Shadow

அழகென்ற சொல்லுக்கு அமுதா விமர்சனம்

Azhagendra Sollukku Amudha Review

நாயகி கதாபாத்திரத்தின் பெயர் அமுதா என்பதை எந்தச் சிரமமுமின்றி யூகிக்கலாம். வியாசர்பாடியைச் சேர்ந்த நாயகன், நாயகியின் பிறந்தநாளுக்கு ஒரு கவிதை எழுதுகிறான். அதன் முதல் வரி தான் படத்தின் தலைப்பு.

நாயகன் ரிஜன் சுரேஷ் நாயகி ஆர்ஷிதாவைக் காதலிக்கிறான். நாயகிக்கு அவனைச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. ஆனால், நாயகியைச் சுற்றுவதையே முழு நேர வேலையாகச் செய்கிறான். நாயகி கோபமாகத் தன்னை விட்டுவிடுமாறு கேட்கிறாள். நாயகன் ரொம்ப ஃபீலாவதால், டாஸ்மாக்கில் இருந்து அவனது நண்பர்களை அவனை அழைத்துக் கொண்டு துரைப்பாக்கம் மேம்பாலத்துக்கு வந்துவிடுகிறார்கள் ஒரு பாட்டுடன்.

வியாசர்பாடி
அண்ணன் கேடி
வந்தா லேடி
தந்தா தாடி

என நாயகனின் சோகத்தைப் பாட்டாகப் படிக்கிறார்கள். நாயகி பொறுத்துக் கொள்ள முடியாமல் காவல் நிலையத்தில் புகார் தருகிறாள்.

“அதான் பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க இல்ல? ஏன்டா பின்னாடியே போய் டார்ச்சர் செய்ற?” – போலிஸ்.

“நீங்க அக்யூஸ்டு கிட்ட இருந்து உண்மையை வர வைக்க என்ன சார் செய்வீங்க?” – நாயகன்.

“விசாரணை செய்வோம்.”

“நான் லவ் பண்றேன் சார். உண்மையை வர வைக்க நீங்க டார்ச்சர் செய்ற மாதிரி, உள்ளுக்குள் இருக்கிற லவ்வை வர வைக்க நான் டார்ச்சர் செய்றேன்.”

போலிஸ் அதிகாரி நாயகியைத் தனியாக அழைத்து, “ரொம்ப முத்திடுச்சும்மா. ஒன்னும் செய்ய முடியாது” எனச் சொல்லிவிடுகிறார். நாயகனின் தந்தையும் நாயகனை வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுகிறார். அப்படி ஒரு நாயகன் அவர். அவரைச் சகித்துக் கொள்வது மிக மிகச் சிரமம்.

அழகென்ற சொல்லுக்கு முருகா

படம் பார்ப்பவர்களுக்கு, இயக்குநர் மீது பயங்கரக் கோபமும், நாயகி மீதும், இவ்வாறு தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்கள் மீதும் பரிதாபம் எழும். ‘இந்த டார்ச்சரில் இருந்து ஒரு விடிவு இல்லையா?’ என ஒரு கையறு நிலைக்குப் படம் இட்டுச் செல்கிறது. ஆனால், இவ்வளவு செய்யும் நாயகன் சிரித்த முகமாகவே கடைசி வரை இருக்கிறான். இழுத்து இழுத்து வசனம் பேசும் நாயகனின் தொனி, முதலில் சசிகுமாரை இமிடேட் செய்றாரோ அல்லது ஸ்பூஃப் மூவியோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. ஆனால், சீரியசான வசனங்களையும் நாயகன் அப்படித்தான் பேசுகிறார். மன்னிக்கணும். படத்தில் சீரியசான வசனங்களே இல்லை; அதோடு அனைத்துக் கதாபாத்திரங்களுமே அப்படித்தான் இழுத்து இழுத்துப் பேசி ஒரு வழியாக்குகிறார்கள். நாயகன் இதில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக வருகிறார். அவனது நடை, உடை, பாவனை எல்லாமே ஒரு வெறி கொண்ட தமிழ் திரைப்பட ரசிகனின் பிரதிபிம்பம் எனக் கொள்ளாலாம். நண்பர்களைக் காப்பாற்ற போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய், ‘தளபதி’ பட வசனத்தைப் பேசும் காட்சி ரசிக்க வைத்தாலும், ஒட்டு மொத்த படமுமே அப்படித்தான் எனும் பொழுது கடியாகிறது. நல்ல கதை அமைந்திருந்தால், கவனிக்கத்தக்க நடிகராக மிளிர்ந்து இருப்பார் ரிஜன் சுரேஷ். படத்தின் பெரிய பிளஸாக கல்யாண்ராமின் ஒளிப்பதிவைச் சொல்லலாம். ராஜின் மகாதேவின் இசையில் பாடல்கள், குறிப்பாக 2 கானா பாடல்களுமே, ரசிக்க வைக்கின்றன.

காதல் தான் ஒரே இறுதி உண்மை என நம்பும் ரசிகன் ஒருவனைப் பற்றிப் படமெடுக்கும் உரிமையும் சுதந்திரமும் இயக்குநர் நாகராஜனுக்கு இருக்கிறது. ஆனால், காதலில் வெற்றி பெற அந்தப் பெண்ணின் சம்மதம் கூடத் தேவையில்லை என்ற பொருள்படும்படி படத்தை முடித்திருப்பதற்குக் கடுமையான கண்டனங்கள். நாயகி செருப்பெடுத்துக் காட்டுகிறாள். நாயகனோ, “அவ ஆழமா என் மனசுக்குள் போயிட்டா” என வீட்டுக்குள் அமர்ந்து தண்ணியடிக்கிறான் வேலைக்குப் போகணும் என்ற எண்ணம் கூட இல்லாத நாயகன். வெளிப்பூச்சுக்கு நகைச்சுவைப் படம் போல் தெரிந்தாலும், ஒட்டுண்ணியாய் நிழலாய்ப் பெண்ணைத் தொடர்ந்து டார்ச்சர் செய்வதை ஹீரோயிசமாக முன் வைக்கும் மிக ஆபத்தான கருவினை முன் வைக்கிறது. படத்தின் க்ளைமேக்ஸோ படக் கருவினையும் மிஞ்சும் அபத்தம்.