ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழ்சினிமாவிற்கே பெரும் எனர்ஜி கொடுத்தபடம் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர். அதன் பிறகு டான் படத்திலும் வசூல்வேட்டை ஆடினார் சிவகார்த்திகேயன். அடுத்து அவரது நடிப்பில், ப்ரின்ஸ் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு இருந்தது.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே வைத்து எழுதப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை நிறைய படங்களாக வந்திருக்கிறது. இருப்பினும் திரைக்கதையை ரசிக்கும்படி உருவாக்கியுள்ளார் இயக்குநர் அனுதீப்.
கடலூர் மாவட்டம் தேவகோட்டை என்ற ஊரில் பள்ளியில் சோஷியல் பாடமெடுக்கும் ஆசிரியராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஒரு நல்ல ஆசிரியர் இல்லை என்பதை ஓரிரு காட்சிகளிலே கவனப்படுத்தி விடுகிறார்கள். சிவகார்த்திகேயன் வேலை செய்யும் பள்ளிக்கு ஆசிரியையாக வருகிறார் பிரிட்டிஷ் மரியா. இருவரும் காதலில் விழுகிறார்கள். இவர்கள் காதலுக்கு சத்யராஜின் எதிர்ப்போடு சேர்த்து மேலும் சில எதிர்ப்புகள் எழுகிறது. முடிவில் ஆசிரியர் சிவகார்த்திகேயன் இளவரசர் சிவகார்த்திகேயன் ஆனாரா என்பதே படத்தின் கதை.
சிவாகார்த்திகேயனிற்கு நன்கு பழக்கப்பட்ட கதாபாத்திரம் என்பதால் வெகு சுலபமாக கேரக்டரோடு ஒட்டிவிடுகிறார். டான்ஸ், டைமிங், குட்டிகுட்டி ரியாக்ஷன்ஸ் என அசத்தியுள்ளார். மரியாவிற்கு நடனமும் நடிப்பும் பெரியளவில் கை வராவிட்டாலும், ஒரு பிரிட்டிஷ் பெண்மணி என்பதற்கு அவர் பக்காகவாகப் பொருத்துகிறார். சத்யராஜ் சில இடங்களில் அடிக்கும் பன்ச்கள் மற்றும் ரியாக்ஷன்கள் அதகளமாக உள்ளது. ப்ரேம்ஜி என்ன செய்தாலும் அது காமெடியாக இருக்கும் என்ற படக்குழுவின் நம்பிக்கை ஒரு சில இடங்களில் எடுபட்டிருக்கிறது. ஒரே காட்சியில் வந்தாலும் சூரி, ஆனந்தராஜ் இருவரும் முத்திரை பதித்துள்ளனர்.
இப்படத்திற்காகப் பாடல்களுக்கு கொடுத்த உழைப்பை இசை அமைப்பாளர் பின்னணி இசைக்கும் கொடுத்துள்ளார். சில இடங்களில் மட்டும் இசையில் சின்னச் சின்ன பிசகுகள். ஒரு டாக்கிங் காமெடி ஜென்ரா படத்துக்கு எப்படியான ஒளிப்பதிவு தேவையோ, அதைச் சரியாகச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்.
படம் துவங்கியதும் இப்படத்தின் நோக்கமும் போக்கும் இதுதான் என்பதைத் தெளிவுப்படுத்திவிடுகிறார் இயக்குநர். அதுவே இப்படத்திற்கு பெரும் பாசிட்டிவாக அமைந்துள்ளது. முன்பாதி முடியும் போது நமது எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் குறைந்து விடுவதால் பின்பாதி நமக்கு அல்டிமேட்டாக வொர்க்கவுட் ஆகிறது. க்ளைமேக்ஸ் காமெடி, போலீஸ் ஸ்டேஷன் காமெடி ப்ரின்ஸ் முதலியவை படத்தின் பக்கா சைட் கிக்கர் எனலாம்.
படம் முழுக்க ஒரு எனர்ஜி இருப்பதால், தீபாவளிக்கு ஃபேமிலியாக என்டெர்டெயின்மென்ட் பண்ண ப்ரின்ஸ் ஒரு நல்ல சாய்ஸ்.
– ஜெகன் கவிராஜ்