Shadow

PT சார் விமர்சனம்

தன் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை ஒரு உடற்கல்வி ஆசிரியர் எதிர்த்து நீதி வாங்கித் தந்தால் அதுதான் இந்த “PT சார்” திரைப்படம்.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்தி கல்வித் தந்தை என்று போற்றப்பட்டு வருபவர் தாளாளர் குரு புருஷோத்தமன் (தியாகராஜன்). இவரது பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் கனகவேல் (ஹிப் ஹாப் ஆதி) எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியையான வானதி (காஷ்மீரா) மீது காதல் கொள்வது எந்த வம்பு தும்புக்குள்ளும் வராது என்பதால் ஒட்டு மொத்தப் பள்ளிக்கும் தெரியும்படி தைரியமாக காதலித்து வருகிறார். எதிர் வீட்டில் வசிப்பவரும் தன் பள்ளிக்கு அருகே அதே நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படிப்பவருமான நந்தினி (அனிகா சுரேந்திரன்) பள்ளியுடன் தொடர்புடைய ஒரு பாலியல் அத்துமீறல் பிரச்சனையால் உயிரிழக்கிறரார். உடனே நாயகன் நாயக அவதாரம் எடுத்து இறந்த பெண்ணுக்கு நீதி வாங்கித் தருகிறார். இதுதான் இப்படத்தின் திரைக்கதை செல்லும் பாதை.

இதை ஒரு கலைப் படைப்பாக அணுகாமல், ஒரு சாதாரண கமர்ஸியல் சினிமாவாக அணுகினால் கூட இந்த திரைக்கதையில் இருக்கும் ஒற்றை சுவாரஸ்யம் பயந்த சுபாவம் கொண்ட ஒரு உடற்கல்வி ஆசிரியர் சீறி எழுவது தான். அது கூட திரைக்கதையில்  இயல்பாக நிகழ்வது இல்லை. ஒரு ஜோசியரை வைத்து, உன் பிள்ளையின் ஜாதகம் விசித்திரமானது, பெரிய கண்டம் இருக்கிறது, உயிர்பலி கேட்கும், அதற்குள் திருமணம் முடித்துவிட வேண்டும் என்று பாபா பட பாணியில் தூபம் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் இயல்பாக கனகவேல் கதாபாத்திரம் கோபம் கொள்ளும் இடத்தில் கூட எந்தவித உணர்வெழுச்சியும் ஏற்படுவது இல்லை.

ஒரு திரைப்படத்தின் கதை மற்றும் உள்ளடக்கம் எதைப் பற்றிப் பேசுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நல்ல திரைப்படங்கள் என்று அவை தரம் பிரிக்கப்படுவதில்லை. அந்த உள்ளடக்கத்தை அப்படம் எப்படி பேசியிருக்கிறது, அதன் வாயிலாக அத்திரைப்படம் பார்வையாளனுக்கு கற்பிப்பது என்ன..? என்பதை வைத்தே அது நல்லபடமாகவோ, மோசமான படமாகவோ மாறுகிறது.

அந்த வகையில் பி.டி சார் திரைப்படம் பேசியிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கம், கண்டிப்பாக விவாதிக்கப்பட வேண்டியது தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அந்த உள்ளடக்கத்தை அது எப்படி பேசியிருக்கிறது, அதன் வாயிலாக இத்திரைப்படம் பார்வையாளனுக்கு என்ன சொல்ல வருகிறது என்ற பகுதிகளில் தான் சிக்கல் எழுகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், அத்துமீறல் என்பது பெண்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் மிகமிக யதார்த்தமான ஒரு வாழ்வியல் பிரச்சனை. அந்த பிரச்சனையை எடுத்துக் கொண்டு அதற்கு மிகை யதார்த்தமான, சினிமாத்தனமான ஒரு முடிவை சிபாரிசு செய்கிறது பி.டி சார்.

இதே பிரச்சனைகளை வேறொரு தளத்தில் இருந்து பேசிய சித்தா, கார்கி போன்ற படங்கள் அந்த பிரச்சனைகளை மிக யதார்த்தமாக, மிகமிக உண்மையாக அணுகின. சித்தாவில் இறுதிக்காட்சியில் சித்தார்த் வன்கொடுமை செய்த குற்றவாளியை கொலை செய்யச் செல்லும் காட்சி சினிமாத்தனமானது தான், ஆனால் படத்தின் மையம் அதுவல்ல. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் கிட்டத்தட்ட, பிடி சார் திரைப்படத்தின் டிரீட்மெண்ட் சாயலில் அமைந்த திரைப்படம் தான்.

படத்தின் மையத்தை மறந்து ஹீரோயிச துதியிலேயே மேற்சொன்ன இந்த இரண்டு படங்களும் பெரும்பாலும் பயணிக்கிறது. அது போல் பெண்களுக்கான இந்த அதி முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்க, ஹீரோக்கள் அவதாரமெடுத்து வர வேண்டும் என்பதான தொனி அயர்ச்சியைக் கொடுக்கிறது.

படத்தில் ஒரு காட்சி வரும். நாயகன் கனகவேலின் தாயான தேவதர்ஷிணியில் துவங்கி, அவனின் தங்கை, பக்கத்து வீட்டு அக்கா, அந்த அக்காவின் சிறு வயது குழந்தை என அனைவரும் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களைப் பற்றிப் பேசுவார்கள். அந்தக் காட்சியின் இறுதியில் சிறுவயது குழந்தையிடம் அத்துமீறிய ஆட்டோ டிரைவரை நாயகன் அடித்து துவைப்பான்.

இது உள்ளத்துக்குள் தவறு செய்தவன் தண்டிக்கப்படுகிறான் என்பதான ஒரு குதூகலிப்பைக் கொடுத்தாலும், இதன் மூலமாக பாதிக்கப்பட்டு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் நாம் சொல்ல வருவதென்ன..? கதாநாயகன் வரும் வரை காத்திரு என்பதா…?

இதே இயக்குநரின் முந்தைய படமான “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு” திரைப்படமும் உண்மைச் சம்பவமான சுவாதியின் கொலை வழக்கை முன் வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அதில் இயக்குநர் அடிக்கோடிட்ட செய்தி இதுதான். அத்தனை மக்களுக்கு முன்னிலையில் நடந்த கொலையில் ஏன் ஒருவர் கூட அந்த கொலையாளிக்கு எதிராக குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட காட்டவில்லை என்பது தான்.

அந்த குறைந்தபட்ச எதிர்ப்பு என்பது தானே பிடி சார் திரைப்படத்தில் வரும் மேற்சொன்ன காட்சியில் விடையாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த குறைந்தபட்ச எதிர்ப்பு தானே யதார்த்த சூழலில் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வாக அமையும். படத்தில் வில்லனாக வரும் குரு புருஷோத்தமன் போன்ற பண முதலைகளிடம் அந்த குறைந்தபட்ச எதிர்ப்பு பலனளிக்காமல் போகலாம். ஆனால் ரேஷன் கடைகளில் கையை தடவுபவனிடமும், பேருந்தில் கூட்ட நெரிசலில் கை வைக்க நினைப்பவனிடமும், தொழில் கற்றுத் தருகிறேன் என்கின்ற போர்வையில் அட்டுழியம் செய்யும் குப்பன் சுப்பன்களிடம் அந்த குறைந்தபட்ச எதிர்ப்பு பலனளிக்கத் தானே செய்யும் என்பதை இயக்குநர் ஏன் பேசத் தவறினார் என்று தெரியவில்லை.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான உண்மைக் கதையை தான் இப்படத்திலும் இயக்குநர் கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். அதெல்லாம் மிகுந்த பாராட்டுக்குரியது தான். ஆனால் அக்கதைக்களத்தை சினிமாத்தனமாக கையாண்டிருக்கும் விதத்தில் திரைப்படம் சறுக்குகிறது. காதல் படம் என்று சொல்வதற்கு ஏற்றார் போல் சில காட்சிகள், ஹீரோவின் ஆக்‌ஷன் மசாலா படம் என்று சொல்வதற்கு ஏற்றார் போல் சில காட்சிகள், கோர்ட் டிராமா திரைப்படம் என்று சொல்வதற்கு ஏற்றார் போல் சில காட்சிகள், பெண் வன்கொடுமைக்கு எதிரான படம் என்ற் சொல்வதற்கு ஏற்றார் போல் சில காட்சிகள் என்று திரைப்படம் பல்வேறு மீட்டர்களில் பயணிக்கிறது.

குழந்தைகளும், சிறுவர்களும், இளைஞர்களும் தங்கள் உள்ளத்தில் இருக்கும் மனக்குமுறல்களை கொட்டி வைக்கும் அந்த மந்திரச் சுவர் என்கின்ற கருத்தாக்கம் சிறப்பானது மட்டுமன்றி, செயல்படுத்த வேண்டிய ஒன்றும் கூட. அதே போல் ஒரு பெண் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுவிட்டால், அந்த பாலியல் வன்கொடுமை செய்தவனை விட, அப்பெண்ணை அதிகமாக பாதிப்பவர்கள் சமூகமாக இருக்கின்ற நாம் தான் என்கின்ற சமூகத்தின் மீதான சாட்டையடி தேவையானதும், தித்திப்பானதுமாய் இருந்தது. அதற்காகவும் இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.

ஹிப் ஹாப் ஆதிக்கு காமெடி மற்றும் கலகலப்பு இயல்பாக வருகிறது. ஆனால் உணர்ச்சிவசப்படக் கூடிய காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சிறப்பான நடிப்பைக் கொடுக்க முயற்சிக்கலாம். இது போன்ற கதையம்சம் உள்ள ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு வாழ்த்துக்கள்.

நடிப்பில் அசரடித்திருக்கும் அனிகா, இளவரசு, தேவதர்ஷிணி, போன்றோருக்கும் வாழ்த்துக்கள்.

பிடி சார் – வீரியமான பிரச்சனையை விளையாட்டாக பேசியிருக்கிறார்.