Shadow

ரிப்பப்பரி விமர்சனம்

RIP Up Bury எனும் ஆங்கிலச் சொற்களைத் தலைப்பாக்கியுள்ளனர்.

சமையல் சேனல் வைத்திருக்கும் யூட்யூபர் சத்யராஜிற்கு, நண்பர்கள் இருவருடன் ஊர் சுற்றி வருவதைப் பிரதானமாகக் கொண்டுள்ளார். அவரது வீடியோவில் கமென்ட் போடும் கோல்டன் ஃபிஷ் எனும் பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறார் சத்யராஜ். அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து காதலில் வெற்றி பெறலாம் எனப் பார்த்தால், மாற்று ஜாதியில் காதலிக்கும் ஆண்களின் கழுத்தை அறுக்கும் சாதிவெறி பிடித்த பேய் ஒன்று அச்சுறுத்தலாக முளைக்கிறது. சத்யராஜ், அந்த சாதிவெறி பிடித்த சைக்கோ பேயை மீறிக் காதலில் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

படத்தின் தொடக்கமே மிரட்டலாக உள்ளது. ஊரை விட்டுக் காதலியுடன் ஓடத் துடிக்கும் காதலனின் தலையைக் கொய்து போஸ்ட் பாக்ஸில் போடுகிறது பேய். பால் கேனுக்குள், டூ-வீலர் பெட்ரோல் டேன்க்கில் எனக் கொல்பவர்களின் தலையைச் சாத்தியமே இல்லாத இடத்தில் எல்லாம் வைத்துவிட்டு உடலைத் தூக்கிச் சென்றுவிடும் பேய். கரும்புகையாக வரும் பேய், பெரிய பட்ஜெட் பேய்ப் படங்களை விடவே அச்சுறுத்தும் விதம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சத்யராஜாக மாஸ்டர் மகேந்திரனும், அவரது நண்பராக நோபல் K. ஜேம்ஸும், மற்றொருவரும் அறிமுகம் ஆனது முதலே படம், நகைச்சுவைக்கு முயலும் தட்டையான திரைக்கதையால் நீர்த்துப் போய்விடுகிறது. முதல் பாதி முழுவதுமே, நோக்கமற்ற நண்பர்களின் பயணமாகவே இருக்கிறது. பேயை, நாயகன் நேருக்கு நேர் சந்திக்கும் இடத்தில் இடைவேளை வருகிறது. பேயைப் பற்றிய ஃப்ளாஷ்-பேக்கிற்குப் பின், பேயை எப்படி நாயகன் சமாளிக்கிறான் என இரண்டாம் பாதி, முதற்பாதியை விட கதையோடு ஒழுகிப் பயணிக்கிறது.

சீரியஸான பேய் த்ரில்லர் படமாகக் கொண்டு செல்ல எல்லா வாய்ப்பும் இருந்தும், நகைச்சுவைப் படமாக மடைமாற்றியுள்ளார் இயக்குநர் நா. அருண் கார்த்திக். ஆனால், மாஸ்டர் மகேந்திரனின் சில காமிக்கல் எக்ஸ்பிரஷன்கள், நோபல் K. ஜேம்ஸின் முக பாவனைகள், க்ளைமேக்ஸில் பேயுடனான நக்கலைட்ஸ் தனத்தின் பேச்சுவார்த்தை போன்ற காட்சிகளைத் தவிர்த்து நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை, என்றாலும் கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம் ஆகியோரின் துணையோடு ரிப்பப்பரியைப் பத்திரமாகக் கரை சேர்த்துள்ளார் நா. அருண் கார்த்திக்.