Shadow

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

Skyscraper-movie-review

225 மாடிகளைக் கொண்ட விண்ணைத் தொடும், ‘பேர்ள் (Pearl)’ எனும் கோபுர நகரமொன்றை ஹாங்காங்கில் நிர்மாணிக்கிறார் தொழிலதிபர் சாவ் லாங் ஜி. 3500 அடி உயரமான அந்தக் கோபுரத்தின் 96வது தளத்தில், ராக்கின் குடும்பம் மட்டும் தனியாக வசிக்கிறது. ராக், அந்தக் கோபுரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் காவலர் பொறுப்பை ஏற்கிறார். சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பணி புரியும் கோரெஸ் போத்தா எனும் வில்லன், கோபுரத்திற்குள் புகுந்து, 96வது தளத்தில் தீ வைத்து, கோபுரத்தின் தானியங்கி தீயணைக்கும் பாதுகாப்பு வசதியையும் நிறுத்திவிடுகிறான்.

பிரம்மாண்டமான பேர்ள் நகரத்திற்குள் சிக்கிக் கொள்ளும் தன் குடும்பத்தை ராக் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

ட்வெயின் ஜான்சன் எனும் ராக்-கோடு, இயக்குநர் ராசன் மார்ஷல் தர்பர் இணையும் இரண்டாவது படமிது. சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் படத்தில், ஸ்டேண்ட்-அப் காமெடியனான கெவின் ஹார்ட்டோடு ராக்கையும் நகைச்சுவை புரிய வைத்திருப்பார் இயக்குநர் ராசன். அதற்கு ஈடு செய்யும் வகையில், இப்படத்தில் ராக்கை சோலோ ஹீரோவாகக் களமிறக்கி, ராக்கின் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். மிகக் கொடூரமான வில்லன்கள் கிடையாது, வெறுமெனே வில்லன்கள் அவ்வளவுதான்! பிரமாதமான சண்டைக் காட்சிகள் இல்லாவிட்டாலும், படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ஓடுவது, தாவுவது, குதிப்பது, தொங்குவது, ஊசலாடுவது என விறுவிறுப்பான சாகச ஓட்டங்களாக அமைத்துள்ளனர். ஒரு வெடி விபத்தில், ராக் ஒரு காலை இழந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

225 மாடிகள் கொண்ட கோபுரக் கற்பனை அசர வைக்கிறது. நாயகன் அதன் புதிர் அமைப்பைக் கொண்டு வில்லன்களை வீழ்த்துவதாகக் கதைக்களம் இருந்திருக்கலாம். ஆனால், நேரடியாகப் போராடி இலகுவாய் வெல்வதாய் உள்ளது திரைக்கதை. ராக்கின் உடல் திண்மை தான் படத்தின் அச்சாணி. அதனால் அவரது சாகசங்கள் எல்லாம் எடுபடுகிறது.

படத்தின் தன்மையைக் குலைக்காத வண்ணம், தமிழ் டப்பிங்கை நன்றாக ரசிக்கும்படி செய்துள்ளனர்.