Shadow

ஸ்டார் விமர்சனம்

திரைத்துறையில் நாயகனாக சாதிக்க வேண்டுமென்கின்ற கனவுடன் வாழ்ந்து வரும் இளைஞன், தன் கனவை நிஜமாக்க வாழ்க்கையில் என்ன மாதிரியான தடைகளையும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறான், அவற்றைக் கடந்து அவன் தன் கனவை அடைந்தானா என்பதைப் பேசும் படமே இந்த “ஸ்டார்”.

சினிமாவில் சாதிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையின் அவஸ்தைகளில் சிக்கி, சின்னாபின்னமாகி இறுதியில் தன்னை ஒரு புகைப்படக் கலைஞராக நிலைநிறுத்திக் கொண்ட ஒரு நடுத்தர மனிதன் (லால்), தன் ஒட்டுமொத்தக் கனவையும் வளர்ந்து வரும் மகன் (கவின்) தோள்களில் தூக்கி வைக்க, பள்ளியில் ஆறு வயதில் பாரதியார் வேஷம் போட்டு மேடை ஏறப் போகும் மகன் கலை, அப்பாவின் வார்த்தைகளின் வழியே எதிர்காலத்தில் தான் ஒரு நடிகனாக நாயகனாக வரவேண்டும் என்கின்ற கனவையும் தன் மனதில் ஏற்றிக் கொள்கிறான். அந்தக் கனவு அவனை எப்படி தூக்கத்தையும் நிம்மதியையும் தொலைக்கச் செய்து துரத்தியது என்பதை விவரிக்கிறது ஸ்டார் திரைப்படத்தின் திரைக்கதை.

டாடா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இளன், கவின், யுவன் கூட்டணியில் உருவான இந்த “ஸ்டார்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அபிரிமிதமாக இருந்தது. ட்ரைலரும் சொல்லி வைத்து ஜெயித்துக் காட்டும் ஒரு இளைஞனின் கதை என்று கட்டியம் கூறியதாலும், சற்று சாய்வான கோணத்தில் பார்க்கும் போது 80களின் நாகர்ஜூனா தோற்றத்தின் சாயலோடு கவின் திரையில் வலம் வருவதாலும் இளைஞர்களும் இளைஞிகளும் போட்டி போட்டுக் கொண்டு இப்படத்தைக் காணத் துடித்துக் கொண்டிருந்தார்கள். 

பள்ளிக்கூட மாறுவேடப்போட்டி மேடையில் மீசையற்ற பாரதியாக நிற்கும் கவின், ‘மீசையில்லாததை மறந்து இக்கூட்டம் உனக்கு கை தட்டினால், அது உன் நடிப்புக்குக் கிடைத்த வெற்றி’ என்று கூறிய தந்தையின் வார்த்தைகளை பாலபாடமாக மனதில் ஏற்றிக் கூட்டத்தை கைதட்ட வைக்கும் மயிர் கூச்செரியும் காட்சியோடு படம் துவங்குகிறது.

அதைத் தொடர்ந்து சில காட்சிகளுக்கு நாயகனின் பள்ளிக்கால மற்றும் கல்லூரிக் கால சேஷ்டைகள், லீலைகள், நாயகனின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்துவதான காட்சிகள் போன்றவை அடுத்தடுத்து வந்து திரைக்கதை, போக்கிடம் தெரியாமல் சற்று அலைபாய்கிறது.

ஒரு வழியாக நாயகன் நடிப்புப் பயிற்சி பெறுவதற்காக மும்பை செல்லத் திட்டமிடும் காட்சியில் இருந்து மீண்டும் திரைக்கதை சூடு பிடிக்கிறது. மும்பை செல்வதற்கு தேவையான பணம் புரட்டும் முயற்சியில் நாயகன் இறங்க, குடும்பத்தின் வறுமை முகத்தில் அறைகிறது. தூக்கி எறியப்படும் தாயின் தாலிக்கொடியைப் பார்த்து கதிகலங்கும் அந்தப் புள்ளியில் இருந்து நாயகனாகிய கலையின் மனதிற்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் நடக்கும் பல்வேறு மாற்றங்கள் படத்தின் திரைக்கதையை மேலும் கீழுமாக இழுத்து ஒரு வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கக்கூடிய காண் அனுபவத்தைப் பார்வையாளனுக்கு வழங்குகிறது.

டாடா திரைப்படத்தைத் தொடர்ந்து மிகுந்த கவனம் செலுத்தி இந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கும் கவினுக்கு வாழ்த்துக்கள். சுயமுன்னேற்ற நூல்கள் அதிகமாக  விற்பனையாகும் இந்தக் காலகட்டத்தில் இகழப்பட்டுத் தூற்றப்படும் நாயகன் இறுதியில் வெற்றி பெறுகிறான் என்கின்ற டெம்ப்ளேட் மிகச்சிறப்பாக வொர்க்-அவுட் ஆகும் என்பதைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டு, கதையைத் தேர்வு செய்தது மட்டுமின்றி காட்சிக்குக் காட்சி உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்.

பள்ளி மற்றும் கல்லூரி கால போர்ஷன்களில் கவின் நடித்ததாகவே தெரியவில்லை. இதுதான் அவரின் இயல்பான குணாதிசயமோ என்ற தோற்றம் வருவது போல் அக்காட்சிகளில் அநாயசமாக நடித்திருக்கிறார். அப்பாவிடம் தொலைபேசியில் அழும் காட்சியிலும், அலுவலகத்தில் கோபத்தில் வெடித்துக் கத்தும் காட்சியிலும், தோத்துட்டேன்னு சொல்லாதப்பா என்று அப்பாவின் சட்டையைப் பிடிக்கும் காட்சியிலும்  பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கவின் அப்பாவாக வரும் லால், படத்திற்கு மிகப் பெரிய பலம். மிகை உணர்ச்சி நடிப்பு, மிகையற்ற நடிப்பு என காட்சிகளின் தேவைக்கேற்ப விருந்து பரிமாறுகிறார். தன்னிடம் நடித்துக் காட்டும் மகனின் நடிப்பைப் பார்த்து பிரமிப்பதும், தன் தாய் இறந்த வீட்டிற்குள் தன் மகனுக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி உடலடக்கி உணர்ச்சியைக் கொட்டுவதும், பின்னாலிருந்து கட்டியணைத்துவிட்டு செல்லும் மகனின் உணர்வுகளை உடல்வழி வாங்கி உடல்மொழியால் அதை நமக்குக் கடத்தும் காட்சியில் க்ளாசிக்கல் ஆக்டராக மனதில் நிலைக்கிறார்.

அம்மாவாக வரும் கீதா கைலாசத்தின் நடிப்பும் படத்திற்குப் படம் மேம்பட்டுக் கொண்டே வருகிறது. மருத்துவமனையில் கதறி அழும் காட்சியிலும், கோயில் படிக்கட்டுகளில் வைத்து காசில்லை என்று கையேந்தும் மகனிடம் கையில் இருப்பதையெல்லாம் வாரி இறைப்பதுமாக நம் நெஞ்சம் நிறைக்கிறார்.

கல்லூரிக் கால காதலியாக வரும் ப்ரீத்தி முகுந்தன் அற்புதமாக உணர்ச்சிகளை வெளிக்காட்டி அழகாக வசீகரிக்கிறார். வீட்டிற்குள் வந்து தன்னை மிரட்டும் நாயகன் கவினுடன் நடக்கும் உரையாடலின் போது அவர் காட்டும் சின்ன சின்ன ரியாக்‌ஷன்கள் கூட க்யூட் எக்ஸ்பிரஷன்களாக நெஞ்சில் குளுகுளு ஏசி மாட்டுகிறது. இரண்டாம் பாதியில் வரும் அதிதி போங்ஹர் சில இடங்களில் சற்று மிகையான நடிப்பைக் கொடுத்திருந்தாலும், தன் கடந்த காலத்தைப் பற்றியும் நாயகனின் வார்த்தைகள் தன் வாழ்க்கையை மாற்றிய இடத்தைப் பற்றியும் விவரிக்கும் காட்சியில் சத்தமில்லாமல் ஸ்கோர் செய்கிறார்.

ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் காதல் சுகுமார், ராஜா ராணி பாண்டியன், நாயகனை எப்போதும் ஹீரோ என்று கூறி தழுவிக் கொள்ளும் மாமனாக வரும் மாறன், தங்கையாக வரும் நிவேதிதா ராஜப்பன், நடிப்புப் பயிற்சி ஆசிரியராக வரும் சஞ்சய் ஸ்வரூப், நண்பன் குலாபியாக வரும் தீப்ஸ், அலுவலக மேனேஜராக வரும் தீரஜ் என அனைவருமே கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்ப்பது போல் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் மற்றொரு நாயகன் யுவன்சங்கர் ராஜாவின் BGM தான். அதிலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அவரின் பழைய படத்தின் பாடல் ஒன்றைக் கச்சிதமாக ஒரு காட்சியில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்பாடலுக்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. மிகச் சாதாரணமான காட்சியைக் கூட சிறந்த நடிகர்களின் கூட்டணி ஒருபடி மேலே எடுத்துக் கொண்டு வந்தால், தன் பின்னணி இசை என்னும் மாயாஜாலத் திறமையின் மூலம் அதை பலபடிகள் மேலே தூக்கி நிறுத்தும் வித்தையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜாவின் புதல்வன் இப்படத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். படத்தின் சவுண்ட் டிராக்கில் மட்டுமே அவ்வளவு வலியும் உயிரும் இருக்கிறது.

எழில் அரசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கனகச்சிதமாக 1990, 2000, 2015 என காலம் கடக்கின்றன. அந்தந்தக் காலகட்டத்திற்கான காட்சி சட்டகங்களை ஒளியும் வலியும் கலந்து உயிர்ப்புடன் கேமராவில் உறையச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். அவருக்கு ஹாட்ஸ் ஆஃப். படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தான் படம் கொஞ்சம் நீளமோ என்று யோசிக்க வைத்துவிட்டார். படத்தின் கதையை நகர்த்தாத காட்சிகளில் இன்னும் கொஞ்சம் தயவுதாட்சண்யமின்றி கத்தரியைப் போட்டிருக்கலாம்.

இயக்குநர் இளன், பியார் பிரேம காதல் வெற்றியைத் தொடர்ந்து இயக்கி இருக்கும் திரைப்படம் இது. படத்தில் நாயகனின் பாட்டி கதாபாத்திரம் ஒன்று வரும், அக்கதாபாத்திரத்தைk கடைசி வரை காட்டாமலே அக்கதாபாத்திரத்தைக் கொண்டு கதை நகர்த்தியது, ஆடிஷனில் தோற்கும் இடத்தைக் கொண்டே க்ளைமாக்ஸ் காட்சியைப் புதுவிதமாகக் கட்டமைத்து, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையைப் பயன்படுத்திக் கொண்ட விதம், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான நடிகர் நடிகையர்களைச் சிறப்பாகத் தேர்வு செய்தது, துணை கதாபாத்திரம் முதற்கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரத்திடமும் சிறப்பான நடிப்பை வாங்கியது போன்ற பல்வேறு காரணங்களுக்காகப் பாராட்டுகளைப் பெறுகிறார்.

கதையாக எல்லாத் தரப்புப் பார்வையாளர்களிடமும் எளிதில் சென்று சேரும்படியான ஒரு கதையைத் தேர்வு செய்தவிதமும் பாராட்டுக்குரியது. முதல்பாதி மற்றும் இரண்டாம் பாதியில் நாயகனின் இலக்கை நோக்கிய பயணத்தில் சில செயற்கையான இடர்பாடுகளைக் கொண்டு வந்ததும், ஒரு நடிகனாக விரும்புபவன் தன்னை எப்படி தயார்ப்படுத்திக் கொள்வான் என்பதற்கான காட்சிகள் இல்லாததும், கதையை நகர்த்தாத காட்சிகள் கதையின் போக்கை மாற்றுவதும், நாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு இன்னும் கொஞ்சம் கூர் தீட்டாததும் சிறு குறைகள். இந்தக் குறைகளையும் நிவர்த்தி செய்திருந்தால் “ஸ்டார்” ஒரு சூப்பர் ஸ்டாராக ஜொலித்திருக்கும்.

இருப்பினும் கதை மற்றும் மிகச் சிறந்த நடிப்பினால் இந்த ஸ்டாரும் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாய் மின்னுகிறது.