Shadow

சண்டக்கோழி 2 விமர்சனம்

Sandakozhi-2-movie-review

2005 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் சண்டக்கோழி. சண்டைக்கு முந்தி நிற்கும் ஆளெனத் தலைப்பைப் பொருள் கொள்ளலாம்.

ஒரு கொலையால், வேட்டைக் கருப்புக் கோவிலின் திருவிழா ஏழு வருடங்களாக நடைபெறாமல் தடைப்படுகிறது. மீண்டும் அத்திருவிழா நடைபெற்றால், அன்பு எனும் இளைஞனைத் திருவிழாவில் வைத்துக் கொல்ல, வரலக்‌ஷ்மி குடும்பத்தினர் காத்திருகின்றனர். அன்புவையும் காப்பாற்றி, திருவிழாவையும் எப்படி ராஜ்கிரணும் விஷாலும் நடத்துகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு மீரா ஜாஸ்மின் மிக முக்கிய காரணம். அதை மனதில் வைத்துக் கொண்டு, கீர்த்தி சுரேஷை மீரா ஜாஸ்மின் ஆக்கிடப் படாதபாடு பட்டுள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் தூக்கி வீசிடுவேன் என்ற மதமதப்போடே வளைய வருகிறார் விஷால். எப்படியும் அனைவரையும் துவம்சம் செய்துவிடுவார் என்று ரசிகர்களுக்குத் தெரியாதா? அதைச் சுவாரசியமாகச் சொல்லவேண்டாமா? 7 நாள் திருவிழா பல மாதங்கள் நீள்வது போல் உள்ளது.

மழை பெய்து வரலட்சுமியின் பொட்டு அழியும் க்ளைமேக்ஸ் எல்லாம், சிந்தனை அளவிலும், திரைக்கதை அமைப்பிலும், அகழ்வாராய்ச்சிக்குச் சொந்தமான ஒன்று. தோண்டி எடுத்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி. பார்வையாளர்களுக்கு எங்குப் புரியாமல் போய்விடுமோ என்று, “அங்க அவுக எல்லாத்தையும் மிச்சம் வைக்காம முடிச்சிட்டாக” என்கிறார்  ராஜ்கிரண் திரிகால ஞானி கணக்காக. தேவர் மகன் 2 எடுக்கிறோம் என்ற பிரமை இயக்குநருக்கு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் எட்டிப் பார்க்கிறது. எல்லாக் களேபரத்துக்குப் பிறகும், ஆயுதங்களைக் கீழே போடும்படியாக க்ளைமேக்ஸ் அமைத்து வயிற்றில் பாலை வார்க்கின்றனர்.