Shadow

சர்தார் விமர்சனம்

மக்களுக்கு அலெர்ட் கொடுக்கும் ஒரு விஷயத்தை எடுத்து, அதை டீடெய்லாக அலசி அதில் கமர்ஷியல் சேர்த்து ஒரு பேக்கேஜிங்காக சர்தாரைக் கொடுத்துள்ளது மித்ரன் – கார்த்தி கூட்டணி.

காவல்துறையில் பணியாற்றும் கார்த்தி ஓர் விளம்பரப்பிரியர். அவரது தந்தை சர்தார் ஒரு தேசத்துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டவர். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில், சர்தாரின் பெயரை வைத்து பல அரசியல் நடக்கிறது. மேலும் ஒரே நாடு ஒரே பைப்லைன் என தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் பயன்பாட்டு நீரையும் எடுத்துக் கொண்டு அதன் மூலமாக கொள்ளை லாபம் பார்க்க நினைக்கிறார் ஓர் அதிகார மட்ட வில்லன். அந்த வில்லனுக்கும் சர்தாருக்குமான லிங்கை லைலா ஓப்பன் செய்ய, கார்த்தி அதை ஃபாலோ செய்ய, அடுத்தடுத்து என்ன என்ற சுவாரசியத்துடன் பயணிக்கிறது படம்

தான் ஏற்கும் வேடங்களுக்கு உடல்ரீதியாக நியாயத்தைச் செய்வதில் வல்லவர் கார்த்தி. இரு கதாபாத்திரங்களின் தன்மை உணர்ந்து வேறுபாட்டை அழகாக நடிப்பில் கொண்டு வந்துள்ளார். மகனை விட அப்பா கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டுள்ளதால், குறைவான நேரமே வந்தாலும் சர்தார் மனதில் நிறைகிறார்.

வெகு நாட்களுக்குப் பிறகு திரையில் லைலா தோன்றியுள்ளார். இப்படத்தில், மிகக் காத்திரமாக எழுதப்பட்ட கதாபாத்திரம் அவருடையது எனலாம். அவரும் நன்றாக நடித்துள்ளார். அவரது மகனாக வரும் குட்டிப்பையனும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளான். ராஷி கண்ணா கொடுத்த பணியை மட்டும் செவ்வண்ணே செய்துள்ளார். படத்தில் வில்லனாக வருபவர் அசரடித்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ் பாடல்களில் ஏமாற்றினாலும் பின்னணி இசையில் அதிரடித்துள்ளார். வில்லனின் இடங்களைக் காட்டும் போதெல்லாம் அந்த இடங்களின் ஓசை இயல்பை நமக்குள் இசையால் கடத்துகிறார் ஜீவி. ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு ஒவ்வொரு ப்ரேமிங்கிலும் தனித்துத் தெரிகிறது. நிறைய லொக்கேசன்கள் படத்தில் க்ரீன்மேட்டால் மேட்ச் செய்யப்பட்டுள்ளது. ஆர்ட் டிப்பார்மென்ட் வேலை இப்படத்தில் மிகவும் பாராட்டத்தக்க ஒன்று. சி.ஜி. ஏரியாவில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சர்தாரின் பலமே படத்தில் பேசப்பட்டிருக்கும் விசயங்களுக்கான டேட்டாக்களைக் கச்சிதமாகத் தொகுத்து, அதை இயல்பாக திரைக்கதையில் இணைத்திருப்பது தான். படம் பாமரனுக்கும் புரிய வேண்டும் என்ற மெனக்கெடலை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம் என்று சில இடங்களில் தோன்றியது. மகன் கார்த்தி கேரக்டரின் சரியான நோக்கம் என்ன என்பதை இன்னும் தெளிவாகக் காட்டியிருக்கலாம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்டர் கேன்களுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்தையும் வணிக வலையையும் பேசியதோடு, உண்மையை உயிரைக் கொடுத்து வெளிக்கொண்டு வரும் உளவாளிகள் பற்றிய பார்வையையும் படம் அழகாகப் பதிவு செய்துள்ளது. கார்த்தியின் கேரியரில் இன்னொரு மைல்கல் சினிமா.

– ஜெகன் கவிராஜ்