Shadow

‘துரத்தும் பட்டாசு பாலு’ – பசுபதி | இயக்குநர் பேரரசு

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, “சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும், விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தால் பொழுதுபோக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும்.

அப்புறம் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. சினிமா சரியாக இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு படங்கள் வந்தால் தான் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம்.

ங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது. சொந்தப் பெயரை விட்டுவிட்டு கதாபாத்திரத்தின் பெயர் பேசப்பட்டால் அதுதான் அந்தப் பாத்திரத்தின் வெற்றி என்று சொல்லுவேன். நான் ‘திருப்பாச்சி’யில் பசுபதியை நடிக்க வைத்து இருந்தேன். அந்தப் படம் வெளியாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பசுபதி என்னிடம் பேசினார். ‘என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள்?’ என்றார்.

என் படத்தில் நல்ல கேரக்டர் தானே அவருக்குக் கொடுத்து இருந்தேன். அவருக்கு நல்ல பெயர் தானே கிடைத்தது ஏன் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்து, ‘என்ன?’ என்றேன்.

‘என்னை எங்கே பார்த்தாலும் பட்டாசு பாலு என்றுதான் அழைக்கிறார்கள். பசுபதி என்று யாரும் அழைப்பதில்லை’ என்றார். அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் மக்களிடம் போய்ச் சேர்ந்து இருந்தது” என்றார்.