ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’. தணிக்கை கெடுபிடிகளுக்காக, தலைப்பில், பெண் என்பது ‘பென்’னாக மாறியுள்ளது.
ப்ளே பாயாக சுற்றித் திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி பணம் பார்ப்பான். இல்லையெனில், எடுத்தவற்றை விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பர். அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அவ்வழக்கினைப் போலீசார் துப்புத் துலக்கத் தொடங்குகிறார்கள்.
அரவிந்த், அடுத்து நந்தினி எனும் பெண்ணைக் காதலிக்க, இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர் செல்கிறார்கள். ‘இந்த உலகத்திலேயே தான் தான் மகிழ்ச்சியானவள்’ என்று காதல் பரவசத்தில் நந்தினி நினைக்கிறாள். அவர்கள் வந்த ஜீப் பழுதாகிவிட்டதால் கூடாரத்தில் அவளைத் தனியாக இருக்கச் சொல்லிவிட்டு அரவிந்த் மெக்கானிக் கடை தேடிச் செல்கிறான். அப்போது வரும் ஒரு தொலைபேசி அழைப்பால் அவனது குட்டு வெளிப்படுகிறது.
திரும்பி வந்தவனிடம், பல பெண்களுக்குத் துரோகம் செய்தவன் என்று சீறுகிறாள். ஆனால் அவனோ, ‘இதுவரை கெட்டவனாக இருந்து தவறுகளைச் செய்தது உண்மைதான். ஆனா இப்போது திருந்தி விட்டேன்’ எனக் கூறுகிறான். நந்தினி மீதான காதல் உண்மையென்றும், மனம் திருந்தி நந்தினியிடம் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் மன்றாடுகிறான். ஆனால் அவளோ அவனை வெறுக்கிறாள். அந்தச் சமயத்தில் அவனைத் தேடி போலீஸ் கொடைக்கானல் வந்து விடுகிறது. நந்தினிக்கும், அரவிந்தனுக்கும் மோதல் நடக்க, முடிவு என்னாகிறது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.
சின்னத்திரையில் பரவலாக அறியப்பட்ட நடிகரான ராஜ்கமல் தான் படத்தின் கதாநாயகன் . எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். செல்ஃபோன் மூலம் சிக்கிக் கொள்ளும் பெண்களிடமும் காதல் வசனம் பேசிக் கவரும் போதும், தன் வலையில் சிக்கியவர்களிடம்
மிரட்டும் போதும், நடிப்பில் இருவேறு முகங்களைக் காட்டியிருக்கிறார். ஒரு காதலியாகக் கொஞ்சுவதாகட்டும், துரோகம் அறிந்து குமுறுவதாகட்டும், நாயகி ஸ்வேதா பண்டிட்டும் சிறப்பாக நடித்துள்ளார். ஆபாசப்படம் எடுக்கும் நாசகாரக் கும்பல் பின்னணியில் உள்ளவராக வரும் ஆஃப்ரிக்க நடிகரும் நன்றாகவே வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.
நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் சில அசட்டுத்தனமான காட்சிகள் உள்ளன. பாடல் காட்சிகளில் கொடைக்கானல் மலைப்பகுதியைச் சுற்றி அலைந்து திரிந்து படம்பிடித்துள்ளார்கள். பாடல் காட்சிகளில் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும், விவேக் சக்ரவர்த்தியின் இசைப்பதிவும் ரசிக்க வைக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சியில் காதலியிடம் நாயகன் மன்றாடுவது நாடகத்தனமாக உள்ளது.
வை- ஃபை மூலம் செல்ஃபோன்களின் தகவல்கள் திருடப்படுவதைக் காட்டி , தொழில்நுட்ப வசதிகள் எந்தளவுக்கு ஆபத்தானது, குறிப்பாகப் பெண்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்று எச்சரிக்கிறது படம். செல்ஃபோன்களைக் கொண்டு பெண்கள் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள், ஒரு சாதாரண செல்ஃபோன் மூலம் பெண்கள் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்கிற நல்லதொரு விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் வரதராஜ். அதற்காகப் பாராட்டலாம். ஆனால் சினிமா தொழில்நுட்பம் முன்னேறியுள்ள அளவுக்குக் காட்சிகளில் தரம் இல்லை. சில குறைகளுக்குப் பட்ஜெட் காரணமாக இருக்கும் என்பதால், இப்படத்தை ஜனதா சாப்பாடெனக் கொள்ளலாம்.
(நன்றி: சக்தி சரவணன்)