சில பல காரணங்களினால் ப்ரியா பவானி சங்கரை கொல்லத் துரத்தும் ஒரு கூட்டம். ஒரே ஒரு காரணத்திற்காக ப்ரியா பவானி சங்கரைக் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று எதிர்த்து நிற்கும் விஷால், இந்த இரண்டிற்கும் பின்னால் இருக்கும் பின்கதை, இவை தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் தெறிக்கும் இரத்தம், இவையெல்லாம் சேர்ந்தது தான் ரத்னம்.
வேலூர் பகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ “பன்னீர்” ஆக வரும் சமுத்திரக்கனிக்கு அநீதிக்கு எதிரான அண்டர் கிரவுண்ட் வேலைகள் அனைத்தும் செய்பவராக விஷால் இருக்கிறார். சமுத்திரக்கனியும் ரத்னமாகிய விஷாலை ரத்னம் போல் பொத்திப் பாதுகாக்கிறார். அவர்களுக்குள் அப்படி என்ன பாசப் பிணைப்பு என்பதற்கு ஒரு பின்கதை. திருத்தணியில் இருந்து வேலூருக்கு நீட் தேர்வு எழுத வரும் ப்ரியா பவானி சங்கரைப் பார்த்ததும் வழக்கமான ஹீரோக்கள் உருகுவது போல் விஷாலும் உருகுகிறார். அவர் ஏன் அப்படி உருகுகிறார் என்பதற்குப் பின்னால் வழக்கத்திற்கு மாறான ஒரு பின்கதை. ப்ரியா பவானி சங்கரை ஏன் கொலை செய்யத் துரத்துகிறார்கள் என்பதற்கு கமர்ஸியல் படங்களில் கண்டு சலித்த வழக்கமான மற்றொரு பின்கதை. இவை போதாதென்று வில்லன்களுக்கும் விஷாலுக்குமிடையே வழக்கத்திற்கு மாறான மற்றொரு பின்கதை என, கதையே இல்லாமல் வரும் படங்களுக்கு மத்தியில் பல்வேறு கதைகளை உள்ளடக்கி வெளி வந்திருக்கிறான் ரத்னம்.
கதையாக கவர்வதைவிட ஒரு சில இடங்களில் காட்சிகளால் கவர்கிறான் இரத்னம். குறிப்பாக சில மாஸான காட்சிகளில். உதாரணத்திற்கு விஷாலை கைது செய்ய ஆந்திர போலீஸ் திருத்தணிக்கு வந்து நிற்கும் போது எண்ட்ரி கொடுக்கும் சமுத்திரக்கனியின் வசனம் செம்ம மாஸ். அது போல் கயிற்றில் சுற்றிய அருவாளுடன் விஷாலையும் ப்ரியா பவானி சங்கரையும் கொல்ல வந்த கூட்டத்தை விரட்டி விரட்டி வெட்டிவிட்டு, கிரகபிரவேஷம் நடக்கும் இடத்திற்கு ப்ரியாவுடன் சென்று பேசும் இடம் பக்கா பாஸ்.
இயக்குநர் ஹரிக்கும் ஆந்திர வில்லன்களுக்குமான பல்லாண்டு காதல் இந்தப் படத்திலும் தொடர்கிறது. மற்றொரு கிளைக் கதையாக வரும் கதை ஆந்திர தமிழக எல்லைப்பகுதியில் மாநிலப் பங்கீட்டால் எழுந்திருக்கும் நிலப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதால் லாரி லாரியாக ஆந்திர ரவுடிகளும் வில்லன்களும் இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் இரு மாநில எல்லைக்குமான எல்லைக்கோட்டில் ஒரு துளி இரத்தம் விழுந்து ஆறாக ஓடத் துவங்கும். அது படத்தின் காட்சிகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதற்கான சிம்பாளிக் ஷாட் போலும். காட்சிக்கு காட்சி இரத்த ஆறு ஓடுகிறது. இவர்கள் எல்லாம் மனிதர்களா இல்லை மாமிச பொம்மைகளா…? என்று எண்ணும் அளவிற்கு எத்தனைக் கொலைகள்.
இத்தனை அடிதடி, சண்டை, கொலை, கொள்ளைகளுக்கு இடையில் ப்ரியாவிற்கும் விஷாலுக்குமான அந்த உணர்வுபூர்வமான காட்சிகளும், சமுத்திரக்கனிக்கும் விஷாலுக்குமான உணர்வுபூர்வமான காட்சிகளும் நம் மனதை கொஞ்சம் இதமாக வருடுகின்றன.
விஷாலுக்கு ஆக்ஷன் காட்சிகள் என்றால் கேட்கவா வேண்டும். அடித்து அத்தனை பேரையும் துவம்சம் செய்திருக்கிறார். அவருக்காகவே வடிவமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் போல் ஒவ்வொரு சண்டையிலும் அட்டகாசமாகப் பொருந்திப் போகிறார். ப்ரியா பவானி சங்கரைப் பார்த்தப் பின்னர் வரும் இனம் புரியாத தவிப்பிலும், தன் தாயின் நினைப்பில் மாமா போல இருக்கும் சமுத்திரக்கனியை ஆரத் தழுவிக் கொண்டு அழும் காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவியாக வரும் ப்ரியா பவானி சங்கர் அழகிலும் ஆரவாரமில்லாத நடிப்பிலும் அழகாகவும் ஆழமாகவும் நம்மை கவர்கிறார். தான் எந்த உள்ளடக்கத்தில் அப்படிப் பேசினேன் என்று புரிய வைப்பதற்காக விஷால் முன்னால் கண் கலங்கி நிற்கும் தருணத்திலும், இவன் யார்..? ஏன் தனக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து சண்டையிடுகிறான் என்று புரியாமல் குழம்பிப் போய் விஷாலைப் பார்க்கும் தருணங்களில் அர்த்தமுள்ள உடல்மொழிகளை வெளிப்படுத்தி நடிப்பில் நம்மை வசியப்படுத்துகிறார்.
எம்.எல்.ஏ பன்னீராக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பு அட்டகாசம். உணர்வுபூர்வமான காட்சிகளிலும், விஷாலுக்கு ஏதேனும் ஒரு ஆபத்து என்றால் அவருக்கு முன்பாக வந்து நின்று உயிர் காக்க துடிக்கும் உணர்வெழுச்சி மிக்க காட்சிகளிலும் ஒப்பற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
ஹரி படங்களில் வரும் வழக்கமான காமெடி இணைகளாக இப்படத்தில் யோகி பாபுவும் மொட்டை ராஜேந்திரனும் நடித்திருக்கிறார்கள். யோகி பாபுவின் ஓரிரு ஒன்லைனர்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. அடிதடி தொடர்பான ஆக்ஷன் படம் யோகி பாபுவையும் விட்டுவைக்கவில்லை. அவரையும் அடிதடியில் கதகளி ஆட வைத்திருக்கிறது.
ஜெயப்பிரகாஷ், விஜயகுமார், வி.டி.வி.கணேஷ், ஒற்றைக் காட்சியில் வந்து செல்லும் கெளதம் மேனன் என அனைவரும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கெளதம் மேனன் அவருக்கே உரித்தான ஆங்கிலமும் தமிழும் கலந்த ‘ங்கோத்தா” உச்சரிப்பினால் ரசிகர்களை குஷியாக்குகிறார்.
வில்லன்களாக வரும் முரளி சர்மா, ஹரிஷ் பேரடி மற்றும் முத்துக்குமார் மூவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். மூவரில் நடிப்பிலும் காட்சியிலும் முன்னணியில் நிற்பது முரளி சர்மா தான். முகத்திற்கும் அக்குளுக்கும் பவுடர் அடித்துக் கொண்டு ஆடை மாற்றி கிளம்பி சர்வையரை கொலை செய்யும் காட்சியிலும், அக்கினியாக கொளுந்துவிட்டு எரியும் விஷால் முன்னால் உறைபனியாக உறைந்து நிற்பதுமென விளையாடியிருக்கிறார்.
சுகுமார் பறந்து பறந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்று சொன்னாலும் நம்பித் தான் ஆக வேண்டும் போல. ஏனென்றால் ஆக்ஷன் காட்சிகளில் கேமரா பல அடி தூரம் பறந்து பறந்து காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கிறது. டி.எஸ்.பி யின் பின்னணி இசை ரத்தக்களரியான காட்சிகளுக்கு மேலும் வைஃப் கொடுத்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளுக்குப் பின்னணியில் ஒலிக்கும் பின்னணி இசை நம் நரம்புகளை முறுக்கேற்ற மறப்பதில்லை.
இயக்குநர் ஹரி தன் வழக்கமான கதை சொல்லல் முறையில் சிற்சில மாற்றங்களை முயற்சி செய்து பார்த்திருக்கிறார். அது முழுமையாக அவருக்கு கை கொடுக்கவில்லை. தன் பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரைப் பணயம் வைத்து வந்து, உடல் வருத்திப் பிழைத்து தன் குழந்தைக்கு உயிர் கொடுத்த தாய், ஒரு தவறும் செய்யாதவள் என்பதை முற்றாக உணர்ந்தும், “என் தாயின் வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை” என்று சொல்லும் மகனையும் அவனின் அம்மா செண்டிமெண்டையும் எப்படிப் பார்ப்பது என்று தெரியவில்லை. கற்பு, பெண்ணின் கால்களுக்கு இடையில் இருக்கும் மானம், தவறே செய்யாத தன்னை மகன் பார்த்துவிட்டதால் தற்கொலை என்பதான பழைய கச்சடாப் பொருட்களை விட்டொழியாமல் விடாப்படியாக பிடித்துக் கொண்டு இருப்பது ஏனோ…??
இரண்டாம் பாதியில் அய்யர் குடும்பத்து பின்னணியில் ஒரு பின்கதை வருகிறது. அது படத்தின் மீதான மொத்த பல்ஸையும் இறக்கிவிடுகிறது. ஓரிரு நாட்கள் தங்கிச் செல்ல வந்த விஷாலையே பார்த்துவிடும் அய்யர் குடும்பம், அதே ஊரில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வரும் மல்லிகா(ப்ரியா பவானி சங்கர்)வைப் பார்த்ததே இல்லையா..? விஷால் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இடையேயான தொடர்பு வழக்கமானதாக இருக்கக்கூடாது என்று புதிதாக ஒன்றை யோசித்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும் பொழுது இதற்கு வழக்கமான பின்கதையே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் ரத்னம் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் ஒரு மாதிரியாக இருக்கிறான்.
ரத்னம் – ரத்னம் கம்மி; இரத்தம் தூக்கல்.