Shadow

பிளேட் ரன்னர் 2049 விமர்சனம்

Blade runner 2049 movie review

படத்தின் கதை 2049இல் நடக்கிறது. 1982இல் வந்த இப்படத்தின் முதல் பாகமான ‘பிளேட் ரன்னர்’ 2019 இல் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தின் தொடர்ச்சி தான் என்றாலும், சுருக்கமாக முன் கதை போல் ரெப்ளிகன்ட்ஸ் என்றால் யார், பிளேட் ரன்னர்களின் வேலையென்ன என்று படத்தின் தொடக்கத்திலேயே எழுத்துக்களாகப் போட்டு விடுவது சிறப்பு. அதனால் முதல் பாகம் பார்க்கவில்லையென்றாலும் கதை நன்றாக புரியத் தொடங்கிவிடும்.

ரெப்ளிகன்ட்ஸ் என்றால் மனிதர்களின் வேலைக்காரர்கள் எனக் கொள்ளலாம். மனிதர்களை விட வலிமையான ரெப்ளிகன்ட்ஸின் உடல், ரத்தம் சதை எலும்புகளால் ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்படும். 2019 இல், அதாவது முதல் பாகத்தில் வரும் ரெப்ளிகன்ட் எல்லாம் நெக்சஸ்-6 வகையைச் சார்ந்தது. அதன் வாழ்நாட்களே மொத்தம் நான்கு வருடங்கள்தான். அதற்கு மேல் உயிர் வாழவிட்டால், அவர்களின் உணர்ச்சிகள் விழித்தெழுந்து விட்டால் மனிதர்களின் இருத்தல் பிரிச்சனயாகி விடும் அல்லவா? நெக்சஸ் – 7 வகையினருக்கு வாழும் உரிமை நீட்டியளிக்கப்பட்டாலும், உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் இருக்க ஒரு நினைவினைப் பதித்து உருவாக்கப்படுகிறார்கள். இந்தப் படத்தின் நாயகன் கே (K), நெக்சஸ் – 9 வகையைச் சேர்ந்தவன். இந்த வகை ரெப்ளிகன்ட்கள் அடிமை சேவகம் செய்யவே தயாரிக்கப்பட்டவர்கள். மனிதர்களின் கட்டளையை மீறவோ, உணர்ச்சிக்கு ஆட்படவோ முடியாத அளவுக்கு மிக உன்னதமான முறையில் தயாரித்திருப்பார் நியாண்டர் வேலஸ்.

முந்தைய மாடல் ரெப்ளிகன்ட்களை ஓய்வு கொள்ளச் (கொலை) செய்யும் பணிக்குப் பெயர் தான் ‘பிளேட் ரன்னர்’. நாயகன் கே-வின் வேலை, மறைந்து வாழும் நெக்சஸ்-8 வகை ரெப்ளிகன்ட்களைத் தேடி ஓய்வு கொள்ளச் செய்வது. அப்படி, கே ஒரு ரெப்ளிகன்ட்டை ஓய்வு கொள்ளச் செய்யும் பொழுது, நெக்சஸ்-7 வகையைச் சேர்ந்த ஒரு பெண் ரெப்ளிகன்ட்டின் எலும்புகள் கிடைக்கின்றன. அது அவனை எங்கு இட்டுச் செல்கிறது, அதனால் அவனுக்கு எழும் அகச்சிக்கல்கள் தான் படத்தின் கதை. அதாவது, நாயகன் ஒரு மனிதனைத் தேடிக் கொல்லவேண்டும்; தேடலில், அந்த மனிதனே தான் தானெனத் தெரிய வருகிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் அற்புதமான க்ளைமேக்ஸ்.

படத்தின் ஜானர் சயின்ஸ் பிக்ஷன் எனத் தடாலடியாகச் சொல்லி விட முடியாது. படம், ரெப்ளிகன்ட்ஸின் அகச் சிக்கல்களைப் பேசுகிறது. அதையும் மிகத் தத்துவார்த்தமாக அணுகுகிறது. அதனாலோ என்னவோ கதையின் நகர்வு, அந்திம காலத்தில் இருக்கும் மிக வயதான ஆமையின் வேகத்தில் உள்ளது. பொறுமையை ரொம்பவும் சோதித்து விடுகிறது. ஆனாலும், விஷூவலில் தெறிக்கும் ஓர் இருண்மைத்தன்மையும், அந்த இருண்மையை பார்வையாளர்கள் மீது படர விடும் படத்தின் அதி அற்புதமான பின்னணி இசையும், முழுப் படத்தையும் பார்க்க வைத்து விடுகிறது. படத்தின் டார்க் டோனுக்கு இன்னும் சில காரணங்களையும் சொல்லலாம். எதிர்காலம், வண்ணமற்று வெறிச்சோடிக் காணப்படுகிறது. 1982 இல் வந்த முதல் பாகத்திலேயே உலகம் அப்படித்தான் சிதைந்த இடமாகக் காட்டப்படும். 3டி கண்ணாடி அவற்றை மேலும் திரையை மேலும் ஒளி குன்றச் செய்து விடுகிறது. இடைவேளைக்குப் பிறகு அறிமுகமாகும், முதல் பாகத்து நாயகனான ஹாரிசன் ஃபோர்ட் நீட்டும் துப்பாக்கி ஒரு கணம் நமக்கு மிக அருகில் வந்து விட்டுச் செல்வதைத் தவிர பெரிதாக ஒரு 3டி எஃபெக்ட்டும் படத்தில் இல்லை.

நெக்சஸ்-9 வகை ரெப்ளிகன்ட்களை உருவாக்கிய நியாண்டர் வேலஸை முதல்முறை திரையில் காட்டும் பொழுது அவரை சில்லவுட்டில் ஏசுவின் சாயலில் காட்டுகின்றனர். அவர் தனது வசிப்பிடத்தைச் சொர்க்கம் என்றே சொல்கிறார். அவர் வரும் காட்சிகளில், அவர் வரும் இடம் அமானுஷ்யமாய் சிவப்பு ஒளியில் நெளிந்து கொண்டே இருக்கின்றன. படத்தில் வரும் அத்தனை லோக்கேஷனும் மனதை ஏதோ செய்யும் வண்ணமே உள்ளது. இயக்குநர் டெனிஸ் வில்னவ், ஒவ்வொரு ஃப்ரேமையும் அதீத கவனத்துடன் செதுக்கியுள்ளார் என்றே சொல்லவேண்டும். இல்லையெனில், 35 வருடங்களுக்கு முன் வெளிவந்து இன்றளவும் கொண்டாடப்படும் ரிட்லி ஸ்காட் இயக்கிய ‘பிளேட் ரன்னர்’ படத்துடன் ஒப்பிட்டு, சுலபமாய் நொட்டை சொல்லி விடுவார்கள்.

கதாபாத்திரங்களின் ‘இருத்தல்’ தான் படத்தின் பிரதான குவிமையமாக உள்ளது. ரெப்ளிகன்ட்டான நாயகன், வேலஸ் நிறுவனத்தின் கருவி ஒன்றை வைத்துள்ளான். பேனா போல் இருக்கும் அதை இயக்கினால், ஒரு ஹாலோகிராஃபிக் பெண் ஒருத்தி தோன்றுவாள். அவள் பெயர் ஜாய் (Joi). அடிமையாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நாயகனுக்கு, ஜாயின் பேச்சுத் துணையே போதுமானதாக உள்ளது. ஆனால், நாயகன் இல்லாத சமயத்தில் தான் கேபின் ஃபீவரால் அவதிப்படுவதாக தனது தனிமையை வெளிப்படுத்தும் ஜோய், நாயகனுடன் உறவு கொள்ள ஒரு பெண்ணை வரவழைக்கிறாள். அந்தப் பெண்ணின் உடம்பில், தன் ஹாலோகிராஃபிக் இமேஜைப் பொருத்தித் தானே உடலுறவு கொள்வதாக மகிழ்கிறாள் ஜாய். தமிழ் சினிமா காட்சி போல், படத்திலொரு அற்புதமான சென்ட்டிமென்ட் காட்சி உண்டு. நாயகனை வில்லி (அடியாள்) அடிக்கிறார். ‘அடிக்காதீங்க’ என ஹாலோகிராஃபிக் இமேஜ் கதறுகிறது. ‘பரவாயில்லையே! எங்க கம்பெனி (வேலஸ்) பிராடக்ட் கஸ்டமரோடு திருப்திக்கு இருக்கு போலவே!’ என அந்தக் கருவியை மிதிப்பாள் அடியாள். வேலஸுக்குப் பணி புரியும் அந்த அடியாள் பெண்ணும் ஒரு ரெப்ளிகன்ட்டே! ரெப்ளிகன்ட்டான நாயகனும், ஒரு ஹாலோகிராஃபிக் இமேஜும் ஒட்டுறவோடு இருப்பதைப் பொறுக்காமல் கருவியை மிதிக்கும் அப்பெண்ணின் பெயர் “லவ்” என்பது அழகான சுவாரசியம். லவ், நாயகனின் ஜாயைப் பறிக்கிறாள்.

ஆனால், உண்மையான சுவாரசியம் என்பது இயக்குநரின் மேதைமையைப் புரிந்து கொள்வதில்தான் உள்ளது. நெக்சஸ்-9 வகை ரெப்ளிகன்ட்டான லவ், ஓர் அடிமையைப் போல! வேலஸ் ஏவுவதை மட்டுமே அவள் செய்யவேண்டும். ஆனால், அவள் தன்னிச்சையாக சிலதைச் செய்கிறாள். அவளுக்கு நாயகனை விடத் தானொரு திறமையான ரெப்ளிகன்ட் என நிரூபித்துத் தன்னிருப்பை உறுதி செய்து கொள்ள நினைக்கிறாள். வெறும் பிம்பமான ஜாய், கே-வைக் குழப்புகிறாள். கே என்பதை நாலேட்ஜ்க்கான குறியீடாகப் பாவிக்கலாம். ‘நீ ரெப்ளிகன்ட் இல்லை. நீ உருவாக்கப்படலை; நீ பிறந்திருக்க. நீ மனிதன். நீ ரொம்ப ஸ்பெஷல்னு எனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும்’ எனத் தூபம் போடுகிறாள். இருவருமே வேலஸின் சொர்க்கத்தில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் என்பதோடு பொருத்திப் பார்த்தால் டெனிஸ் வில்னவின் மேதைமை புரியும்.

இடைவேளையின் பொழுது தானொரு மனிதன் என்ற பிரமையில் சிக்கிக் கொள்கிறான் கே. தானொரு மனிதன் என்ற எண்ணம் எழுந்ததுமே, ரெப்ளிகன்ட்டிற்கான சோதனையில் தோற்று விடுகிறான். அப்படி ரெப்ளிகன்ட் தேர்வில் தோற்றால் அவனுக்கும் ஓய்வு (மரணம்) தான் கதி; ஒரு வேளை அவர்கள் (LAPD) தேடும் மனிதன் அவன் தான் எனத் தெரிய வந்தாலும் கே இறந்து விடுவான். தான் எது அல்லது யாரெனத் தெரியாமல் இரண்டுங்கெட்டான் நிலையில் தவிக்கும் கே, ஒரு கண்ணியமிக்க மனிதனாக இறுதிக் காட்சியில் பரிணமிக்கிறான். அவனின் எந்தச் செய்கை, அவனை மனிதனாக மாற்றுகிறது என்ற புள்ளி பார்வையாளர்களுக்குத் துலங்கும் பொழுது, பார்வையாளர்களும் தங்களுக்குள் இருக்கும் மனிதம் பற்றிய கேள்வியுடனும் நிறைந்த மனதுடனும் அரங்கை விட்டு வெளியே வருவார்கள், ஒருவேளை பாதியிலேயே தூங்கியிராவிட்டால்.!