சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நாயகன் 16 வருட காலமாக பரோலில் செல்ல மறுத்து வருகிறான். ஒரு கட்டத்தில் பரோலில் செல்ல சம்மதிக்கிறான். அவன் பரோலில் வெளிவந்த தருணத்தில் அவன் வழக்கோடு தொடர்புடைய நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். போலீஸின் சந்தேகம் நாயகன் பக்கம் திரும்ப துவங்க நாயகன் அப்பழியை மறுக்கிறான். இறந்தவர்கள் எப்படி இறந்து போனார்கள் நாயகனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிப்பதே இந்த சைரன் திரைப்படத்தின் கதை..
துவங்கும் போது லாக்கப் மரண வழக்கு விசாரணையில் வென்று தன் காக்கி யூனிபார்மை மீண்டும் போடும் நாயகி நந்தினி, மற்றும் கைதி யூனிபார்மை கலைந்து தன் சொந்த ஆடையை அணிந்து பரோலில் வெளி வரும் நாயகன் திலகவர்மன் என முரணான பின்னணியுடன் துவங்குகிறது திரைப்படம். பின்னர் நாயகனின் முரணான செய்ல்பாடுகளின் மூலம் காட்சிகளின் வழியே திரைக்கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது. Shadow போலீஸ் ஆக வரும் யோகிபாபு கதாபாத்திரம் செய்யும் கேளிக்கைகள் திரைக்கதைக்கு உதவி இருக்கிறது.
அது போல் ஜெயிலில் இருந்து திரும்பும் தகப்பன் தன் பிள்ளையை பார்க்க தத்தளிக்கும் காட்சிகள், அப்பனுக்கும் மகளுக்குமான உறவில் உள்ள சிக்கல் தன் மகளை தகப்பன் முதல் முறையாக பார்க்கும் தருணம் போன்றவை சிறப்பான காட்சிகள்.
மகளால் வெறுக்கப்படும் அப்பா கைதியாக ஜெயிலில் இருந்து வெளிவரும் அப்பா போன்ற பின்னணிகள் விஸ்வாசம் மற்றும் கைதி போன்ற திரைப்படங்களை நினைவு கூறுகிறது.
புதிராகவே துவங்கும் முதல்பாதி காட்சிகளில் உள்ள எதிர்பார்ப்பு மற்றும் சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் என்ன காரணத்திற்காக இவை நடக்கிறது என்பது தெரியும் புள்ளியில் முற்றாய் வடிந்து விடுகிறது. கதை இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று எதிர்பார்க்க வைத்துவிட்டு இறுதியில் படம் ஒரு பழிவாங்கும் படமாய் தன்னை சுருக்கிக் கொள்கிறது. நாயகனின் குடும்பத்திற்கு அநீதி இளைக்கப்பட்ட பின்னணி கதையும் சற்று அயர்ச்சி கொடுக்கிறது.
திலகவர்மனாக ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரம் மற்றும் கைதி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி சிறப்பாக நடித்திருக்கிறார். தன் மகளை இழிவாகப் பேசும் விடலைப் பசங்களை அடிக்கும் கோபத்திலும் மகள் தன்னைப் பார்த்தால் கஷ்டப்படுவாள் என்பதை உணர்ந்து அவளிடம் இருந்து ஒதுங்கும் பக்குவத்திலும் மிளிர்கிறார் ஜெயம் ரவி. ஷேடோ போலீஸ் ஆக வரும் யோகி பாபுவை தன் காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளூம் நேர்த்தியும் தன்னை தவறு செய்யாதவனாக காட்டிக் கொள்ளும் தந்திரமும் சிறப்பு.
நந்தினியாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிடுக்கான நடிப்பில் கெத்து காட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். லாக்கப் கஸ்டடி மரணத்திற்கு தான் காரணமில்லை என்பது மருத்துவ ரீதியாக நிருபனம் ஆன பின்பும் உயரதிகாரியாக வரும் சமுத்திரக்கனி முதற்கொண்டு பிறர் தன்னை கொலைகாரியாக சித்தரிக்கும் இடங்களில் சீற்றம் காட்டி இருக்கிறார். தொடர்ச்சியாக நடைபெறும் கொலைகளில் இருக்கும் ஒற்றுமையை கண்டறிந்து அதை கண்டுபிடிக்க முயலும் புத்திசாலித்தனம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது. ஆனால் அதே நேரம் நாயகனின் பின்கதையும் அவனுக்கு நேர்ந்த அநியாயமும், அந்த அநியாயம் அதிகாரத்தில் தன்னோடு இருந்தபடி பணியாற்றும் சில அயோக்கியர்களால் நடைபெற்றது என்பது தெரிந்தும் அவர்களை கேள்வி கேக்காமல் காக்க முயலும் இடத்தில் ந்ந்தினியின் நேர்மை காவு வாங்கப்படுகிறது. அந்த கதாபாத்திர வடிவமைப்பும் சேதாரம் ஆகிறது.
பரிதாபத்தைக் கோருவதற்கான கதாநாயகி கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்.. காது கேட்காத வாய் பேச முடியாத கதாபாத்திரம் எந்தளவிற்கு கதைக்கும் திரைக்கதைக்கும் உதவி இருக்கிறது என்று தெரியவில்லை. அனுபமா வாய் பேசமுடியாத காது கேட்காத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்க்றார். ஆனால் எப்போதும் திரையில் அனுபமா மீது ஏற்படும் ஈர்ப்பு ஏனோ இக்கதாபாத்திரத்தில் ஏற்படவில்லை.
வழக்கமான வில்லன் வேடத்தில் முறைப்பு காட்டுகிறார் சமுத்திரக்கனி. இவர்களோடு அழகம் பெருமாள், துளசி, சாந்தினி, அருவி மதன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
ஜீ.வி.பிரகாஷ்குமார் பாடல்களுக்கு இசையமத்திருக்கிறார். சாம் சி. எஸ் பின்னணி இசையமைத்திருக்கிறார். பாடல்கள் மனதை மென்மையாக வருடுகின்றன. பின்ணனி இசை காட்சிகளுக்கு மிகுந்த வலு சேர்க்கிறது.
செல்வகுமாரின் ஒளிப்பதிவில் காஞ்சிபுரத்தின் உள்அழகும் சிறைச்சாலை காட்சிகளும் கச்சிதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
அந்தோணி பாக்கியராஜ். எழுதி இயக்கியிருக்கிறார். வழக்கமான பழி வாங்கல் கதையை வித்தியாசமான திரைக்கதையுடன் கொடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் அவரின் முயற்சி முழுமையாக கைகூடவில்லை. கொலை செய்வதில் இருக்கும் புதுமையும் சுவாரஸ்யமும் கதையிலோ அல்லது திரைக்கதையிலோ இல்லாதது ஏமாற்றம். சாதி இல்லன்னு சொல்றவன் கிட்ட நீ என்ன் சாதின்னு கேக்குறத நிப்பாட்டுங்கடா என ஆங்காங்கே வசனங்கள் ஷார்ப்பாக தெரிந்தாலும் அடுத்தடுத்த வசனங்கள் அந்த ஷார்ப்னஸை காலி செய்கின்றன. முதல்பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லாமல் போவது வருத்தம். சாதிய வன்மம், அதனால் ஏற்படும் முன்பகை, இதனால் நாயகன பழி வாங்கப்படுதல் என பழக்கப்பட்ட பாதையில் கதை பயணிக்கிறது. அது சற்று ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.
மொத்தத்தில் சைரன் பாதி தூரத்திற்கு சைரன் ஒலியுடன் செல்லும் பதைபதைப்புடன் கூடிய பயணமாகவும் மீதி பயணம் சவசவத்த சைரன் அற்ற ட்ராபிக் ஜாம் பயணமாகவும் தேங்கி நிற்கிறது.
– இன்பராஜா ராஜலிங்கம்