Shadow

பேச்சுக்கு ஆங்கிலம் மூச்சுக்குத் தமிழ் – அமீர்

Paadam movie audio launch

இன்றைய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைப்பாடுகளைச் சொல்ல வரும் படம் பாடம்.

இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் அவர்கள் சொன்ன கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் மிகையாகாது. இந்தியக் கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாகத்தான் இந்தப் பாடம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக், நாயகியாக மோனா, முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குநர் நாகேந்திரன், R.N.R. மனோகர், நகைச்சுவை நடிகை மதுமிதா, யாசிகா, கவிஞர் பிறைசூடன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவினை மனோ செய்துள்ளார்.

பாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாலாஜி மோகன், “இன்றைய பள்ளிகளில், பாடங்கள் மற்றும் மொழியும் திணிக்கபடுகிறது. ஒரு மாணவனுக்கு எதில் ஆர்வம் இருக்கு என்று தெரிந்து அவனுக்கு அந்தப் பாடத்தைக் கற்பிக்கவேண்டும். அந்தக் கருத்தைச் சொல்ல வரும் இந்தப் பாடம் நிச்சயம் மாணவர்களைக் கவரும் என்பதில் ஐயம் இல்லை. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறும்” என்று வாழ்த்தினார்.

அடுத்து பேசிய இயக்குநர் சீனுராமசாமி, “இன்றைய மாணவர்களின் கல்வி அவலநிலையைச் சொல்லும் படமாகத்தான் இந்தப் படத்தை நான் பார்க்கிறேன். காரணம், இன்று குழந்தைகள் எங்குக் கிளம்ப வேண்டுமானாலும் குதூகலமாகத் தயாராகுகிறார்கள்; பள்ளிக்குச் செல்லவேண்டும் என்றால் தயங்குகிறார்கள். காரணம் அவர்கள் எடையை விட அவர்களின் பள்ளிக்கூடப் புத்தக பையின் எடை அதிகமாக உள்ளது. அவர்களுக்கு அது பிடிக்காத இடமாக உள்ளது. நான் என் காலத்தில் பள்ளிக்கு விரும்பிச் செல்வேன். அதுதான் எனக்கு ஜாலி. இன்றைய நிலையை மாற்றவேண்டும். இதை இந்தப் படம் நிச்சயமாக வலியுறுத்தும்” என்று பேசினார் .

“அண்ணன் சீமான் கோச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. பேச்சுக்கு ஆங்கிலம் கண்டிப்பாகத் தேவை; தமிழை மூச்சாக வைப்போம். இன்றைய சூழ்நிலையில் பிற மொழிகள் கற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படிக் கற்காததால் பல வாய்ப்புகளை நான் இழந்துள்ளேன். ஒரு உணவு விடுதிக்குச் சென்றாலேயே, அங்கு இருப்பவர்களுக்கு தமிழ்த் தெரியவில்லை. ஹிந்தி தெரிஞ்சா தான் சாப்பிட முடியும்னு நிலைமை ஆகிடுச்சு. உலகில் வேறு எங்கு செல்லவேண்டும் என்றாலும் ஆங்கில எழவு தெரிந்தே ஆக வேண்டிய” என்று கலகலப்பாக தன் பயணஅனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் இயக்குநர் சீமானோ, ”நாம் ஏன் பிற மொழிகளை கற்கவேண்டும்? மற்றவர்களை நாம் தமிழ் படிக்க வைப்போம்” என்று கூறினார். “அமெரிக்காவில் நான் தமிழில் தான் பேசினேன். எனக்கு மரியாதை கிடைத்தது எனவே நாம் அவர்களைத் தமிழ் பேச வைப்போம்” என்றார்.

பாடத்தின் மையக்கருவும் இதுவே! மாணவர்களைத் துரத்தும் ஆங்கிலத்தைப் பற்றியும், அது அறிவல்ல ஒரு மொழி மட்டுமே என்பதே பாடம்.