Search

ஃபேன்டம் த்ரெட் விமர்சனம்

Phantom thread movie review

உக்கிரமான காவியத்தன்மையுடனும் கலையழகுடனும், ஒரு மாய நூலைக் கொண்டு ‘ஃபேன்டம் த்ரெட்’ எனும் படத்தை அட்சுர சுத்தமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன். அதனால் தான், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆகிய ஆறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்குப் போட்டியிடுகிறது.

ரெனால்ட் வுட்காக் மத்திம வயதைக் கடந்த மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்புக் கலைஞர். ஒரு பிரத்தியேகமான தனித்த உலகில் வாழ்பவர். தனது நாட்களை ஒரே மாதிரியான கண்டிப்பான ஒழுங்கில் கழிக்கவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பவர். காலையுணவின் பொழுது, ஒரு ஸ்பூன் வைக்கும் சத்தம் கூட அதிகப்படியாக அவருக்குக் கேட்கக்கூடாது. அவர் வேலையில் மும்மரமாக இருக்கும் பொழுது, சிநேகமாய்த் தேநீர் கோப்பையோடும் கூட அவரருகில் கூட யாரும் செல்லக்கூடாது. மனிதர் எரிந்து விழுவார். அப்படிப்பட்ட ரெனால்ட்ஸ் மீது அல்மாவிற்குக் காதல் ஏற்படுகிறது.

அந்தக் காதல் அவர்களை எந்த எல்லைக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை.

ரெனால்ட்ஸ் வுட்காக்காக டேனியல் டே லீவிஸ் நடித்துள்ளார். அவரிடமுள்ள மிடுக்கும், தீவிரமான முக பாவமும், பார்வையாளர்களை அநியாயத்திற்கு வசீகரம் செய்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர் இந்தப் படத்தோடு நடிப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். நிச்சயம் ஒரு மகா கலைஞனைத் திரையுலகம் இழக்கிறது என்பது திண்ணம்.

அல்மாவாக நடித்திருக்கும் விக்கி க்ரீப்ஸும் கலக்கியுள்ளார். அல்மாவின் எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் மிக அழகாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ‘எஸ் சார்; எஸ் மேம் என இந்த வீட்டில் (ரெனால்ட்ஸின் வீடு) எல்லாம் செயற்கையாக இருக்கு’ எனக் கோபத்தோடு பழித்துக் காட்டும்பொழுது கவர்கிறார். இரும்பு மனிதனாய்த் தன்னைச் சகலத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட ரெனால்ட்ஸ் வுட்காக்கை வழிக்குக் கொண்டு வர அல்மா கையாளும் வழிமுறை அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ‘இத்தனை தீவிர காதல் சாத்தியமா?’ என்ற பெரு வியப்பைப் படம் ஏற்படுத்துகிறது. ரெனால்ட்ஸ் வுட்காக்கைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக் கொள்ளும் மாய நூலை அல்மா கண்டுபிடித்து விடுகிறாள். ரெனால்ட்ஸும் அதை ஏற்கப் படம் கவிதையாய் நிறைகிறது மனதில்.

இந்தப் படத்தில் உண்மையிலேயே மாயம் செய்வது இசையமைப்பாளர் ஜானி க்ரீன்வுட் தான். மிகப் பொறுமையாகப் போகும் படத்தை ரசிக்க முடிவதற்கு இசையே பிரதான காரணம்.

படத்தில் உடைகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. படத்தின் கதையோ 1950களில் நிகழ்கிறது. அக்காலகட்டத்தின் உடைகளை நேர்த்தியாக வடிவமைத்துக் கண்களைக் கவர்கிறார் மார்க் பிரிட்ஜஸ். படத்திற்கெனத் தனி ஒளிப்பதிவாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதொரு அம்சம். இயக்குநரும் படக்குழுவினருமே ஒளிப்பதிவையும் செய்துள்ளனர். அக்குறை தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்கிறார் படத்தொகுப்பாளர் டிலன் டிச்சேனோர்.

தன் வழக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பாத மிகக் கறாரான ஆணும், எளிய எதிர்பார்ப்பினையுடைய மென்மையான பெண்ணும் எப்படி ஒத்துப் போயினர்?

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!