

BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் – மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை” ஆகும்.
மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது. வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் சசி, “பாபு விஜய் என்னிடம் வந்து ‘நான் ஒரு படம் இயக்கப் போகிறேன்’ என்று சொன்னபோது, முதலில் நான் ‘யார் தயாரிப்பாளர்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான்தான் சார் தயாரிப்பாளர்’ என்றார். அதைக் கேட்டவுடன் எனக்குக் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. முதல் படமே இயக்கி, அதையும் தானே தயாரிப்பது ஏன் இந்த அளவுக்குப் பெரிய பரீட்சை என்று தோன்றியது.
அவர் எத்தனை நாட்களில் படத்தை முடிப்பீர்கள் என்று சொன்னபோதும் எனக்கு ஒரு பயம் இருந்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு படத்தை எப்படி அந்த அளவுக்குத் தரமாக முடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் இன்று ட்ரெய்லர், பாடல்கள், அவற்றின் விஷுவல்ஸ் எல்லாம் பார்த்த பிறகு நான் உண்மையாகவே அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் இருக்கிறேன். ஒரு இயக்குநராக இதைப் பார்த்து மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவிற்குத்தான். ரிச்சர்ட் இல்லாமல் இந்த அளவுக்குக் குறுகிய காலத்தில் இவ்வளவு தரமான காட்சிகளை உருவாக்குவது சாத்தியமே இல்லை. அவருக்கு உண்மையாகவே ‘ஹாட்ஸ் ஆஃப்’. அதேபோல் கிரிஷின் இசையும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாகப் பாரதியார் பாடலில் ராப் கலந்த விதம் மிகவும் அருமையாக இருந்தது.
பாபு விஜய் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நான் பாஃப்டாவில் (BOFTA) வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் சில மாணவர்கள் மட்டும் தனியாகக் கவனிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் பாபு விஜய். அவர்கள் எக்ஸாம், டெஸ்ட்டுக்காக எடுத்த குறும்படங்களே, ‘இவர் யார்?’ என்று எங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துவிடும். அந்த மாதிரி நான் குறிப்பாக நினைவில் வைத்திருந்த மாணவர்தான் இவர்.
அவருடைய படம் எப்படி இருக்கும் என்று நான் மிகவும் ஆர்வமாகக் காத்திருந்தேன். அவர் ஒருமுறை இந்தக் கதையின் மையக் கருத்தை மட்டும் என்னிடம் சொன்னார். அது மிகவும் இயல்பான, நம்ம வாழ்க்கையில் நடந்திருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அந்த ஒரு கருத்தே இந்தப் படத்தை வெற்றிகரமான இடத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் அப்போதே நம்பினேன். மாணவராக இருந்தபோது பாபு விஜய் என்னிடம் எப்படி ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினாரோ, அதே எதிர்பார்ப்பை இந்த ட்ரெய்லரும் பாடல்களும் மீண்டும் கொடுத்திருக்கின்றன. ஜெய் சாரின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “பாபு விஜய் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடன் வேலை செய்த அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஒரு விஷயம் தெரியும் — ஆரம்பத்தில் வேலைக்கு அழைக்கும் போது நல்ல சம்பளம் பேசிவிடுவார். ஆனால் படம் முடியும் நேரத்தில் தான் புரியும்; அவர் எல்லோரிடமிருந்தும் மூன்று மடங்கு உழைப்பை வாங்கியிருப்பார். அது அவருடைய அர்ப்பணிப்பு.
ஒரு சுவாரசியமான சம்பவம் ஞாபகம் வருகிறது. ‘சர்கார்’ படத்தின் போது நடந்தது. படம் முடிந்த பிறகு ஒரு இன்டர்வியூ நிகழ்ச்சி நடந்தது. அதில் நான், ஹீரோயின் மற்றும் பழ.கருப்பையா சார் கலந்து கொண்டோம். அப்போது பழ.கருப்பையா சார் பாபு விஜயை அழைத்து, ‘எனக்கு அரசியல் மேடைகளில் பேசத் தெரியும். ஆனால் சினிமா இன்டர்வியூ கொடுக்கத் தெரியாது. என்ன பேசுவது?’ என்று கேட்டார்.
அதற்கு பாபு விஜய், ‘சார், நீங்கள் முதலில் இந்தப் படத்தில் நடிக்கப் பயந்தீர்கள். ‘நான் அரசியலில் இருக்கிறேன், வில்லன் கதாபாத்திரம் எப்படிச் செய்வது?’ என்று கேட்டீர்கள். அப்போது நான், ‘உங்கள் பேரப்பிள்ளைகளிடம் கேளுங்கள்’ என்றேன். அவர்கள் ‘விஜய் சார் படம் என்றால் கண்டிப்பாகச் செய்யுங்கள், நீங்கள் மக்களிடம் நன்றாக ரீச் ஆவீர்கள்’ என்று சொன்னார்கள். அதையே சொல்லுங்கள் சார்’ என்று கூறினார்.
எனக்கு மிகவும் கடினமான காலங்களில் பாபு விஜய் என்னுடன் இருந்திருக்கிறார். ஒரு படம் வெளியானபோது, போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு பெரிய பிரச்சனைகள் நடந்துகொண்டிருந்தன. போலீஸ் சூழ்ந்திருந்த சூழ்நிலையில், நாங்கள் இருவரும் டிண்டட் கிளாஸ் கொண்ட காரில் அமைதியாக உட்கார்ந்து காசி தியேட்டர் அருகே நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தோம். போஸ்டர்கள் கிழிக்கப்படுவதைப் பார்த்தபோது கண்களில் தண்ணீர் வந்தது. அந்த மாதிரி கடினமான நேரத்திலும் அவர் என்னுடன் இருந்தார்.
என்னிடம் இருந்து இதுவரை பன்னிரண்டு உதவி இயக்குநர்கள் இயக்குநர்களாகி இருக்கிறார்கள். அதில் இன்று பாபு விஜயின் முதல் படம் வெளிவருவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தினமும் காலையில் ஏழு, ஏழரை மணிக்கே காரில் கீழே நின்றுகொண்டிருப்பார். ரெடியாக எல்லா ரிஹர்சல்களையும் செய்து வைத்திருப்பார். அந்த அளவுக்கு உழைப்பாளி. என்னைக் கூட சோம்பேறியாக்கிய உதவி இயக்குநர்களில் முக்கியமானவர் பாபு விஜய். இன்று அவர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துவதல்ல, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஜெய் பற்றியும் சொல்ல வேண்டும். அவருடனும் எனக்கு ஒரு நல்ல கனெக்ஷன் இருக்கிறது. என் தயாரிப்பில் வந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ‘ராஜா ராணி’. இப்போது இது மூன்றாவது முக்கியமான கூட்டணி போல இருக்கிறது. இது ஹாட்ரிக் வெற்றியாக அமைய வேண்டும்.
ஜெய் மிகவும் நல்ல நடிகர். அவருடைய காமெடி டைமிங் அருமை. திரையில் மட்டுமல்ல, நேரில் பேசினாலும் அதே நகைச்சுவை உணர்வு இருக்கும்.
மீனாட்சி ஒரு கிளாசிக்கல் டான்சர். என் மகளும் அவரும் ஒரே குருவிடம் நடனம் கற்றவர்கள். அதனால் அவரை முன்பே பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் மிகவும் அழகாகவும் நன்றாகவும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநர் பாபு விஜய், “A.R. முருகதாஸ் சாரின் ‘சர்கார்’ படத்தில்தான் என் உதவி இயக்குநர் வாழ்க்கை ஆரம்பித்தது. இன்று சிஎம் விஜய் சாராக அவர் உயர்ந்திருக்கும் நேரத்தில், அவருடைய ‘சர்கார்’ காலத்தில், இன்று என் முதல் படம் வெளிவருகிறது. அதற்கான வாய்ப்பைக் கொடுத்த முருகதாஸ் சாருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நான் நன்றி சொல்கிறேன். இந்தப் படத்தில் விஜய் சார் ரெஃபரன்ஸ்கள் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மைதான். ஏனென்றால் நான் அவருடைய ரசிகன்” என்றார்.
ஜெய், “பொதுவாக என் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் என்னிடம் ‘உனக்கு பிடித்த இயக்குநர் யார்?’ என்று கேட்பார்கள். நான் எப்போதுமே ஒரே பெயரைத் தான் சொல்வேன் — முருகதாஸ் சார். பின்னாளில் அவர்கள் கூட ஆப்ஷன்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள் — மணிரத்னம் சார், ஷங்கர் சார், முருகதாஸ் சார்… யார் பிடிக்கும்? என்றாலும், நான் ‘முருகதாஸ் சார் தான்’ என்பேன்.
ஏனென்றால் அவருடைய படங்களையும், அவருடைய கேரக்டரையும், பேசும் விதத்தையும் நான் அந்த அளவுக்கு ரசித்திருக்கிறேன். அவருக்கே தெரியாமல் நிறைய விஷயங்களை நான் அவரிடமிருந்து ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். ஒரு விஷயத்தை மிகவும் இனிமையாக, சரியாகப் புரியும்படிச் சொல்வார்.
ஒருநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் வாழ்க்கையில் நான் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன்.‘ஷூட்டிங் டைம்ல மட்டும் கொஞ்சம் சீக்கிரம் தூங்குங்க. லேட்டா தூங்கினா டார்க் சர்கிள்ஸ் வரும். அதை மறைக்க மேக்கப் போடுவாங்க. அந்த மேக்கப்புக்கு கேமராமேன் லைட்டிங் மாற்றணும். அதனால் உங்க ஒரு சின்ன தூக்கமின்மை பின்னாடி நிறைய பேரோட வேலையைப் பாதிக்கும்’ என்றார்.
அது எனக்குப் பெரிய பாடம் தந்தது. அன்றிலிருந்து இன்று வரை நான் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறேன். இன்னைக்கும் மறுநாள் காலை ஷூட்டிங் என்றால் இரவு 10:30 ஆனாலே முருகதாஸ் சார் ஞாபகம் வந்துவிடுவார். அந்த ஒரு பழக்கம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் செய்தது.
இயக்குநர் பாபு விஜய், கதை சொன்ன உடனே எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் அவர் முழுக்க ஒரு பேக்கேஜாக இந்தப் படத்தை யோசித்திருந்தார். முதல் பாதியில் கொஞ்சம் விஜய் சார் ஃபேன் மொமெண்ட்ஸ் இருக்கும். உடல் மொழி, டயலாக் டெலிவரி — அந்தச் சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் கதை முழுக்க வேறு ஒரு இம்பாக்ட்டுக்கு போய்விடும்.
அது ஒரு முதல் இயக்குநருக்கு ரொம்ப சவாலான ஸ்கிரிப்ட். அவர் நினைத்திருந்தால் சாதாரண கமர்ஷியல் பாதைக்கு போயிருக்கலாம். ஆனால் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார். அதனால் இந்தப் படத்தை நீங்கள் திரையரங்கில் பார்த்தால் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.


