நிவின் பாலிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். த்ரிஷாவின் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஹே ஜூட்’ என்பது 1968இல் வெளிவந்த ‘தி பீட்டில்ஸ்’ குழுவின் மிகப் பிரபலமான பாடல். த்ரிஷாவின் கேஃபே மற்றும் இசைக்குழுவின் (Music band) பெயரை ‘தி பீட்டில்ஸ் கேஃபே’ என வைத்துத் தலைப்பிற்கு ட்ரிப்யூட்டும் செய்துள்ளனர்.
ஜூடிற்கு மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் பிறந்தது முதலே சிக்கல் உள்ளது. கோபம், மகிழ்ச்சி என மனம் சார்ந்த உணர்வுகளை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. ஆனால், கணிதமோ உள்ளங்கை நெல்லிக்கனி போல் ஜூட்க்குப் புரிகிறது. கிட்டத்தட்ட கணித மேதை ராமானுஜம் அளவுக்கு. 28 வயதாகும் ஜூட் கொச்சியில் இருந்து கோவாவிற்குத் தன் பெற்றோர்களுடன் செல்கிறான்.
நண்பர்களற்ற ஜூட்க்கு, கோவாவில் பக்கத்து வீட்டுக்காரர்களான செபாஸ்டியனும் அவரது மகள் க்ரிஸ்டலும் நண்பர்களாகின்றனர். இருமன ஒழுங்கின்மையால் (Bi-polar disorder) பாதிக்கப்பட்ட க்ரிஸ்டல், ஜூட்க்கு பல விதங்களில் உதவி செய்கிறாள். அவர்களின் அழகான நட்பைப் பற்றிய படம் தான் ‘ஹே ஜூட்’.
தமிழ்ப் படங்களில் பார்த்ததை விட த்ரிஷா இப்படத்தில் அழகாகத் தோன்றியுள்ளார். மகிழ்ச்சி, இறுக்கம் என மாறும் இரண்டு மனநிலைகளை அழகாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார் த்ரிஷா. கொஞ்சம் தொப்பையோடு, அஸ்பெர்ஜர்ஸ் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவராக நிவின் பாலி கலக்கியுள்ளார். ஒரு நாயானாக இல்லாமல், படத்தின் கதைக்கு என்ன தேவையோ அவ்ளோதான் உள்ளது அவரது காட்சிகளும் நடிப்பும்.
ஆனால் படத்தை முன்னெடுக்கும் பிரதான கதாபாத்திரங்கள் நாயகன், நாயகியின் தந்தைகள் தான். ஜூடின் தந்தை டொமினிக்காக நடித்துள்ள சித்திக் அதகளம் புரிந்துள்ளார். அவரது பணம் ஈட்டும் ஆர்வம் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளது. ஆல்ஹாலிலேயே மிதக்கும் சைக்காலஜிஸ்ட் செபஸ்டியனும் அடிபொழி. சித்திக்குக், விஜய் மேனனும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அனைத்துமே ரசிக்கும்படி உள்ளன.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ரம்மியமாய் ரசிக்கும்படி ஒரு படத்தை எடுக்க மலையாளிகளுக்கு இயல்பாய் வருகிறது. டொமினிக் தன் மகனை ஒரு சைக்காட்ரிஸ்டிடம் அழைத்துச் சென்றிருக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்தாலும், திரைக்கதையின் தன்மை அதை எல்லாம் ஒரு குறையாகப் பாவிக்கவிடாமல் செய்கிறது. காதலாக்கிவிடாமல், நட்பைப் போற்றும் விதமாகப் படத்தை முடித்துள்ளார் பல விருதுகளைப் பெற்ற புகழ் பெற்ற இயக்குநரான ஷ்யாமாபிரசாத்.