ஆனால் திரையில் அது மிக நன்றாக வொர்க்-அவுட் ஆகியிருக்கு. படம் சிறப்பாக வந்துள்ளது. என் ஜட்ஜ்மென்ட் தப்பாகிடுச்சு. என்னை மன்னிச்சிடுங்க” என இயக்குநரிடம் மன்னிப்புக் கேட்டார்.

நெடுநல்வாடை படத்தின் இசையமைத்துள்ள ஜோஷ் ஃப்ராங்க்ளின், இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவர், “இது போன்ற ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கு நான் இசை அமைத்ததில்லை. இந்தப் படத்தில் 3 பாடல்கள் இசையமைத்துள்ளேன். அதற்கு ஜெகன் அண்ணா தான் பாடல் வரிகள் எழுதியுள்ளார்” என்றார்.

நடிகை பவித்ரா லக்ஷ்மி, “படத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கிடைத்தது. படப்பிடிப்புத் தளத்தில் சமத்துவம் நிலவியது. சினிமாவில் பொதுவாக ஸ்டார் வேல்யூ உள்ளவர்களுக்கு மட்டுமே கவனமும் மதிப்பும் கிடைக்கும். நாயகியாக நடித்தவரையும் சரி, சின்ன கதாபாத்திரம் செய்யும் பெண்ணாக இருந்தாலும் சரி, அனைவரையும் ‘மேடம்’ என்றே இயக்குநர் பிரசாத் அழைத்தார். இயக்குநருக்கு வாழ்த்துகள்” என்றார்.

பாடலாசிரியரும் வசனகர்த்தாவுமான ஜெகன் கவிராஜ், “இந்தப் படம் நடுநிலையை பற்றிப் பேசியுள்ளது. நடுநிலை என்பது நடுவில் நிற்பதில்லை. நியாயத்தின் பக்கம் நிற்பது. இயக்குநர் கதையை சொன்னதும், இது தான் எனக்கு தோன்றியது. என் தம்பி ஜோஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இரண்டு பாடல்கள் நான் எழுதியுள்ளேன். ஒரு பாட்டில் தூய தமிழ்ச் சொற்கள் வேண்டுமெனக் கேட்டார் இயக்குநர்; ‘பேரலை நீ காலிடை வா’ போன்ற இலக்கியத்தரமான வார்த்தைகள் பயன்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அடுத்த பாட்டு, ‘தேசமில்லா ராஜா நான்’ எனும் பாட்டை தர லோக்கலான வரிகளில் கேட்டார். பரத் சாருக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு அது. ‘ஈக்வாலிட்டி’ பற்றிய அருமையான பாடலொன்றை இயக்குநர் எழுதியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

இயக்குநர் பிரசாத் முருகன், “முதலில் இந்தக் கதையை கேட்டதும்_ அதற்கு ஆதரவு கொடுத்தது தயாரிப்பாளர் ஆனந்த் சார். பரத் சார், அபிராமி மேடம் என அனைவரும் பெரிய நடிகர்கள், என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டனர். இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். சுவாரசியமான ஹைப்பர் லிங்க் – நான்லீனியர் படம் இது” என்றார்.

நடிகை அபிராமி, “எங்கள் படக்குழு அனைவருக்கும் பெரிய வாழ்த்துகள். இப்போது தான் நான் இந்தப் படத்தை பார்த்து விட்டு வந்தேன். எங்கள் குழு மீது எனக்குப் பெரிய நம்பிக்கை வந்துள்ளது. ஒரு சில படங்கள் தான், ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மளைப் பயணிக்க வைக்கும்.அது போன்ற படம் தான் இது. இயக்குநர் என்னிடம் கதையைச் சொல்லும்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தார், மிகவும் தெளிவாக இருந்தார். இந்தப் படத்தில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

நடிகர் பரத், “கடந்த ஐந்து ஆறு வருடங்களில், தமிழ் சினிமா வேறொரு இடத்திற்குச் சென்று விட்டது. அதே போல தான் இந்தப் படமும் இருக்கும். எனக்கு இது ஒரு புதுமையான கதாபாத்திரம் , நான் மொத்த கதையையும் கேட்கவில்லை. அவர் சொன்ன சிறு நேரத்திலே, எனக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை வந்தது. அதை நம்பித்தான் இந்தப் படத்தில் நடித்தேன். அதை சரியாகச் செய்தும் காட்டி விட்டார். படம் பார்த்தேன் நன்றாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களை ஏமாற்றாது” என்றார்.

இப்பபடத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கனிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘ராட்சசன்’ படத்தின் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார். கலை இயக்குநராக நட்ராஜ் பணியாற்றியுள்ளார். படத்தின் சண்டைக்காட்சிகளை சுகன் அமைத்துள்ளார். காஸ்ட்யூம் டிசைனராக ரிஸ்வானா பணியாற்றியுள்ளார்.

லைன் ப்ரொட்யூசர் – ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன்சங்கர்
எக்ஸிகியூட்டிவ் ப்ரொட்யூசர் – KSK செல்வகுமார்
தயாரிப்பு மேற்பார்வை – சிவமாணிக்க ராஜ்