ஒரு கொலை வழக்கு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறான் மாசிலாமணி. அவ்விசாரணையும், அது சம்பந்தமான முழு நீள உரையாடலும் தான் படம்.
ஒருவரைச் சுற்றி மட்டுமே நடக்கும் கதையில்லை இது. ஒரு சுவாரசியமான த்ரில்லரில், மற்ற கதாபாத்திரங்களை வெறும் குரல்களாக்கி, மாசிலாமணியாக நடித்திருக்கும் பார்த்திபனை மட்டுமே கேமரா காட்டுகிறது. முழுப் படத்திலும், ஒரு முகம் மட்டுமே திரையில் காட்டப்பட்டாலும், படத்தின் சுவாரசியம் எள்ளளவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் பார்த்திபன்.
படத்தின் கால அளவு 105 நிமிடங்கள் மட்டுமே! படத்தின் ஓட்டத்திலிருந்து விலகக் கூடாது என்பதற்காக, 120 நிமிடப் படத்தில் இருந்து, சந்தோஷ் நாராயணனின் பாடலையும், சில காட்சிகளையும் நீக்கி மேலும் க்றிஸ்பாகப் படைத்துள்ளார்.
சிறுவன் மகேஷ், மகேஷின் அம்மா, ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் ஒரு காவலர், பெண் காவலர் ரோசி, முன் கோபியான ஏ.சி., மனிதாபிமானமுள்ள டி.சி., மனநல மருத்துவரான சூர்யா என படத்தில் அத்தனை குரல்கள். பிளாஷ்-பேக்கிற்கு, அதாவது பார்த்திபன், பின்னோக்கி கதையைச் சொல்லும் பொழுது, சம்பவங்கள் பின்னணி இசையாக மட்டும் விரிகிறது. ஒலி வடிவமைத்துள்ள ரசூல் பூக்குட்டியின் பங்கு அளப்பரியது. குரல்களாக மட்டுமே வரும் கதாபாத்திரங்களுக்கும், பறவைக்கும், பறவைக் குஞ்சுகளுக்கும், பூனைக்கும் உயிர் கொடுத்துள்ளார். இவர்கள் யாரையும் கேமிரா காட்டாவிட்டாலும், அவர்களின் இருப்பை உணரும்படி செய்வதில் தான் படம் வெற்றி பெறுகிறது.
ஒளிப்பதிவாளர் ராம்ஜி. அவருக்கான எல்லை என்பது ஒரு முழுமையான அறை கூட இல்லை. ஒரு டேபிளுக்கும் சுவருக்கும் இடையிலுள்ள இடம், சுவரில் மாட்டப்பட்டிருக்கும் காந்தி படம், ஒரு மர rack (வைப்புச்சட்டம்), ஒரு வாஷ் பேஷன், ஒரு ஜன்னல், ஒரு கழிப்பறையின் கதவு வரை என தனது எல்லைக்குள் எவ்வளவு ஃப்ரேம் வைக்க முடியுமோ அத்தனை மெனக்கெட்டு ஒட்டுமொத்த படத்துக்கும் கலாபூர்வமான அழகைத் தந்துள்ளார். சி.சத்யாவின் பின்னணி இசையில் பார்த்திபனின் சோலோ திரை முயற்சிக்கு வலு சேர்த்துள்ளது. இந்தப் படத்தின் பலம் அதன் தொழில்நுட்பக் கலைஞர்களே!
அவரது முந்தைய படமான கோடிட்ட இடங்களை நிரப்புக போலவே, பிரதான பெண் கதாபாத்திரத்தை ஒழுக்கப் பிறழ்வு உள்ளவராகச் சித்தரித்திருப்பதை பார்த்திபன் தவிர்த்திருக்கலாம். என்ன காரணம் என்றாலும் நான்கு மரணங்களை எந்தவித பதட்டமுமின்றி அணுகும் மாசிலாமணி கதாபாத்திரத்தை, பார்த்திபன் சித்தரிக்க முயல்வது போல் எளிய மனிதராக உள்வாங்கிக் கொள்ள சிரமமாக உள்ளது. எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரு நியாயம் உண்டு. ஆனால், நல்ல காவலராகச் சித்தரிக்கபடும் நபருக்குக் கூட, நான்கு உயிர்கள் என்பது ஒரு பொருட்டில்லை என்பதாகப் படத்தை முடித்துள்ளது இயக்குநரின் பொறுப்பற்றத்தனத்தைக் காட்டுகிறது. அதனால் அவரின் இந்தப் படம், கலை ஆகாமல் அற்புதமான முயற்சியாக மட்டும் தேங்கிவிடுகிறது.
ஒரு கனவு. தான் மட்டுமே ஒற்றை ஆளாய்த் திரையில் ஆதிக்கம் செலுத்தவேண்டுமென்ற பெருங்கனவு. இப்படி ஆண்டுக்கணக்காகச் சுமந்த பேராசைக்கு உயிரளிக்க முழு அர்ப்பணிப்போடு பார்த்திபன் உழைத்துள்ளது பட்டவர்த்தனம். எப்படி இந்தப் படத்தின் கொலை வழக்கில் ஏழாம் நம்பர் சைஸ் ஒற்றைச் செருப்பு முக்கிய ஆதாரமோ, அப்படி பார்த்திபனின் சினிமா காதலுக்கு ஆதாரமாய் இப்படம் என்றும் திரை வரலாற்றில் கோலோச்சி நிற்கும்.