Shadow

பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்

Perazhagi-movie-review

இளமையையும், பேரழகையும் தரும் சித்தரின் சூட்சும ஃபார்முலா, அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் சிக்குகிறது. அந்நிறுவனம், ஆதரவற்ற முதியவர்கள் மீது அந்த ஃபார்முலாவைப் பரிசோதித்துப் பார்க்கின்றனர். அவர்களிடம் சிக்கும் சச்சுவின் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்பட, சச்சு தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போல் உருமாறிவிடுகிறார். உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் குழப்பத்தை நகைச்சுவையாகவும், கார்ப்ரேட் கம்பெனியின் தகிடுதத்தத்தை சீரியசாகவும் படம் சொல்லியுள்ளது.

‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாக நடித்துள்ளார். பேத்தி காதலைச் சொல்லிவிட, பாட்டியோ முறைப்பைக் காட்ட, விஜய் தவிக்கும் காட்சிகள் நன்றாக உள்ளன. ஷில்பா மஞ்சுநாதின் அப்பாவாக லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். அவரது அம்மாவான சச்சுவை, லிவிங்ஸ்டனின் மனைவி சாடை பேசி விட, சச்சு கோபித்துக் கொண்டு வெளியேறி கார்ப்ரேட் கம்பெனியிடம் தஞ்சமடைகிறார்.

பாட்டி இளமையாக மாறியதும் பண்ணும் அலம்பலும் சலம்பலும் ரசிக்க வைக்கின்றன. மஞ்சு ஷில்பாநாத் பிரமாதமாக நடித்துள்ளார். சச்சுவும் கலக்கியுள்ளார். ஆனால் ஒளிப்பதிவாளர் இ.ஜே.நவ்ஷாத் மட்டும் தன் வேலையான ஒளிப்பதிவை சரியாகச் செய்திருந்தால் படத்தின் மெருகு இன்னும் கூடியிருக்கும்.

சச்சுவிற்கும், புகைப்படத்தில் இருக்கும் டெல்லி கணேஷ்க்கும் இடையில் நடக்கும் உரசலும் உரையாடலும் ரசிக்கவைக்கின்றன. வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் சரவண சுப்பையா அந்தப் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். பொழுதைப் போக்கக் கலகலப்பானதொரு படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் விஜயன்.சி. கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் அவரே தயாரித்தும் உள்ளார். ஒளிப்பதிவில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தாலுமே, படம் இன்னும் நன்றாக வந்திருக்கும்.