Shadow

பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

Podhuvaga emmanasu thangam vimarsanam

கூத்தப்பாடி திரெளபதி அம்மன் கோயிலில், ஆலம்பாடியைச் சேர்ந்த ஊத்துக்கோட்டானின் மகளுக்கு மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் பொழுது பாதியிலேயே கோயிலை மூடி வெளியில் அனுப்பி விடுகின்றனர். இதை அவமானமாகக் கருதும் ஊத்துக்கோட்டான், கூத்தப்பாடியை ஆளில்லாத ஊராக மாற்றி, திரெளபதி அம்மனின் தாய் ஊரான ஆலம்பாடிக்கே நிரந்தரமாகக் கொண்டு வர சபதம் எடுக்கிறார்.

கூத்தப்பாடியைச் சேர்ந்த ஊர்க் காதலரும், தங்க மனசுக்காரருமான கணேஷ் ஊத்துக்கோட்டானின் ஆசையில் எப்படி மண் அள்ளிப் போடுகின்றார் என்பதுதான் படத்தின் கதை.

லூசுத்தனமானவர் அன்று; ஆனால், மக்கு நாயகியாக நிவேதா பெத்துராஜ். நாயகனால் காதலிக்கப்பட மட்டுமே திரையில் தோன்றும் வழக்கமான கதாநாயகி என்பதைத் தவிர்த்துச் சொல்லப் புதிதாக ஒன்றுமில்லை. அவரை ஓர் உயர்ந்த லட்சியத்திற்காகக் காதலிப்பவராக உதயநிதி ஸ்டாலின்.

இயக்குநர் இராஜேஷ் படத்தில் வரும் நாயகன் போல் தான் என்றாலும், ஊரின் மீதும், ஊரின் வளர்ச்சியின் மீதும் அதீத அக்கறை கொண்டவராக வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவருக்கும் சூரிக்குமான காமெடிக் காட்சிகள் கிச்சுகிச்சை மூட்டுகின்றனவே தவிர பெரிதும் கலகலப்பிற்கு உதவவில்லை. உதயநிதி ஸ்டாலினின் நடனத்தில் நல்ல முன்னேற்றம் தெரிவது குறிப்பிடத்தக்கது.

படத்தில் வில்லன் என்று யாருமில்லை. ஆனால், ஊத்துக்கோட்டான் என்னும் பாத்திரத்தில் எதிர்நாயகனாகத் தோன்றும் பார்த்திபன் தான் படத்தைக் காப்பாற்றுகிறார். தன் பாணியில் மிகவும் அசால்ட்டாக அந்தக் கதாபாத்திரத்தின் வலிமையை அழுத்தமாகப் பதிந்துள்ளார். அதற்கு அவரது கார் ட்ரைவராக நடித்திருக்கும் மயில்சாமியும் உதவியுள்ளார்.

இயக்குநர் தளபதி பிரபுவின் முதற்படம் இது. ஜாலியான கிராமத்து சப்ஜெக்ட் எனத் தெளிவாக இருந்துள்ளார். ரத்தம் தெறிக்க விடாமல் படத்தின் க்ளைமேக்ஸையும் ஜாலியாக முடித்துள்ளது சிறப்பு. கதாபாத்திரங்கள் மீது இன்னும் கொஞ்சம் மண் மனம் வீசியிருந்தால் படம் இன்னும் கலகலப்பாக இருந்திருக்கும்.