32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“காணாமல் போன 2 காளைகளைத் தேடி!” – இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

Dinesh R சேலம் Published: 15/09/2021 2 நிமிட வாசிப்பு Updated: 30/11/2021 சினிமா
எழுத்து அளவு:

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப். 15) நடிகர் சூர்யா வெளியிட்டார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கை பற்றி நையாண்டித்தனத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், செப்டம்பர் 24ஆம் தேதி அன்று, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ ஒரு கிராமீய வாழ்வியலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் திரைப்படம். மனிதநேய உணர்வுகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன், நடிகை வாணி போஜன், நடிகர் மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார், ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளைத் தேடுகிறார்கள். இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன் போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது.

இது தொடர்பாக அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் உள்ளடக்க தேர்வுக்குழு தலைவர் விஜய் சுப்பிரமணியம் பேசுகையில், “ ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் இதயபூர்வமான மனிதர்களின் உணர்வுகளைச் சொல்லும் கதை. சூழலுக்கேற்ற நகைச்சுவையுடன் கூடிய இப்படத்தின் திரைக்கதை, பார்வையாளர்களின் உணர்வுகளுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி முதல் வெளியீடாக ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ வெளியாகிறது. அமேசான் பிரைம் வீடியோ, எப்பொழுதும் வித்தியாசமான கதை சொல்லும் படைப்புகளை ரசனையுடன் தேடி, பார்வையாளர்களுக்கு வழங்குகிறது” என்றார்.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் அரிசில் மூர்த்தி, “இந்தத் திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. இதயபூர்வமான கதையை உயிர்ப்புடன் திரையில் கொண்டுவர படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சோர்வின்றி உழைத்தனர். படத்தில் கதையின் நாயகனான குன்னிமுத்துவின் தேடலில் அனைவருக்கும் பொதுவான உணர்வு பதுங்கி இருப்பதாகவே கருதுகிறேன். இந்தத் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாவதால் சர்வதேச பார்வையாளர்களைச் சென்றடையும். இதனால் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் இப்படத்தை உருவாக்கும்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போலவே, அவர்களும் இப்படத்தைக் காணும்போது சந்தோஷமடைவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.