விருமாண்டியும் சிவனாண்டியும் முறையே இரண்டு ஊரின் தலைக்கட்டுகள். அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆனால், படம் அந்த ஊர்களைப் பற்றியோ, அந்தப் பிரச்சனையைப் பற்றியோ, அந்தத் தலைக்கட்டுகள் பற்றியோ அல்ல. படத்தின் தலைப்புக்கு மட்டுமே காரணமாக உள்ள கதாபாத்திரங்கள் அவர்கள்.
50 வயதாகும் தம்பி ராமையா, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஒரு லைவ் குறும்படம் எடுத்துச் சாதிக்க நினைக்கிறார். அதன்படி, பிசினஸ் செய்ய நினைக்கும் அறிமுக நாயகன் சஞ்சயை ஏமாற்றி தன் படத்தில் நடிக்க வைத்து, நாயகி அருந்ததி நாயருக்குத் தெரியாமல் கேண்டிடாக ஷாட்கள் எடுத்துப் படத்தை முடித்து விடுகிறார். நாயகியோ விருமாண்டியின் மகள். பிரச்சனை பெரிதாகி நாயகனின் குடும்பமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. பிறகு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
புதுமுகம் சஞ்சய் நன்றாக நடனம் ஆடுகிறார்; நடிக்கவும் செய்கிறார். அதிகம் யோசிக்க விடாமல், முதல் பாதி படம் கககலப்பாய்ப் போகிறது. இரண்டாம் பாதியில், மயில்சாமி, ரோபோ ஷங்கர், மனோ பாலா, சோனா, டெல்லி கணேஷ், டி.பி.கஜேந்திரன் என நடிகர் பட்டாளத்தை இறக்கி, படத்தின் நீளத்தைக் கூட்டி விடுகிறார். இந்த அத்தியாயங்கள், பிரதான கதையின் மீதான தாக்கத்தைக் குறைத்து விடுவதோடு, நிறைவில்லாமல் தொக்கி நிற்கிறது. மீண்டும் க்ளைமேக்ஸில் கதைக்கு வரும் படம், யூகத்துக்கு உட்பட்ட நாடகத்தன்மையோடு முடிகிறது.
தம்பி ராமையாவைக் கூட படத்தின் நாயகன் என்று சொல்லலாம். காரணம், படம் முழுவதும் அவர் வருவதோடு, பிள்ளைகள் மீது நம்பிக்கையில்லா பெற்றோர்களைப் பற்றிச் சொல்லி சுபமாக படத்தை முடித்தும் வைக்கிறார். நாயகனின் நண்பனாக ஆடுகளம் முருகதாஸ் நடித்திருக்கிறார். கொஞ்சம் காட்சிகள் தான் எனினும், வழக்கம் போல் யோகி பாபு தான் தோன்றும் காட்சிகளை எல்லாம் ஈர்க்கிறார். இயக்குநர் வின்செண்ட் செல்வா படத்தின் நீளத்தில் கொஞ்சம் சமரசம் செய்திருந்தால், க்ரிப்பிங்கான காமெடிப் படமாக இது அமைந்திருக்கும்.