Shadow

இருமுகன் விமர்சனம்

Irumugan Tamil vimarsanam

லவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும் அண்ணீர் (adrenaline) ஊக்கி மருந்தை, உலகின் பயங்கரவாதக் குழுக்களுக்கு வினியோகம் செய்யத் திட்டமிடுகிறான். அதை உளவுத்துறை ரா (RAW) அதிகாரியான அகிலன் வினோத் முறியடிக்க முனைகிறார். நல்லவன் தீயவன் ஆகிய இந்த இரண்டு முகத்துக்கு (பேர்) இடையே நிகழும் சண்டை தான் படத்தின் கதை.

ஸ்டைலிஷான ஹீரோ, மிக ஸ்டைலிஷான வில்லன் என இரண்டு வேடங்களில் வருகிறார் விக்ரம். லவ் எனும் பாத்திரத்தில் அவர் காட்டும் நளினமும் பாவனைகளும் ரசிக்க வைக்கின்றன. ஹாலிவுட் நாயகர்களைப் போலவே, ‘ஃபைட் கிளப்’ ஒன்றில் தாடியுடன் விக்ரம் அசத்தலாய் அறிமுகமாகிறார். அங்குத் தொடங்கி இடைவேளையில் வரும் ‘ட்விஸ்ட்’ வரை படம் மிக விறுவிறுப்பாய்ப் பயணிக்கிறது. அகிலன் பாத்திரத்தின் முரட்டுத்தனமான உடல்வாகிற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறார் விக்ரம். அகிலன் தாடியை எடுத்ததும், முகத்தில் கொஞ்சம் வயோதிகம் எட்டிப் பார்க்கிறது. “தாடியில் பார்க்க நல்லா இருந்தானே!” என லவ் கதாபாத்திரமே அதைக் கலாய்ப்பது சிறப்பு.

பீட்டர் எனும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வருகிறார் கருணாகரன். எனினும் மனதில் பதியும்படி இயல்பாய் இருக்கும் ஒரே கதாபாத்திரமாய் மிளிர்கிறார். படம் நெடுகேயும் தம்பி ராமையா வந்தாலும், கருணாகரனின் பாத்திரத்திற்கு முன் ஒன்றுமில்லை என்றே சொல்லவேண்டும். விக்ரமை வர வைக்க நயன்தாரா போடும் திட்டங்கள் உண்மையில் ’அட’ போட(!?) வைக்கும் ரகம். ஆனால், ஜஸ்ட் லைக் தட் வசனங்களில் அக்காட்சிகள் கடந்து விடுகிறது (இதே கதை, நயன்தாரா பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பயணித்திருந்தால் கூட அட்டகாசமாய் இருந்திருக்கும்). இங்கு நயன்தாராவுக்கு ஓர் அருமையான சண்டைக் காட்சிக்கான வாய்ப்பிருந்தும், அதையே அந்தர் பல்டி அடித்து ஏனோ கடந்து விடுகிறார் இயக்குநர். ‘ஹலெனா’ பாடலோடு நாயகிக்கான முக்கியத்துவம் போதுமென நினைக்கும் நாயகனை மையப்படுத்துகிறது படம். ஆருஷியான நித்யா மேனன், ரா அதிகாரியாக வந்து போனாலும், அதற்கான கேரக்ட்ரைசேஷனோடு இல்லாமல் இருப்பது குறை.

‘லவ்’வின் அறிமுகத்துக்குப் பின் சூடு பிடிக்க வேண்டிய படம், லவ்வாய் விக்ரம் எப்படி நடித்துள்ளார் பார் என்பதை ரசிகனுக்கு உணர்த்துவதிலேயே அக்கறையாய் உள்ளது. ஒவ்வொரு நூலாய்ப் பிடித்து எப்படி லவ்வை அகிலன் நெருங்கிறார் என பார்வையாளனை இழுத்துப் பிடிக்கும் முதற்பாதி, நெல்லிக்காய் மூட்டையைத் திறந்துவிட்டது போல் சிதறுகிறது இரண்டாம் பாதியில். மிகச் சுலபமாய்ச் சிக்குகிறார் லவ்; அதை விடச் சுலபமாய் சிறையில் இருந்து தப்பிக்கிறார்; சாவதானமாய் மால்களில் நடமாடுகிறார்; மிக எளிதாக மருத்துவமனையில் நுழைகிறார்; நினைத்ததை எல்லாம் எந்தச் சிரமமுமின்றி லவ் சாதிக்க திரைக்கதை பணிவாகக் குனிந்து, ‘நீங்க போங்க எஜமான்’ என வழிவிடுகிறது. லாஜிக் ஓட்டைகளைக் களைய இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.

லாஜிக் ஓட்டைகள் எல்லாம் மேட்டரா? எவ்வளவோ படம் பார்க்கிறோம் என ரசிகன் ஓரளவு தயாராகிவிட்டான் என்றே சொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு காட்சியில் எமோஷனலாகத் தன்னைப் பொருத்திக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாவது படத்தில் வந்து விட்டால் கூடப் போதும். நான்கு வருடங்கள் கழித்து தம்பதியான அகிலனும் மீராவும் பார்த்துக் கொள்கின்றனர். ‘மாயநதி இன்று மார்பில் வழியுதே’ என்றளவுக்கு இல்லை எனினும், அதில் கொஞ்சத்திலும் கொஞ்சத்தையாவது கடத்தியிருக்கவேண்டும்.

படத்தின் பிரம்மாண்டமான மேக்கிங்கை ஒவ்வொரு ஃப்ரேமிலும் உணர முடிகிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, இயக்குநர் காட்ட நினைத்த பிரம்மாண்டத்தைத் துளி பிசகாமல் திரையில் கொண்டு வந்துள்ளார். அதே போல், சுரேஷ் செல்வராஜின் கலை இயக்கம் படத்திற்கொரு வரப் பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். முதல் முறையாக, அகிலனும் லவ்வும் சந்திக்கும் காட்சியில் வரும் அந்த சுரங்கம் போன்ற வாயிலும், படிப்படியாக அதில் விளக்கெரிவதும் மிக அட்டகாசம். லவ்-வை பாதி படத்துக்கு மேல்தான் அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர். நாயகனை விட பல மடங்கு அட்டகாசமான அறிமுகத்திற்குத் தகுதியுடையவர்லவ். ஏனோ இயக்குநர், சீன முதியவருக்குத் தந்திருக்கும் அவ்வாய்ப்பினைக் கூட லவ்-வுக்குத் தராமல் போய்விட்டார் இயக்குநர்.

இருமுகன் – சர்வம் ‘விக்ரம்’ மயம்.