Shadow

சொப்பன சுந்தரி விமர்சனம்

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

பிறரது பொருளுக்கு ஆசைப்பட்டால் துன்பம் வந்து சேரும் என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. அதை டார்க் காமெடியாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் SG சார்லஸ்.

சிவப்பு நிறக் கார் என்றால் சொப்பன சுந்தரியும், சொப்பன சுந்தரி என்றால் சிவப்பு நிறக் காரும் ஞாபகத்திற்கு வருமளவு, கரகாட்டக்காரனில் வரும் அந்த நகைச்சுவைக் காட்சி அவ்வளவு பிரபலம். இப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிறக் கார் வருவதால், படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ எனப் பெயரிட்டுள்ளார் இயக்குநர் SG சார்லஸ். இவர், இயக்குநர் மோகன் ராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முதற்படமான ‘லாக்கப்’பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகைமையில் இப்படத்தை எடுத்துள்ளார்.

வறுமையில் தவிக்கும் அகல்யாவிற்கு ஒரு சிவப்பு நிறக் கார் ஒன்று பரிசாகக் கிடைக்கின்றது. காரை வரதட்சணையாகக் கொடுத்தால் வாய் பேசமுடியாத அகல்யாவின் அக்கா தேன்மொழிக்குக் கல்யாணமாகும். தேன்மொழி, அவளுக்குக் கணவனாக வரப் போகிறவரும் காரில் செல்லும்பொழுது ஏற்படும் விபத்தில் ஒருவன் இறந்துவிடுகிறான். அந்தப் பிணத்தைக் கார் டிக்கியில் வைக்கின்றனர். நகைக்கடையின் குலுக்கல் முறையில் கிடைத்த அந்தக் கார் தனக்குச் சொந்தமானது என, அகல்யாவின் அண்ணன் துரை சண்டையிட, கார் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அந்தக் கார் யாருக்குக் கிடைத்தது, காரில் இருந்த பிணத்தால் என்ன மாதிரியான பிரச்சனை எழுகின்றது என்பதே படத்தின் கதை.

அகல்யாவாக ஐஸ்வர்யா ராஜேஷும், தேன்மொழியாக லக்ஷ்மி ப்ரியாவும், இவர்களின் அம்மாவாக தீபா ஷங்கரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு உத்திரவாதமளிக்கும் கதாபாத்திரத் தேர்வு படத்தின் பலம். லக்ஷ்மி ப்ரியாவிற்கு ஜோடியாக ஷா ரா, ஷா அரா -விம் அம்மாவாக நக்கலைட்ஸ் தனம், இன்ஸ்பெக்டராக சுனில், டேஞ்சர் மாமாவாக மைம் கோபி, ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் துரையாக கருணாகரன், மைம் கோபிக்கு உதவும் நபராக ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

மனிதன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும் பொழுது, அவன் முன்னால் இருக்கும் சரி, தவறு எனும் தேர்வுகள் மறைந்து, சூழலில் இருந்து விடுபடுவதற்கான மார்க்கத்தையே தேர்ந்தெடுப்பான். குடியால் உடல் குலைந்து படுத்த படுக்கையாக இருக்கும் குடும்பத் தலைவரால் (!?), ஒரு பயன் நேரிடுகிறது என்றால், அதை உபயோகித்துக் கொள்வதா அறமா? இயக்குநர் அந்த அத்தியாயத்தை நகைச்சுவையாகக் கையாண்டிருந்தாலும், முகத்தில் அறையும் உண்மையை இயல்பாகக் கடக்க சற்று சிரமமாகவே உள்ளது.

நகைக்கடையில் இருந்து காரைப் பரிசாகத் தரும் போதே திருக்குறள் எழுதித் தருகின்றனர். அடடே! படம் ஒரு தட்டையான நகைச்சுவையாக இல்லாமல், முதற்பாதியில், எதிர்பாராத் திருப்பங்களுடன் கூடிய டார்க் காமெடியாக ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு நிறைவைத் தரும்படியான முடிவாகப் படம் அமைந்துள்ளது.