32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தங்கலான் | படக்குழுவினர்க்கு தடபுடல் விருந்தளித்தார் விக்ரம்

Dinesh R சேலம் Published: 29/08/2024 2 நிமிட வாசிப்பு Updated: 30/08/2024 சினிமா
எழுத்து அளவு:

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது தங்கலான் திரைப்படம். சியான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்துப் பாராட்டுகிறார்கள். இந்தத் தருணத்தில் சியான் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் வெற்றிக்காகப் படத்தில் கடினமாகப் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சியான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்றியைத் தெரிவித்தார் சியான் விக்ரம். இதற்கு முன் ‘தங்கலான்’ படக்குழுவினருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை சியான் விக்ரம் அவர்களிடமே கேட்டு அறிந்து தேர்வு செய்து, அந்த உணவு வகைகளை பிரபலமான சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜிடம் வழங்கியிருந்தார். அவருடைய கைப்பக்குவத்தில் உருவான சிறப்பு விருந்தினைத் தன்னுடைய நன்றியினைத் தெரிவிக்கும் வகையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது கையாலேயே உணவினைப் பரிமாறினார் சியான் விக்ரம்.

சியான் விக்ரமின் இந்தச் செயலால் படத்தில் பணியாற்றிய அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாகத் தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் சியான் விக்ரமுடன் பேசி மகிழ்ந்ததுடன், செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் சீயான் விக்ரமுடன் ‘தங்கலான்’ படத்தில் நடித்த நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் திருமதி நேகா ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை கே. ஈஸ்வரன், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் வெற்றி பெறச் செய்தமைக்காக ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிப்பது வழக்கம். ஆனால், சியான் விக்ரம் ‘தங்கலான்’ பட வெற்றிக்காக அப்படத்தில் கடுமையாக உழைத்தவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து விருந்தோம்பல் செய்து நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.