Shadow

ரசவாதி விமர்சனம்

குற்றப்பின்னணியுடன் அறிமுகமாகும் ஒரு காவல்துறை அதிகாரி. சித்த மருத்துவம் செய்து கொண்டு, இயற்கை ஆர்வலராக அமைதியான முறையில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சித்த வைத்தியர். இந்த சித்த வைத்தியர் மீதும், அவருக்கு இருக்கும் காதல் மற்றும் காதலி மீதும் இந்தக் காவல்துறை அதிகாரிக்கு தீராத வன்மம். வன்மம் ஏன், வன்மத்தால் விளைந்தது என்ன என்பதே இந்த ரசவாதி திரைப்படத்தின் கதை. மெளனகுரு, மகாமுனி திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 

சித்தவைத்தியர் சதாசிவ பாண்டியனாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். ஒரு காலை சற்று தாங்கித் தாங்கி நடந்து கொண்டு, யானை போன்ற வனவிலங்குகளின் காலில் உடைந்த மதுபாட்டில்கள் காயத்தை ஏற்படுத்திவிடும் என்கின்ற அக்கறையுடன் அவற்றை அப்புறப்படுத்தும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். சந்திராவாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷிற்கு  என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்து உடைந்து அழும் இடத்தில் கண்களைக் கண்ணீரால் நிறைக்கிறார். ஆங்கில மருத்துவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு இடையில் புகுந்து மருத்துவம் பார்க்கக்கூடாது என்று நினைக்கும் பக்குவமும், பிற உயிர்களின் மீதான நேசமும் சதாசிவபாண்டியன் கதாபாத்திரத்திற்கு அழகு சேர்க்கின்றன.

கொடைக்கானலின் தனியார் ரிஸார்ட் மேலாளர் சூர்யாவாக வரும் தன்யா ரவிச்சந்திரனுக்கு பெரிதாக நடிப்பதற்கான ஸ்கோப் இல்லாத கதாபாத்திரம். எப்போதும் அழகால் வசீகரிக்கும் தன்யாவின் அழகு, இப்படத்தில் சற்று தடம் மாறி தடுமாறி இருக்கிறது. சதாசிவபாண்டியனாக வரும் அர்ஜூன் தாஸின் ஒட்டு மொத்தக் கதையையும் கேட்டுவிட்டு ‘உன்னைவிட்டு எப்போதும் போகமாட்டேன்’ என்று கட்டிக் கொள்ளும் இடத்தில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

இன்னொரு நாயகி சந்திராவாக வரும் ரேஷ்மா வெங்கடேஷுக்குப் பல்வேறு உணர்ச்சிகளை வெளிக்காட்டி நடிப்பதற்கான கதாபாத்திரம். அம்மா அப்பாவிற்கு தெரியாமல் தன் காதலனை ரசிக்கும் இடத்திலும், அது தெரிந்துவிட்டதோ என்கின்ற பயத்தில் கைப்புள்ளையாக ரியாக்‌ஷன் கொடுக்கும் இடத்திலும், பரதத்தில் சின்ன சின்ன நெளிவுகளைப் புருவத்தில் துவங்கி கால் விரல் வரை கடத்தி அபிநயம் பிடிக்கும் இடங்களிலும் ஆசையாக அள்ளி அணைக்கத் தோன்றுகிறது. கடைசியாக அவர் பேசிச் செல்லும் அந்த வசனத்தின் போது கொப்பளிக்கும் கோபம் அவரின் நடிப்பிற்கான அக்மார்க் அங்கீகாரம் பெறுகிறது.

காவல்துறை அதிகாரி பரசுவாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஜித் சங்கர் ஒட்டுமொத்த படத்தின் வில்லத்தனத்தையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறார். எலுமிச்சையைப் பிழியும் கட்டையை வைத்துக் கொண்டு விசாரணை கைதிகளுக்கு இவர் கொடுக்கும் ட்ரீட்மென்ட் வியர்த்து விறுவிறுக்க வைக்கிறது. ஒவ்வொருவரையும் உதாசீனத்துடன் உதட்டசைவில் வசைபாடிக் கொண்டு எதிர்கொள்வதும், விழிகளை உருட்டி ஒட்டுமொத்த முகத்தையும் உவ்வே செய்வதன் வழி தன் மன அழுத்தத்தை குறைக்க முயல்வதுமாக நடிப்பில் ஒரு வித்தியாசமான விருந்து படைத்திருக்கிறார். எதிர்மறை கதாபாத்திரம் என்றாலும் இவர் அடிக்கும் கவுண்டர் வசனங்களுக்கு ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்து சிரிக்கிறது. மலையாளம் கலந்த அவரின் தமிழ் பேச்சுமொழியும் அந்தக் கதாபாத்திரத்தின் எதிர்மறைத்தன்மைக்கு வலு சேர்த்திருக்கிறது.

உளவியல் மருத்துவர் சைலஜாவாக வரும் ரம்யா சுப்ரமணியன் கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டு கலகலப்பிற்கு வழிவகுத்திருக்கிறது. ரம்யா சுப்ரமணியனுக்கும், சுஜித் சங்கருக்குமான உரையாடல்கள் ப்ளாக் க்யூமர் வகையறாவில் அமைந்து ஒட்டுமொத்த படத்தையும் கலகலப்பாக்குகின்றன. சப் இன்ஸ்பெக்டராக வரும் ஜி.எம்.சுந்தர் தன் நடிப்பால் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார்.

தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஆனால் பின்னணி இசை படத்திற்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பாடல் இல்லாமல் பின்னணி இசைத் துணுக்கை கொண்டு மட்டும் நகரும் அந்த டைட்டில் போர்ஷனும், அந்த மான்டேஜ் காட்சியும் அத்தனை புதுமையாகவும் சுகானுபவமாகவும் இருக்கின்றன. தேவைப்படும் இடங்களில் இரக்கத்தையும் இறுக்கத்தையும் மாறி மாறி வழங்கி இசை ஆவர்த்தனம் புரிந்திருக்கிறார் தமன்.

சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் குளுமையை ஒவ்வொரு ஃப்ரேமிலும் உணர முடிகின்றது. சிவராஜ் சமரனின் கலை இயக்கம் காட்சிக்கும் கதைக்கும் பக்கபலமாக இருந்திருக்கிறது. படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் தன் எடிட்டிங் திறமையால் படத்திற்கு பல்வேறு இடங்களில் வேறொரு கலரைக் கொடுத்திருக்கிறார். ஸ்டன்ட் மாஸ்டர் ஆக்‌ஷன் பிரகாஷ் இயக்கத்தில் தைல மரங்களுக்கு பின்னணியில் நடக்கும் சண்டைக்காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மலையாளிகள் பக்கத்து எல்லைக்கு வந்து குப்பையைக் கொட்டி தங்கள் மாநிலத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதையும், டாப் 10 திரைப்படங்கள் வெளியிடுபவர்களையும், மக்களுக்காகப் போராடத் துடிக்கும் நண்பனிடம் இந்த மக்கள் எப்படிப்பட்ட பிராய்லர் கோழிகளாக மாறிவிட்டார்கள் என்பதையும் பகடி செய்திருக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.

அதுபோல் சுஜித் சங்கர் கதாபாத்திரம், ரம்யா சுப்ரமணியத்தைத் தனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்லும் காரணமும், அவளுக்கு இறுதிக் காட்சியில் அறிவுரை கூறும் இடமும் கலக்கல். அம்மா அப்பா சண்டையினால் பாதிக்கப்படும் ஒரு சிறுவனின் உளவியல் பிரச்சனை, அதனோடு வாழ்க்கையின் திரைக்கதை திருப்பங்களால் நிகழும் சிக்கல்கள் அந்த உளவியல் சிக்கல்களை அதிகமாக்கினால், அதன் விளைவுகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார். சமணர் குகைகள் இருக்கும் படுகைகளைக் குவாரிக்காக உடைக்கும் அரசியலைப் பேசி இருப்பது நல்ல விசயமாக இருந்தாலும், கதைக்குத் தேவையானதான தென்படவில்லை. அர்ஜுன் தாஸுக்கும் தன்யாவிற்குமான காதலில் ஈர்ப்போ, அழகோ, சுவாரசியமோ, ஆழமோ இல்லாததும் ஒரு குறை. அது போல் கடைசியாக அர்ஜுன் தாஸுக்குத் தெரியவரும் உண்மை பல நிமிடங்களுக்கு முன்பே பார்வையாளர்கள் யூகித்து விடுவதும் ஒரு பின்னடைவு தான்.

இவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சிறப்பான வசனங்கள், கொஞ்சம் புதுமையான கதை மற்றும் கதைக்களம், சிறப்பான நடிப்பு, சிறப்பான இயக்கம் மற்றும் சிறப்பான பின்னணி இசை போன்றவை ரசவாதியை நம் இனவாதியாக மாற்றுகின்றன.

ரசவாதி, ரசிக்கலாம்.

– இன்பராஜா ராஜலிங்கம்