Shadow

பகலறியான் விமர்சனம்

நாயகன் தான் காதலித்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓரிரவில் ஓடிப் போக தயாராகிறான். ஓடிப் போன தன் தங்கையை தன் சகாக்களுடன் தேடி அலைகிறான் அண்ணன். இந்த நாயகன் கதாபாத்திரமும் அண்ணன் கதாபாத்திரமும் தவறான தொழில் செய்பவர்கள் என்பதால், தொழில் சார்ந்த பகையும் அந்த இரவில் இருவருக்கும் தொல்லை கொடுக்க மேற்கொண்டு நடந்தது என்ன..? என்பது தான் பகலறியானின் கதை.

இப்படத்தின் கதையை வேறு மாதிரியும் கூற முடியும். சற்று ஆழமாகப் பார்த்தால் அதுதான் இப்படத்தின் கதை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அதைத் தான் இயக்குநர் ட்விஸ்ட் ஆக வைத்திருக்கிறார் என்பதால் மேற்கொண்டு அது குறித்து மேலதீக தகவல்கள் கொடுக்க முடியவில்லை. கதைகளில் ட்விஸ்ட் இருக்கலாம். ஆனால் கதையவே ட்விஸ்ட் ஆக கூறும் முதல்படம் நான் பார்த்த வரையில் இதுதான்.

படத்தின் கடைசி 20 நிமிடம் வரை படத்தின் கதை இதுதான் என்பது புரியாது. ஒரு காதல் ஜோடி ஓடப் பார்க்கிறது. ஓடிப் போனவர்களை ஒரு கும்பல் கண்டுபிடிக்கப் பார்க்கிறது என்கின்ற இந்த இரண்டு வரிச் செய்தியைத் தவிர ஒன்றரை மணி நேரப் படத்தில் வேறு எதுவுமே சொல்லப்படாது. இருவருக்கும் தொழில் சார்ந்த எதிரிகளால் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.

சரி, அந்த தொழில் சார்ந்த ரவுடிகளையாவது சரியான ஆட்களாக தேர்வு செய்தார்களா..? என்றால் அதுதான் இருப்பதிலேயே படு சொதப்பல். மிகமிக மோசமான வில்லன் கதாபாத்திர தேர்வு. அண்ணன் ஆக வரும் நடிகரும் இப்படத்தின் இயக்குநருமான முருகனுக்கு வில்லனாக வரும் கதாபாத்திரம் மோசமான தேர்வு என்றால், நாயகன் வெற்றிக்கு எதிராக நீண்ட முடி வைத்துக் கொண்டு வரும் வில்லன் படு மோசமான தேர்வு.

இவர்கள் இருவரின் சதியாடல்கள் தான் திரைக்கதை நகர்த்துவது போல் திரைக்கதை அமைப்பு இருப்பதால் சித்திரை வெயிலின் சித்ரவதையை திரையரங்கிற்குள் அனுபவித்த அனுபவம். வில்லனுக்கான உடலும் இல்லை, உடல்மொழியும் இல்லை, வசன உச்சரிப்பும் இல்லை, முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லை, சண்டை இரு வில்லன்களுக்கும் சுத்தமாக வரவில்லை.

சமீபத்தில் வெளிவந்த படங்களில் மிகமிக மோசமான சண்டைக்காட்சிகள் வடிவமைக்கப்பட்ட படம் இதுவாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது. எடிட்டிங்கும் அப்படியே. சர்வ சாதாரணமாக பார்த்தாலே காட்சிகள் ஜம்ப் ஆவது தெரிகிறது.

வெற்றிக்கு நடிப்பு என்றாலே முறைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று யாரேனும் பாலபாடம் எடுத்தார்களா என்று தெரியவில்லை. எல்லா காட்சிகளிலும் முறைத்துக் கொண்டே இருக்கிறார். அந்த முறைப்புத்தன்மையை தவிர்த்து முகத்தில் வேறு எந்தவொரு உணர்ச்சியும் மருந்துக்கு கூட எட்டிப் பார்க்க மறுக்கிறது.

அண்ணனாக நடித்திருக்கும் இயக்குநர் முருகன் மற்றும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாப்ளின் பாலு இருவரின் நடிப்பு மட்டும் ஓகே ரகம். பிற கதாபாத்திர தேர்வுகள் எல்லாமே படத்தை பலவீனப்படுத்துகின்றன.

அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் நாயகி எப்படி இருக்கிறார் என்று காட்ட ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பார்கள். அதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

இரண்டாவது பத்தியில் கூறியது போல, இக்கதையை வேறுவிதத்தில் கூற முயன்றிருந்தால், ஒரு சராசரியான திரைப்படமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் கொண்ட படம் தான். ஆனால் தவறான திரைக்கதையால் ஒன்றரை மணி நேரம் நம்மை கொலையாகக் கொன்று, கடைசி 20 நிமிடத்தில் புதிதாக சில கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி, வேறொரு கதையைச் சொல்லி நம்மை தேற்ற முயன்று தோற்றிருக்கிறான் பகலறியான்.

பகலறியான் –  படமாக அறியமாட்டார்கள்.