Shadow

சட்டமும் நீதியும் விமர்சனம் | Sattamum Neethiyum review

தனது மகள் வெண்ணிலாவைக் கடத்தி விட்டார்கள் என்று காவல்நிலையத்தில் புகாரளிக்கச் செல்கிறார் குப்புசாமி. காவல்துறை அவரது புகாரைப் பதியாமல் துரத்தி விட, இயலாமையின் உச்சத்தில் நீதிமன்ற வளாகத்தில் தனக்குத் தீயிட்டு மாய்த்துக் கொள்கிறார் குப்புசாமி. நீதிமன்றத்துக்குள் சென்று வாதிடாத, வீட்டினரால் மதிக்கப்படாத வக்கீலான சுந்தரமூர்த்தி, பொதுநலவழக்காகக் குப்புசாமியின் வழக்கைப் போடுகிறார். குப்புசாமி யார், வெண்ணிலாக்கு என்னானது என்ற கேள்விகளுக்குப் பதில் தேடியவண்ணம் பயணிக்கிறது சட்டமும் நீதியும் தொடர்.

சுந்தரமூர்த்தியின் உதவியாளர் அருணாவாக நடித்துள்ளார் நம்ரிதா. சுந்தரமூர்த்தியிடம் பரிந்துரைக் கடிதம் பெற்ற ஒரே காரணத்திற்காக, அருணாவை யாரும் உதவியாளராகச் சேர்த்துக் கொள்ள மறுக்கின்றனர். வெடுக்கென்ற நேர்கொண்ட பேச்சும், எதற்கும் அஞ்சாமல் விசாரணையை மேற்கொள்ள நினைக்கும் ஆர்வமும் கொண்டவராக உள்ளார் அருணா. வழக்கின் மீதான நம்பிக்கையை அவ்வப்போது சுந்தரமூர்த்தி இழந்தாலும், கடைசி வரை போராடிப் பார்க்கவேண்டுமெனத் துடிப்புடன் இருக்கிறார் அருணா. இந்தத் தொடரைச் சுவாரசியமாகத் தக்க வைப்பதற்கு உதவியுள்ளது நம்ரிதாவின் நடிப்பு.

இயலாமையில் புழுங்குவதாகட்டும், அதிலிருந்து மீண்டு தன்னை வழக்கிற்குள் ஈடுபடுத்திக் கொள்வதாகட்டும், அடுத்த நகர்வு என்னவென்று தெரியாமல் பரிதவிப்பதாகட்டும், மகனின் அலட்சியத்திற்கு முன் மெளனிப்பதாகட்டும், சக வக்கீல்கள் ஏளனம் செய்யும்போது அதைக் கடப்பதாகட்டும், சுந்தரமூர்த்தியாக நடித்துள்ள சரவணனின் அனுபவம் பளீச்சிடுகிறது.

குரலற்றவர்களைக் காவல்துறை நடத்தும் விதம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். மாற்றம் ஒன்றே மாறாத என்ற பழமொழி பொய்க்கும் இடங்களில் காவல்துறையின் அதிகாரத் திமிருக்கே முதலிடம் கிடைக்கும். சட்டம் நீதியைப் பெற்றுத் தரும் என்ற சன்னமான நம்பிக்கையில்தான் சமூகம் இயங்கிக் கொண்டுள்ளது. அந்த நம்பிக்கையில்தான் குப்புசாமி தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு வக்கீல் தன்னை நிரூபிக்கும் முயற்சியில் தான் குப்புசாமியின் புகாரின் மீது வெளிச்சம் விழுகிறதே அன்றி, ஓர் உயிர் நீதிமன்ற வளாகத்தில் போவதைப் பற்றி யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

சூரியபிரதாப் எழுத, பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார். சில சுவாரசியமான திருப்பங்கள் தொடரில் இருந்தாலும், நீதிக்காகப் போராடப்படும் ஒரு கோர்ட் டிராமாவாக முழுத் திருப்தியைத் தரவில்லை. சுபமான முடிவு நிறைவைத் தந்தாலும், வெண்ணிலாக்கு என்ன நடந்தது என்பதையே சஸ்பென்ஸாகக் கொண்டு போய் இறுதி அத்தியாயங்களில்தான் சொல்லப்படுவதால், எதற்கான நீதிப்போராட்டம் என்ற கேள்வியும் கடைசி அத்தியாயம் வரையிலுமே தொடர்கிறது.

குப்புசாமிக்கு நீதி கிடைக்க, சுந்தரமூர்த்தியின் ஈகோவைச் சீண்டி வினையாற்றிய சுந்தரமூர்த்தியின் மகன் செழியனாக நடித்துள்ள S.கோகுல்தான் இத்தொடரின் உண்மையான நாயகன்.