தும்பா எனும் பெண் புலி தன் குட்டியுடன் தமிழக வனத்துறைக்குள் நுழைந்துவிடுகிறது; ஹரியும் உமாபதியும் பெயின்ட் அடிக்கவும், புலியைப் புகைப்படமெடுக்க வர்ஷாவும் டாப் ஸ்லிப் செல்கின்றனர். அந்தப் புலியைக் கடத்த ஒரு குழுவும் மும்மரமாய் இறங்குகிறது. அதன் பின், டாப் ஸ்லிப்பில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
அருமையான குழந்தைகள் படத்துக்கு உத்திரவாதமளித்துள்ளார் இயக்குநர் ஹரீஷ் ராம் LH. அணில், குரங்கு, தும்பா, அதன் குட்டி புலி என VFX காட்சிகள் மிக நன்றாக வந்துள்ளது. ஹரியாக தர்ஷனும், உமாபதியாக தீனாவும், நடிக்க மறந்து பேசிக் கொண்டே இருக்கின்றனர். டாப் ஸ்லிப்பின் குளிரில் முகம் விறைத்துவிடுவதால், முகத்தில் எந்த பாவனைகளும் காட்ட முடியாமல் மிகவும் திணறியுள்ளனர். நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனும் அவர்களுக்கு சரி நிகராய் கம்பெனி தருகிறார். நகைச்சுவை இணையாக இருப்பார்களோ என சந்தேகத்தை உண்டு பண்ணும் ஜார்ஜ் விஜய் நெல்சனும், கலையரசனும் கூட ஏமாற்றிவிடுகின்றனர்.
படத்தின் நாயகன் தும்பா எனும் பெண் புலி தான். தனது குட்டி பிடிபடும் பொழுது, தும்பாவின் பரிதவிப்பும் சீற்றமும் செமயாக இருக்கிறது. தும்பா பட்டாம்பூச்சியோடு விளையாடுவது, குட்டி நீல நிற மலரிடம் விளையாடுவதென புலிகள் முகத்தில் காட்டும் அலாதியான உணர்வை நமக்குத் தருகிறது. அடிப்பட்ட தும்பா சிறையில் அடைபட்டிருக்கும் பொழுது, சின்னஞ்சிறு குட்டி புலி காட்டும் வேதனை மனதை நெருடச் செய்கிறது. Knack ஸ்டூடியோஸின் ரங்காவும், வில்லவன் கோதையும் மிக நன்றான தரத்தில் VFX அவுட்புட்டைத் தந்துள்ளனர். அவர்களது உழைப்பை மேலும் அழகாக்கும் வண்ணம், நரேன் இளன் மிக அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். காட்டின் மிகப் பசுமையான அழகைக் கண் முன் கொண்டு வந்துள்ளார். சுற்றுலா சென்று வந்த திருப்தியைத் தருகிறது. மலையின் முழுமையைக் காட்ட முயலும் அருமையான பறவைக் கோணத்து ஏரியல் ஷாட்ஸ், பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ‘புலிகளைக் காப்பாற்றுவது ஒட்டுமொத்த ஈகோ-சிஸ்டத்தையும் காப்பாற்றுவதற்குச் சமம்’ என்பதைப் படத்தின் இடையில் ஒரு வசனமாகக் கடந்து விடாமல், இறுதியில் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் .
இடைவேளை வரை பிரதான மனித கதாபாத்திரங்கள் ஒப்பேத்தி விட, பின் புலியின் ஆட்டம் தொடங்குகிறது. டைகர் எனும் குரங்கின் அட்டகாசமும், அணிலின் அட்ராசிட்டியும் ரசிக்க வைக்கிறது. குழந்தைகள் கொண்டாடி ரசிப்பார்கள் என்பதற்கு எங்கள் விமர்சனக் குழுவே சாட்சி!