ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, அதன் பாதிப்பில் பார்வையாளர்கள் அனைவரும் ஏக மனதாகச் சேர்ந்து அந்த இயக்குநரைப் பார்த்து என்னவெல்லாம் சொல்லக்கூடும்? அவற்றில் ஒன்றாக இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது.
பாடலாசிரியர் முருகன் மந்திரத்தின் குரலில், டைட்டில் கிரெடிட் வரும் பொழுது சொல்லப்படும் கதை சுவாரசியத்தைத் தூண்டுகிறது. அங்கிருந்து ‘ஒரு கோடி ஒரு பேய்’ என்றொரு ரியாலிட்டி ஷோவிற்குள் ஜாலியாய்ப் (!?) போகும் முதற்பாதி படம், இரண்டாம் பாதியில் சீரியசான பழிவாங்கல் கதையாக மாறுகிறது.
படத்தின் ஆறுதல்களில் ஒன்று அல்லது ஒரே ஆறுதல், 116 நிமிடங்கள் எனும் படத்தின் கால அளவு தான். ஆனால், அதில் ஜித்தன் ரமேஷ்க்கு பில்டப் காட்சிகள் மட்டுமே 5 நிமிடத்துக்கு மேல் நீள்கிறது. அதுவும் கதைக்கோ, கதாபாத்திர வார்ப்பிற்கோ உதவாத காட்சி அது. அப்பொழுது வரும், ‘இவனுக்கா இவ்ளோ பில்டப்?’ என்ற வசனகர்த்தா முருகன் மந்திரத்தின் டைமிங் குசும்பு ரசிக்க வைத்தது. அதே போல், ஆரம்பத்தில் அவர் சொல்லும் கதையில், சென்னையின் குரோம்பேட்டை பக்கத்திலுள்ள ஊரான சித்தார்த்தபுரியில் கதை நடப்பதாகச் சொல்கிறார். இந்த மாதிரி ஊர் பெயர்கள் அம்புலிமாமா புத்தகத்தில் காணலாம். அந்த ஊரைப் பற்றிய விவரிப்பில், நிலவுடைமை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நுண்விவரிப்பெல்லாம் உண்டு. ஆனால், படத்தின் மையக்கதைக்கு அப்படியான எந்த விவரிப்போ மெனக்கெடலோ இல்லாத திரைக்கதை தான் பலவீனம்.
A சான்றிதழ் படம். கவர்ச்சிக்கு 4 பெண்கள், இல்லையில்லை 7 பெண்கள். ரவியை உசுப்பேத்திக் கொல்லும் காட்சியில் வரும் பெண்ணையும் சேர்த்து 8 பெண்கள் என ஃபிக்ஸ் பண்ணிக்கலாம். இருந்தும் ரசிக்கும்படி கலாபூர்வமான காட்சிகள் வைக்காத ஒளிப்பதிவார் செல்வகுமாரை மன்னிக்க சிரமமாக உள்ளது. அப்படியே ஒன்றிரண்டு காட்சிகளில், ரசிக்கத்தக்க வகையில் பேய்ப் பங்களாவின் உட்புற அழகினை சரியான லைட்டிங்கில் காட்டினாலும், அதை ரசிக்க முடியாத அளவுக்கு காதுக்குள் புகுந்து கதகளி ஆடுகிறது பின்னணி இசையின் இரைச்சல்.
இந்தப் படத்தில் காட்டப்படும் சென்னை, கடவுளிண்ட தேசமாய்ச் செழிப்பாய் உள்ளது. ஒரு மலைச்சரிவில் இறங்கும் வாகனத்தை ஓட்டி வருபவர், ‘ஊரப்பாக்கம் எங்க இருக்கு?’ எனக் கேட்கிறார். தாம்பரத்தில் இருந்து மலையேறிக் கொண்டிருக்கும் வாகனத்தை ஓட்டும் நாயகன், ‘நேராகப் போங்க’ என வழி சொல்கிறார். வசனகர்த்தா எடுத்துள்ள இந்தப் படைப்புச் சுதந்திரம், சின்னஞ்சிறு சுவாரசியத்தைக் கூட்டினாலும், பார்வையாளர்களை உள்ளிழுக்காத திரைக்கதையில் பெரிய சுவாரசியங்களே கூடக் கடலில் கரைத்த பெருங்காயமாய் எடுபடாமல் போய்விடும். அப்படித்தான் நரேஷ் ஐயர் பாடிய ‘வெண்ணிற இரவே‘ என்ற பாடலும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தத் தவறிவிடுகிறது. பாடல்களுக்கு மட்டும் இசைமயமைத்த ரிஜுமோன் தன் பங்கினை நிறைவாகச் செய்துள்ளார். சனுஜா, ஜோனிட்டா, மிப்பு, கல்லூரி வினோத் என பிரதான கதாபாத்திரங்கள் யாருமே மனதில் பதியவில்லை. ஜித்தன் ரமேஷே கூட மிகவும் அந்நியமான உணர்வையே ஏற்படுத்துகிறார். மனோ பாலாவின் உதட்டசைவு கூட சில காட்சிகளின் சின்க் ஆகவில்லை. லிப் சின்க் ஆகும் பாத்திரங்களாலான, தன் தோழியைத் தேடும் பள்ளிச் சிறுவன், ரிப்போர்ட்டர் சேனலின் நிருபராய் வரும் ஜெகன் சேட், சிறு வயது நாயகனின் சைக்கிளில் ஏறும் புன்னகைக்கும் சிறுமி என சில முகங்கள் மட்டுமே ஆசுவாசம் அளிக்கின்றன.
அனைத்திலும் பேராச்சரியம் என்னவென்றால், இந்தப் படத்திற்கு ஸ்ரீஜித், ரவி என இரண்டு இயக்குநர்களாம்!