கலைத் துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்கள் மிகச் சிலரே! அந்த மிகச் சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற செளண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது செளண்ட் டிசைன்கள் உலக பிரசித்திப் பெற்றவை. தற்பொழுது, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்தப் படத்தில் திருச்சூரில் வருடா வருடம் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு செளண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘பாம் ஸ்டோன் மல்ட்டிமீடியா (Palm Stone Multimedia)’ ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குநர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ”இந்தப் படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி என உறுதியாகக் கூறுவேன். கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழா பல லட்சம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடும் விழாவாகும். ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா இது. ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசைக் கருவிகளை வாசிக்கும் அந்தச் சூழல் மேஜிக்காக இருக்கும். இந்த எல்லா ஒலிகளையும் ரெகார்ட் செய்ய ஆசைப்படும் ஒரு செளண்ட் டிசைனராக ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். அவரது நிஜ வாழ்விலும் இது ஒரு நீண்ட நாள் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ‘ஒரு கதை சொல்லட்டுமா’ எனத் தலைப்பிட்டுள்ளோம். ரசூல் அவர்கள் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்ததில் எனக்கு மிகவும் பெருமை. முழு பூரம் திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. எனது அணி பெரும் பாடுபட்டு இந்த அசுர காரியத்தை வெற்றிகரமாக முடித்தது. படப்பிடிப்புக்கு நான்கு மாதங்கள் முன்பே பணிகளைத் தொடங்கிவிட்டோம். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த எண்பதுக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காகப் பூரம் திருவிழா ஒலிகளை ரெக்கோர் செய்வதில் பணிபுரிந்தனர். 22 காமெராக்களை கொண்டு அந்த விழாவில் வசித்து அசத்திய 300க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களைப் படமாக்கியுள்ளோம் . கண் பார்வை இல்லாதவர்களும் கதையை உணர்ந்து ரசிக்கும் படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் ராஜ் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. எங்களது அசுர உழைப்பை மக்கள் கண்டு ரசித்துப் பாராட்டும் நாளை எதிர் நோக்கியுள்ளேன்” என்றார்.