Shadow

அட்சய திருதியையின் அரசியல்

Akshaya Tritiya

லட்சங்களைக் கொட்டிய விளம்பரங்கள். அழகிய பெண்களின் ஜொலிக்கும் நகை அலங்காரங்கள், அணிவகுப்புகள். மாயப்பேச்சுக்கள். மயக்கும் சலுகைகள். தள்ளுபடிகள், தவறவிடாதீரெனச் செல்லமாய் மிரட்டும் பிரபலங்கள். அடுத்த சில தினங்களுக்கு இந்த அட்சயதிரிதியை அத்துமீறல்கள் இன்னும் ஆர்ப்பாட்டமாய் இருக்கும்.

ஒன்றுமில்லாதவைகளை ஊதிப் பெருக்கி ஏதோ வாரது வந்த வாய்ப்பு என்பதைப்போல நுகர்வோரை நம்பவைக்கும் மூளைச்சலவைதான் நுகர்வு கலாச்சாரத்தின் மிகப்பெரிய சாபக்கேடு. இதனால் நுகர்வோருக்கு சின்ன எலும்புத்துண்டுகளும், கார்பப்ரேட் கயவாளிகளுக்கு கொள்ளை லாபமும் சர்வ நிச்சயம்.

சித்திரை மாத அமாவாசையில் இருந்து மூன்றாவது நாள் அட்சயதிருதியை தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழில் மொழிபெயர்த்தால் அள்ள அள்ள குறையாத நாள் எனப் பொருள் கொள்ளலாம். இந்த நாளுக்கு நிறைய புராண கதைகள் இருந்தாலும், அடிப்படையில் இந்த நாளின் நல்ல எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகள் பல்கிப் பெருகும் என்பதுதான் தாத்பரியம்.

என் நினைவில் அன்றைய தினம் முன்னோர்களுக்குப் பூஜை செய்வார்கள். லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று கருதப்படும் பொருட்களான மஞ்சள், அரிசி மற்றும் உப்பு போன்றவைகளை வீட்டில் வாங்கி வைப்பார்கள்.

சுமங்கலி பூஜை செய்வது, வீட்டில் வேலை செய்பவர்களுக்கு, வசதி குறைந்தவர்களுக்கு நம்மால் முடிந்த உணவு, உடை போன்ற பொருட்களைத் தானம் கொடுப்பதும் வழக்கத்தில் இருந்தது. இந்த நாளில் தானம் கொடுப்பவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை. இப்படி லட்சுமி கடாட்சம் இல்லத்தில் நிறைந்திருக்க வேண்டி அனுசரிக்கப்பட்டதே அட்சயதிருதியை. போன தலைமுறை வரை அப்படித்தான் இருந்துவந்தது.

தேவைக்கும் தகுதிக்கும் மீறியவைகளை வாங்கி வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுக்க கடன்களோடும், அதை அடைப்பதற்கான அவஸ்தைகளோடும் வாழவைப்பதுதான் நுகர்வு கலாச்சாரத்தின் அடிப்படை நோக்கம். இது பற்றிய புரிதல்கள் ஏனோ நம்மில் அநேகருக்கு இருப்பதில்லை.

இதற்கு அட்சயதிருதியையும் விலக்கில்லை. நல்லவை பெருகும், லட்சுமி கடாட்சம் நிலைக்கும் என்கிற அடிப்படையைத் திசைதிருப்பி, இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம் குவியும் என்பதைப் போலவொரு மாயகருத்தாக்கத்தை மக்கள் மனதில் ஆழமாக விதைத்து அதன் பலனை அவர்கள் மட்டுமே அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர்.

கல்வி, மருத்துவம், குடும்பச்செலவுகள் என ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் கடன் வாங்கியாவது அட்சயதிருதியை அன்று குந்துமணி தங்கம் வாங்கிவிட வேண்டும் என ஆலாய் பறந்து அதற்காக எந்த எல்லைக்கும் சென்று கணவரோடு சண்டையிடும் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன்.

எல்லோரும் சொல்வதைப் போல மக்களின் அறியாமையை இந்த கார்ப்பரேட் முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்கிற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்மிடம் சுயநலம் அதிகரித்திருக்கிறது. பொதுநலம் பற்றிய அக்கறை குறைந்திருக்கிறது. இந்த பலவீனத்தை வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இது பற்றிய விழிப்புணர்வை இன்னொருவர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. யாருமே நமக்கு இலவசமாய் எதையும் தரப்போவதில்லை. நாம் கொடுக்கும் பணத்தில் அவர்களுக்கான லாபத்தை எடுத்துக் கொண்டு போனால் போகிறது என துளி சலுகை தருகிறார்கள் என்பதை குறிப்பாக பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரையில் ஏமாற்றுகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இந்த நியதியை மாற்ற முடியாது. ஆனால் புரிந்து கொள்ளலாம்.

புரிந்தவர்கள் புத்திசாலி.

இந்த நல்ல நாளில் அன்பும், அறமும் தழைக்கவும் பெருகவும் வேண்டுவோம்.

– லதா