Shadow

சீமத்துரை விமர்சனம்

Seemathurai-movie-review

சீமை – அரசர் ஆண்ட நிலப்பகுதி அல்லது வெளிநாடு என இரு வேறு பொருளைக் கொள்ளலாம்; துரை – இந்தியாவில் வசித்த ஐரோப்பியர்களைக் குறிக்கும் சொல். ஆக, சீமைத்துரை என்றால் அதிகாரத் தோரணை மிகுந்த நடத்தையை உடையவர் எனப் பொருள் கொள்ளலாம். நாயகன் அப்படிப்பட்ட குணவார்ப்பு உடையவரெல்லாம் இல்லை. ஆனால், அவரது அம்மாவிற்கு தன் மகன் சீமத்துரை என்ற நினைப்பு.

ஊரில் ஏதாவது உரண்டையை இழுத்துவிடும் கல்லூரி மாணவன் மருது. அவனுக்குப் பூரணியைக் கண்டதுமே முதல் பார்வையில் காதல் வருகிறது. அந்தக் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

’96 படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக வரும் வர்ஷா பொல்லம்மா தான் படத்தின் நாயகி. அப்பாவின் அன்புக்கும், மருதுவின் காதலுக்கும் இடையில் தவிக்கும், பூரணி எனும் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். அவரது பெரிய கண்களுக்கு மட்டும் க்ளோஸ்-அப் வைத்துள்ளார் திருஞானசம்பந்தம். கண்களால் தன் உணர்வுகளைப் பிரதிபலிக்க வல்லவராய் இருந்தாலும், ’96 அளவுக்கு இவரது க்யூட்னஸை அதிகப்படுத்தும்படியான காட்சிகள் இல்லாதது குறை.

மருதுவாக கீதன் நடித்துள்ளார். நம்மில் ஒருவராகவும், அன்றாடம் பார்க்கும் முகங்களில் ஒருவராகவும் ரசிக்க வைக்கிறார். ஆனால், திட்டவட்டமான பாத்திர வடிவமைப்பு இல்லாததால், மனதில் பதிய மறுக்கிறார். படத்தின் ஆகப் பெரிய பலவீனமே இதுதான். பலமுறை பார்த்துப் பழகிய கதையை, எந்த சுவாரசிய கூட்டுதலும் இன்றி, தன் பங்குக்கு ஒருமுறை சொல்லியுள்ளார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

மருதுவின் அம்மா செல்லத்தாயியாக விஜி சந்திரசேகர் நடித்துள்ளார். அவரது நடிப்பில் அனுபவம் மிளிர்ந்தாலும், அதற்கு தீனி போடும் காட்சிகள் படத்தில் இல்லை. கதாநாயகியின் மாமாவாக நடித்திருக்கும் காசிராஜன், அந்தப் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது முகபாவனையும் உடல்மொழியும், க்ளிஷேவான கதாப்பாத்திரத்தையும் ரசிக்கும்படி செய்துள்ளன.

நாயகனின் நண்பர்களாக மகேந்திரனும், கயல் வின்சென்ட்டும் வந்தாலும், டீக்கடைக்காரராக வரும் பொரி உருண்டை சுரேஷ் அவர்களைக் காட்டிலும் மனதில் பதிகிறார். எனினும் இயல்பான நகைச்சுவைக் காட்சிகளாகக் கதையோடு பொருந்து வராமல், அவையும் தனித்தனி சீன்களாகத் திணிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு நேரும் சின்ன அவமானம் எத்தகைய பாதிப்புகளை விளைவிக்கும் என்பதைப் படம் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், அதை ஜீரணிக்க முடியாத அளவுக்கும், பார்வையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் தரவேண்டும் என்பதற்காகவே வைத்தது போலுள்ளது.