Shadow

ரங்கோலி – விமர்சனம்

புள்ளி வைத்து கோலம் போடுவது ஒரு அழகான கலை. கோலத்தின் முதல் புள்ளி எது..? முற்றுப்புள்ளி எது என்பதை எவராலும் கண்டறிய முடியாது. ஏனென்றால் கோலத்தினை நீங்கள் எங்கும் தொடங்கலாம், எங்கும் முடிக்கலாம்.  அதன் அழகியலே ஒரு புள்ளியில் தொடங்கி ஒவ்வொரு பக்கமும் அழகாய் விரிவது தான்.  ஆனால் இந்த வரையறை பெரும்பாலும் சினிமாவிற்கு ஒத்துவராது.  ஒரு புள்ளியில் தொடங்கி பல்வேறு பக்கங்களில் விரிவதற்கான அழகியல் அல்ல சினிமா.  அது பல்வேறு கதைகளாகத் துவங்கி ஒரு புள்ளியை நோக்கி குவிதற்கான அழகியல்.  ரங்கோலி திரைப்படம் தவறவிடுவது அதைத்தான்.

படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்ததும், “DON’T JUDGE THE BOOK BY ITS COVER” என்ற சொல்லாடல் நினைவிற்கு வந்தது.  அடுத்து இன்னும் சில காட்சிகள் கடந்ததும், “SOMETIMES WE HAVE TO JUDGE THE BOOK BY IT’S COVER ITSELF” என்று எண்ண வைத்தது.  ஏனென்றால்  படம் துவங்கிய சில நிமிடங்களில் சில காட்சிகளை அடிப்படையாய் வைத்துப் பார்க்கும்  போது கதையின் மையம் சில வருட காலமாக பெற்றோருக்கு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் மீது முளைத்திருக்கும் மையல் தானோ. அதைத் தான் திரைப்படம் விரிவாக பேச இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது.  ஆனால் அடுத்தடுத்து வந்த காட்சிகளில் படத்தின் மையம் எங்கெங்கோ மாறி மாறி பயணித்து, இறுதியில் மையத்தை கண்டறிய முடியாத ஆங்காங்கே அழகான ஒரு வெறும் கோலமாக எஞ்சி நிற்கிறது ரங்கோலி.

அரசு பள்ளியில் படிக்கும் தன் மகன் சத்யா அடிக்கடி பிற மாணவர்களோடு சேர்ந்து சண்டையிட்டுக் கொண்டு மண்டை உடைந்து வருவதோடு,  குடும்பத்தையும் காவல் நிலையம் வரை இழுத்து வருகிறான்.  இதில் வெறுத்துப் போன அவன் தாய் தந்தை இருவரும் எப்பாடு பட்டாவது தங்கள் மகனை தனியார் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து வட்டிக்குப் பணம் வாங்கி தனியார் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள்.  அந்த முடிவு அவனின் வாழ்க்கையையும் குடும்பத்தின் சூழலையும் எப்படி மாற்றியது.  இறுதியில் என்ன ஆனது என்பதே ரங்கோலியின் கதை.

சுவாரஸ்யமான சமூகத்திற்கு தேவையான சிறப்பான ஒன்லைனர். ஆனால் அதில் பயணிக்கும் போது தான் பல்வேறு பிரச்சனைகள்.  எதை நோக்கி கதை பயணிக்க வேண்டும், எப்படி பயணிக்க வேண்டும் என்பதில் தெளிவின்மை இருப்பது திரைக்கதையில் அப்பட்டமாகத் தெரிகிறது.  தான் தனியார் பள்ளியில் படிப்பதால் தன்னுடைய படிப்பிற்கான கட்டணச் செலவுகளை செலுத்த முடியாமல் தன் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதை உணரும் மாணவன்,  அப்பள்ளியை விட்டு தன்னை அனுப்புவதற்கான எல்லா செயல்களையும் தானே செய்கிறான் என்பது  சிறுபிள்ளைக்கான செயல்.  அதை பதின்பருவ மாணவனான நாயகன் செய்வதில் தவறே இல்லை. ஆனால் அது தான் நாங்கள் சொல்ல வரும் கதை என்று ஒரு இயக்குநர் கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

அரசு பள்ளியில் படித்த மாணவன் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டதும் பாடத் திட்டம் மாறுவதால், அதை படிக்க முடியாமல் தடுமாறி, அவமானப்பட்டு மிக மோசமாக படிக்கும் மாணவனாக படிப்பில் ஆர்வம் குன்றிய மாணவனாக மாறினான் என்றால் அதில் ஒரு கதை இருக்கிறது. அல்லது அரசு பள்ளியில் இருந்து வந்த மாணவன் தனியார் பள்ளியில் முதலில் தடுமாறினான், பின்னர் சுதாரித்துக் கொண்டு நன்றாக படித்து நல்ல பெயர் வாங்கினான் என்றால் அதிலும் ஒரு கதை இருக்கிறது. அல்லது தனியார் பள்ளியிலும் நன்றாக படிக்கும் மாணவனாக மாறியவன், மேற்கொண்டு தன் தாய் தந்தையரால் கட்டணம் கட்ட முடியாத சூழல் வரும் போது அவர்களுக்கு தான் எங்கிருந்தாலும் நன்றாகப் படிப்பேன் என்பதை புரிய வைத்து,  பள்ளியில் இருந்து விலகினான் என்று சொன்னால் கூட அதிலும் ஒரு கதை இருக்கிறது.  இது எதையுமே பேசாமல் அப்பா அம்மா மிகவும் கஷ்டப்பட்டு பீஸ் கட்டுகிறார்கள் என்று தெரிந்தப் பின்னர், அதாவது கட்டணமாக பெரும்  தொகையை கட்டியப் பின்னர் அவன் பள்ளியிலிருந்து தன்னை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டான் என்று சொன்னால் அதை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

இதில் தாய் தந்தையர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று ஒரு கதை, தன் கல்யாணத்திற்கு சேர்த்து வைத்த காசைக் கூட அக்காள் தன் தம்பியின் படிப்புக்கு எடுத்துக் கொடுத்தாள் என்று ஒரு காட்சி,  நாயகனின் அக்காளுக்கு ஏற்படும் காதல் உணர்வு, பள்ளியில் நாயகனுக்கும் நாயகிக்கும் ஏற்படும் காதல் உணர்வு,  புது மாணவர்களுக்குள் நாயகியை யார் காதலிப்பது என்பதான போட்டி, சண்டை, பொறாமை,  தமிழ் வாத்தியாரின் அரவணைப்பு, நாயகனுக்கு கிடைக்கும் மற்ற அனைத்து ஆசிரியர்களின் எதிர்ப்பு,  நாயகனின் அப்பாவிற்கு தொழிலில் ஏற்படும் இழப்பு, என்று திரைக்கதை தொடர்பே இல்லாதபடி எங்கெங்கோ பயணிக்கிறது.

அந்த பள்ளி பருவத்துக் காதலை மிகவும் சீரியஸாக அணுகாமல் இயல்பாகக் கடந்திருப்பதும்,  வட்டிக்கு பணம் கொடுக்கும் கதாபாத்திர வடிவமைப்பும் ஒட்டு மொத்த படத்தில் ஆறுதலான விஷயங்கள்.  கடல் மீனைப் போய் குளத்துல போட்டுட்டீயேப்பா என்கின்ற வசனம் அழகானதாக இருந்தாலும் அர்த்தமுள்ளதாக இல்லை.  கடல் மீனை குளத்தில் விட்டால் அது இறந்துவிடும்,  ஆக அரசு பள்ளியில் படித்த பிள்ளைகளை பாதியில் தனியார் பள்ளியில் சேர்த்தால் அவர்களின் படிப்பறிவு பலவீனப்படும் என்பதைத் தான் இயக்குநர் உணர்த்த விரும்புகிறார் என்று வைத்துக் கொண்டால் அதற்கான காட்சிகள் இல்லை. ஏனென்றால் முதலில் தடுமாறிய மாணவன் பின்னர் நன்றாகப் படிக்கத் துவங்குவது போல் காட்சி இருக்கிறது.  எனவே அந்த வசனம் அர்த்தம் இழந்து நிற்கிறது.

அது போல் அரசுப் பள்ளியைத் தான் உயர்வாகக் காட்டுகிறேன் என்கிறார் இயக்குநர். ஆனால் அரசுப் பள்ளியில் காட்டுவதெல்லாம் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு,  ஆசிரியர் மாணவர்களிடம் கெஞ்சிக் கொண்டு நிற்க, மாணவர்கள் காது கொடுக்காமல்  ஓடிக் கொண்டு திரியும் காட்சிகளைத் தான்.  இது எப்படி அரசுப் பள்ளியை உயர்வாகக் காட்டுவதாகும்.  இப்படி படம் நெடுக பல குழப்பங்கள்.

நடிப்பாகப் பார்க்கும் பொழுது அனைத்து நடிகர் நடிகைகளுமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நடிப்புக்கு தீனி போடும் காட்சிகள்  தான் படத்தில் மிகவும் குறைவு.  கணவன் மனைவியாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ்  சாய்ஸ்ரீ பிரபாகரனுக்குமான காதல் கவித்துவமானது.  அக்காளாக நடித்திருக்கும் அக்‌ஷயா ஹரிஹரனும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அதிலும் தன் மேல் மையல் கொண்டு பின்னால் அலையும் ஒருவனை அவர் டீல் செய்யும் இடத்தில் பிரமாதமான நடிப்பு.  அது போல் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ஹமரேஷ் சதீஷ், பிரார்தனா சந்தீப் இருவருமே தங்கள் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.  அமித் பார்கவ் தமிழ் ஆசிரியராக நடித்திருக்கிறார்.

மருதநாயகம் இளங்காமனியின் ஒளிப்பதிவிலும்,  சுந்தரமூர்த்தி குமாரின் இசையிலும் குறைவில்லை.  இயக்குநர் வாலி மோகன் தாஸ் இன்னும் கொஞ்சம் கதையிலும் திரைக்கதையிலும் காட்சி அமைப்பிலும்  கவனம் செலுத்தியிருந்தால் ரங்கோலி அர்த்தப்பட்டிருக்கும்.  இப்பொழுது அது ஆங்காங்கே அழகான ஒரு அர்த்தமற்ற கோலமாக தன்னை சுருக்கிக் கொண்டிருக்கிறது.